புதன், 30 டிசம்பர், 2009

பறத்தலை பற்றிய ஆர்வத்துடனும் கனவுகளோடும்
நாங்கள்....

மற்றவைகள் பறக்கும் முயற்சிகளில்....கனவுகள் துணை
கொண்டு உயரே பறக்கிறேன்..

ஆசைகளனைத்தும் மேகக்கூட்டமாய் மேலே...அள்ளி
பருகும் ஆவலுடன் நான்...

எதோ ஒரு உறுத்தலில் கடந்து வந்த உயரத்தை காண
நேர்ந்த போது

கனவுகளின் துணை கொண்டு ஏக்கங்களின் வெளிப்பாடாக
எட்டப் பட்ட உயரம்..

கனவுகளின் மேல் கோபம் கொள்கிறது தன்னம்பிக்கை.....
சிறகொடிந்து தரையில் நான்...

காமம் பருகி கை விட்டு செல்லும் காதலிகள்...நேற்று வரை
வேலையற்று

இன்று வேலையிலிருக்கும் நண்பனின் பாசமிகு
அறிவுரைகள்...

பார்வைகள் கேள்விகள் கேலிகள்..துளைத்து தூவம்சித்து கள்(கல்)
எறியும் சமுதாயம்...

இம்முறை நம்பிக்கை துணை கொண்டு பறக்க எத்தனிக்கிறேன்
பலமடைந்த சிறகோடு...

பறத்தலின் அவசியமும் கனவுகளின் நிதர்சனமும் புரிந்து....அடுத்த
நொடி நோக்கி பறக்கிறேன்.......

நம்பிக்கையோடு.

திங்கள், 21 டிசம்பர், 2009

அம்பாசமுத்திரமும் ஒரு ஆரிய , திராவிட காதலும்....!

அது 1920 களின் மத்தி.....அம்பாசமுத்திரம் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பின் திருவனந்தபுறம் சமஸ்தானத்திற்குட்பட்டு இருந்த காலம்...ஆக்ராகரங்களும், நிறைய விளைநிலங்களும்.......அதையொட்டிய சேரி பகுதிகளும் ........என்று ஒரு கட்டமைப்பை கொண்டிருந்தது அப்போதைய அம்பாசமுத்திரம். ஐயங்கார், பிள்ளைமார், தேவர், மற்றும் தலித் மக்கள் பரவியிருந்தனர் அம்பையின் சுற்றுவட்டத்தில்....அங்கிருந்த பெரும்பாலான விளை நிலங்கள் ஐயன்கார்களிடமும் பிள்ளை சமூகத்திடமும் மீதி உள்ள நிலங்கள் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் சொந்தமாக இருந்தது...

தேவரினத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நிலங்களை நிர்வகிப்பவர்களாக இருந்தார்கள்....அங்குள்ள தலித் மக்கள் அனைவரும் விவசாய கூலிகளாக இருந்தார்கள்....மேலோட்டமாக பார்க்கும் போது அடக்கு முறை அதிகமாக தென்படுவதை போல் ஒரு பிம்பம் இருந்தாலும்..நெல்லை சீமையை பொறுத்த வரை தொழில் ரீதியாக ஒருவருக்கொருவர் இணைந்து இருக்க வேண்டிய சூழ்நிலை.......குறிப்பாக தலித் விவசாய கூலிகள்..அவர்களை நிர்வகிப்பவர்களாக தேவரினத்தை சேர்ந்தவர்கள்.....

அம்பாசமுத்திரத்தை பொறுத்த வரை தலித் கூலிகள் அனைவரும் அங்குள்ள விளை நிலங்களை சுற்றியே குடியேறியிருந்தனர்...அவர்கள் மாற்றுடை இல்லாவிடிலும் நிதமும் இரு வேளை குளிக்க பழகியிருந்தனர்....தேகத்திலும் தலை மயிரிலும் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொண்டனர்....வேப்பங்குச்சியில் பல் துலக்கவும் கற்றிருந்தனர்..! மேற்சொன்ன விடயங்களெல்லாம் ஒரு சராசரி தலித் செய்ய மாட்டான் என்பதே பொதுவாக ஆதிக்க வர்க்கத்தின் பார்வையாக இருந்தது......விளை நிலங்களை ஒட்டியே கிளை ஆறுகள் பாசனத்திற்காக ஓடும்....ஆக அங்குள்ள தலித்களுக்கு பொது தண்ணீர் என்ற பிரச்சனை எழவில்லை...

அம்பாசமுத்திரத்தின் ஒரு ஓரம் உள்ள பகுதிதான் தலித் மக்கள் வாழும் முடப்பாலம்....அங்கே உள்ள விவசாய கூலிகளில் ஒருவன்தான் செல்லையா...பொதுவாக அந்த பகுதியில் உள்ள தலித் இளைஞர்களெல்லாம் கடும் உழைப்பும் அதற்கேற்ற வாறு உணவு உட்கொள்ளும் பழக்கம் கொண்டதால் கட்டுடல்களையும் வலுவான கைகளும் கொண்டிருந்தனர்....இளவட்டக் கல் இன்றும் முடப்பாலத்தில் இருக்கிறது......



செல்லையாவும் அதில் விலக்கல்ல....களையான முகவெட்டும் பணிவான பேசும் குணமும்....மாநிறம் உடையவன் தான் செல்லையா.....அதிக அளவில் விளைநிலங்களை உடைய ஐயங்கார் மட்டுமே நில நிர்வகிர்ப்பிர்க்கு தேவர்களை நியமித்தனர்..ஓரளவு நிலம் உடைய ஐயங்கார் நிலசுவான்கலேல்லாம் நேரிடையாக முடப்பால இளைஞர்களிடமே தங்கள் நிலத்தை ஒப்படைத்து பண்ணையம் செய்து வந்தனர்....அந்த தலித் இளைஞர்களும் மிகுந்த பயபக்தியுடனும் விசுவாசத்துடனும் நடந்து கொண்டனர் தங்கள் எஜமானர்களுக்கு.......... இப்படி நேரிடையாக விவசாயம் செய்து வந்த தலித் இளைஞர்கள் ஆக்ராகாரத்தினுள் சிறப்பு அனுமதி பெற்றிருந்தனர்...சில கட்டுப்பாடுகளோடு.......கால்களில் செருப்பு அணிய கூடாது......மற்றும் மேலாடை அல்லது தோள்களில் துண்டு அணியக் கூடாது....இடுப்பில் இருந்து முட்டு வரை இறுக்கிக் கட்டிய வேட்டியுடன் அகன்ற மார்புகளுடனும் இந்த தலித் இளைஞர்கள் அக்ராகரத்தினுள் செல்லும்போது அங்கு பெண்கள் பெரும்பாலும் வெளியில் நிற்ப்பதில்லை.....ஆனால் மாடியில்ருந்து நிறைய மான்விழிகள் ரசித்தவண்ணம் இருந்தன........இந்த இளைஞர்கள் ஐயங்கார் ஆண்களை சாமி என்றும்....அந்த வீட்டு பெண்களை தாயி என்றும் அழைத்தனர்....



சிறப்பு அனுமதி பெற்ற முடப்பாலத்து இளைஞர் பட்டாளத்தில் செல்லையாவும் ஒருவன்...செல்லையா நன்றாக பாட்டு பாடும் திறனும் பெற்றிருந்தான்....வயல் வேலை முடிந்ததும் குளித்து விட்டு, இறக்கிய கள்ளை குடித்து பாட்டு பாடி மகிழ்வது அங்குள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு...


செல்லையாவின் எஜமானருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே........தெய்வானை என்ற பெயர்.....தேவதை போலிருப்பவள் அவள்......நாட்டியமும் வாய்ப்பாட்டும் தேர்ச்சி பெற்றிருந்தாள்....செல்லையாவை விட ஐந்து வயது சிறியவள் அவள்.......செல்லையாவின் விசுவாசம் ரொம்பவே அந்த எஜமானரை கவர தொடர்ந்து அவனே அவர் வயல்களை பார்த்துக் கொண்டான்.....எஜமானரின் வீட்டின் பின்புறம் ஒரு அறையில் ஐயங்கார் வீட்டு சாதமும் பரிமாறப்பட்டது அவனுக்கு.....அந்த வீட்டு பெண்களை முகம் பார்த்து பேசும் அளவிற்கு உரிமை பெற்றிருந்தான் செல்லையா......வகைதொகை இல்லாமல் ஊளைச்சதயுடன் அமைப்பற்ற தேகம்கொண்டும்...கல்வி கற்ற செருக்கில் சம்ப்ரதாய முறைப்படி நடந்து கொண்ட ஐயங்கார் வீட்டு இளைஞர்கள் மத்தியில் கட்டுடலுடன் மாநிறமான ஒருவன் எண்ணெய் வழியும் முகத்துடன் நாட்டுபுற பாட்டு பாடி காண்பிப்பதை தெய்வானை மிகவும் ரசித்தாள்.......அவளையுமறியாமல் செல்லையாவின் மேல் ஒரு ஈடுபாடு வந்திருந்தது....

அதன்பிறகான நாட்களில் செல்லையா அக்ராகரத்தில் நுழையும்போதே தண்ணீர் செம்புடன் காத்திருப்பாள் தெய்வானை.....வீட்டின் பின்புறம் அவன் வந்ததும் அவள் தண்ணீர் ஊற்ற தன் கைகளை குழிவு செய்து அதில் தண்ணீர் நிரம்ப பருகினான் செல்லையா.....நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதிலிருந்து அவர்கள் வீட்டு மாடுகளை மேய்த்து பின்பு தொழுவத்தில் கட்டுவது என பெரும்பாலும் செல்லையாவின் நேரம் தெய்வானை வீட்டிலேயே கழிந்தது.....இப்டியான காலத்தில்தான் தெய்வானைக்கு விவாகம் நடத்த பேச்சு நடக்க ஆரம்பித்தது அவர்கள் வீட்டில்...ஆழ்வார் திருநகரியில் உள்ள அவர்கள் சொந்த கார மாப்பிளை பேசி முடித்திருந்தனர்...
அடுத்தடுத்த நாட்களில் தெய்வானை முகம் கருப்பதை கண்ட செல்லையா ஒரு மாலை பொழுதில் காரணம் கேட்க......கதறி அழுத தெய்வானை செல்லையாவை நேசிப்பதை சொன்ன உடன்.....நொறுங்கிப் போனான் செல்லையா.....பதிலற்று போன செல்லையா பின்பு நிதானமாக தெயவானயிடம் இப்படி சொன்னான்.....நீங்கல்லாம் நாங்க கும்புட்ற சாமிக்கு சமம்.....சாமிய எப்டி ஒரு மனுஷன் கல்யாணம் பண்ண முடியும்?? அப்டி ஒரு எண்ணமே எவ்வளவு பெரிய பாவம். என்று சொன்ன செல்லையா உடனே வீடு திரும்பி படுத்துக் கிடந்தான்.....அடுத்த நாள் அங்கு செல்வதை பற்றி மிகுந்த யோசனை கொண்ட செல்லையா இறுதியாக போக முடிவெடுத்தான்...

அங்கு சென்ற பொழுது எஜமானரும் அவரின் துணைவியாரும் திருமணம் சம்மந்தமாக வேலைகளுக்கு வெளியில் சென்றிருந்தனர்....தெய்வானைக்கு துணையாக ஒரு வயதான பாட்டி மட்டும்...செல்லையாவை கண்ட தெய்வானை ஒரு முடிவுக்கு வந்தவளாக தனது துணிமணிகளை ஒரு சேலையில் கட்டி கொண்டு கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்.........என்னை மனம் செய்துகொள் என்று செல்லையாவிடம் தெய்வானை கேட்ட பொழுது, அவளின் கால்களில் விழுந்து விட்டான் செல்லையா.... ..
விஷயத்தை செல்லையா தன் தகப்பன் கசமாடனிடம் சொல்ல கலவரமான கசமாடன்....மூட்டை முடிச்சிகளுடன் செல்லையாவை பாபநாச மலை வழியே கேரளம் செல்லும் வழியின் ஊடாக கேரளம் அனுப்பி வைத்தான்....,,,கசமாடனே அதற்குபிறகு தேவானையின் வீட்டு வயல்களை பார்த்து கொண்டார்...தெய்வானைக்கு நிச்சயித்த மாப்பிள்லையுடனே விவாகம் நடந்தேறியது.........நான்கு வருடம் கழித்து கேரளத்தில் இருந்து வந்த செல்லயாவிர்க்கு 25 வயதில் தன்னுடைய தாய்மாமன் பெண்ணையே மனம் முடித்து கொண்டான்..

(2006 இல் ஜூலை மாதத்தில் தன்னுடைய 96 வயதில் இறந்துபோனார் என்னுடைய பாட்டன் செல்லையா, அந்த ஆரிய பெண்ணின் காதலுக்கு விடை சொல்லாமலே....)

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வரையறைக்குள் வாராத கவிதைகள்????

காலி மது கோப்பைகளும், சுவைத்தது போக மீதங்களுடன் கங்காக கனன்று கொண்டிருக்கும் கஞ்சாவும்......என் அறையில் தனியாக நான்....இதை தனிமை என்று நான் நினைக்கவில்லை.......மதுவும், சிவ பானமும்(கஞ்சா) என்னை அந்த சூழ்நிலையை ரம்மியமாக அனுபவிக்க கற்று கொடுத்திருக்கின்றது.......இதன் காரணமாகவே அலுவலகங்களில் வார இறுதியில் நடக்கும் கேளிக்கை விருந்தில் பங்கேற்க மாட்டேன் ஹைதராபாத் போன புதிதில்..

கொச்சியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் சொராய் கடற்க்கரை விடுதியில் ஆடைகளற்று நாங்கள் -நான், அவள். என் மார்பில் முகம் புதைத்த வாறு அவள்...
நெஞ்சில முடி இருந்த எனக்கு ரொம்ப பிடிக்கும்டா....உனக்கு ஏன் இல்லை???
கேரளா பெண்கள் தமிழ் பேசுவது தேவதைகள் நேரிலே வந்து பேசுவது போலிருக்கும்.இவள் பார்க்கவே தேவதை போலிருப்பாள்.பேசுவதும் அப்படியே... ஒரு நண்பியின் மூலம் அறிமுகம் இவள்...ஜிஷா என்றால் தேவதையின் குழந்தை என்று அர்தம் சொல்வாள்....உண்மையாகவே இருக்க வேண்டும்...ஆனால் தான் பேரழகி என்பதில் மிக அதிக கர்வம் கொள்வாள்....
பால்ய வயதில் தேவதைகளை துரத்தியலைந்ததால் அந்த கர்வம் எனக்கு இயல்பாகவே பட்டது......
விடை பெரும் தருவாயில் நேரிலோ அல்லது தொலை பேசியிலோ நான் கொடுக்கும் முத்தத்தை சிலாகித்து கொண்டாடுவாள்......
நீ ஒரு மந்திரவாதி என்பாள்.........
நான் - ஏன் ??
ஆயிரம் மைல்கப்பால் இருந்து கொடுக்கும் முத்தம் இவ்வளவு வேதியல் மாற்றங்களை உடலில் செய்ய முடியுமா என்பாள்.......
பெரிமிதமாய் உணர்ந்த பொழுதுகள் அவை.......
முத்தங்களுக்கும் அகராதி வைத்திருந்தாள் அவள்.....நெற்றியில் இட்டால் முயல் முத்தம்..கன்னத்தில் இட்டால் மான் முத்தம்.......காமத்தின் ஆரம்பமாக சூடேறிய மூச்சு காற்றுடன் முன் கழுத்தில் இடும் முத்தத்திற்கு புலி முத்தம்....
எதிர்பாரா தருணத்தில் அவள் உதடு பிரித்து கடித்து சுவைக்கும் முத்தத்திற்கு கொக்காயி முத்தம் என்பாள் ............(கொக்காயி- பேய் என்று அர்த்தமாம் மலையாளத்தில்)

இதுதான் காதல் என்று உணர்ந்து அந்த உணர்வைக் கண்டு ஆச்சரியமுற்ற தருணங்கள், பொழுதுகள் அவை......உனது காலை சுற்றி வரும் பூனைக்குட்டி நான் என்று அவள் சொல்லும்போதெல்லாம் ..காதல் மீறி என்னுள் அகங்காரம் பெரும் ஆண்மையை ரசித்தேன்.......

மற்ற சராசரி காதலனை போல கட்டளைகள் இடும் காதலனாக நான் இருக்கவில்லை...அப்படி இருக்க விரும்பவும் இல்லை....அவள் அவளாகவே தான் இருந்தாள்..நான் நானாக.........
காதலர் தினத்தில் அவள் அலுவலக காபினில் குவியும் வாழ்த்து அட்டைகளையும் காதல் தூது தாங்கி வரும் பூங்கொத்துக்களையும் கணக்கெடுத்து கர்வத்துடன் தெரிவிப்பாள் என்னிடம்.......
தேவதைகளை அடைய சாத்தான்கள் சண்டை போடும் எப்போதும் என்பேன்..........நீ கொடுத்து வைத்தவன் என்பாள்......

அன்பின் ஊடாக வீசும் மாய அடிமை வலையோ இது வென்று யோசிக்க வைத்த நிகழ்வுகள் அது...

மாற்றங்கள் தென்பட்டன அவளிடம்...நாட்கள் மாதங்களாகி வருடமான பொழுது....பார்க்காமல் பேசாமல் இருந்தால் மரணம் தொடுவேன் என்று மிரட்டியவள் , மறந்து போனாளோ அவள் மிரட்டலையே???
எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரே ஒருவன் மட்டுமே.அது அவளுடைய நண்பன் விஜய்.....எங்களுக்குள்ளான சில ஊடல் பொழுதுகளில் சமரச படுத்தியவன் அவன்...
தொலை பேசியிலும் மின் மடல்களிலும் பதிலற்ற நிராகரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்க...நேரில் கொச்சி சென்றேன்....
தானே தனது காரை ஒட்டிக் கொண்டு மரைன் டிரைவ் வந்தாள்...
கண்கள் பார்க்காமல் பேசினாள்.....சிறிது நேரங்கழித்து இன்னொரு காரில் வந்த ஒருவன் ஹாய் சொல்லியபடி எங்களை நோக்கி......
தன்னுடைய ப்ராஜெக்ட் மேனேஜர் புருஷோத்தமன் என்று அறிமுகம் செய்தாள்.... என் கண்கள் பார்த்து அவனிடம் காதல் வயபட்டிருப்பதாக சொன்னாள்
நீ வேசி மகள் என்றேன் சப்தமாக.....கிளம்பி சென்று விட்டாள்...கொலை செய்ய வேண்டும் போலிருந்தது அவளை..கொடூரமாக ஏமாற்ற பட்டதை போல் உணர்ந்தேன்....
வலி தாங்கி, மாற்றம் வந்து நான் ஹைதராபாத் சென்று விட்டேன்...(முதற் பத்தியை மறுபடியும் ஒரு முறை படித்து பாருங்கள் ) ஆறிய தழும்பாக இந்நினைவுகள்....யோசிக்க வைக்கும் சில சமயம்....
பிடிக்கவில்லை என்று கணவனும் மனைவியும் பிரிந்து செல்லும்போது.......வேறு காதல் தோன்றியிருக்கிறது என்று நேரிடையாக கேட்ட அவளை இந்தளவிற்கு வெறுக்க எது என்னை தூண்டியது என்று ......
எனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாட அவள் உயிரற்ற பொருள் இல்லை.....ரத்தமும் சதையும் பூட்டிய உயிர் அவள்....காதல் என்பதற்கு வெளிப்படையான மற்றும் மாற்று கருத்துக்களை விதைத்து சென்றவள் அவள்.....





இப்பொழுதும் கடற்கரை.....சென்னையில்....தோள்களில் சாய்ந்தபடிக்கு இருக்கும் பிரபா....
அடுத்த வாரம் காரைக்குடி போறேன் -அவள்
இப்போதானே அப்பாவ அம்மாவையும் பாத்துட்டு வந்தே.....அதுக்குள்ள என்ன??? - நான்

என்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றாள்....
என்னை கல்யாணம் செஞ்சிக்கொயேன் என்றதற்கு .பலமாக சிரித்தாள்.......
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா..ஆனா எங்க வீட்ல உள்ளவங்களுக்கு எங்க ஜாதி மட்டும் தாண்டா பிடிக்கும் என்றாள்....

இறுக்கி அனைத்து அவள் உதடுகளை கவ்விக் கொள்கிறேன்....

செவ்வாய், 8 டிசம்பர், 2009

நிழற்பெண்..

இணையத்தில் இனிதான தொடக்கம் நமது
நட்பு
முகம் கானா உறவில் தோன்றும் அதே குறுகுறுப்பு இங்கும்

உன்னுடைய சக தோழர்களில் ஒருவனாகவே என்னை பார்க்கிறாய்
எனக்கோ
கிடைப்பதற் அறிய நட்பு கிடைத்தது போல்

உனக்கான உன் நேரங்களை உணதனுமதியின்றி
எடுக்கிறேன்
உனது சுதந்திரம் பறிபோகும் என்பதனையரியாமல்

எனக்கென ஒரு தனியிடம் உன் மனதில் உண்டென
எண்ணத்துடன் நான்
இனைய நட்பு இணையத்தோடு மட்டுமே இது நீ

தவிப்புடன் மின் மடல் இடுகிறேன்..பதிலனுப்பாமல்
நிராகரிக்கிறாய்
சிறிய இடைவெளி கலந்த உறவுகளே மெருகேறும் என்று எனக்குனர்த்தவா???


குறிப்பு: இது கவிதைன்னு நானே நினைக்கல....அதனால படிச்சிட்டு பிடிச்சா தட்டி குடுங்க....பிடிக்கலேன்னா ரெண்டு குத்து விடுங்க....! :-) :-) :-)

பணக்கார ஜனநாயகம்...!

நக்சலைட்டுகள் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக பெரிய முட்டுகட்டைகள்...ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள்....அவர்கள் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்கள்......இப்படி எல்லாம் சொல்வது பாரத பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரமும். இந்த கருத்துக்களுக்கு பெரும்பான்மையான வட இந்திய ஊடகங்கள் எண்ணெய் ஊற்றுகின்றன.

நக்சலைட்டுகள் யார். எப்படி அவர்கள் உருவானார்கள். என்ன காரணத்திற்க்காக ஆயுதம் ஏந்தினார்கள். பிரச்னை இதுதான்.முன் சொன்ன கேள்விகளுக்கு ஒரு தெளிவான பதில் அரசிடமும் இல்லை...இறையாண்மை காக்கும் அறிவு ஜீவி அதிகார வர்க்கத்திடமும் இல்லை. சுதந்திரத்திற்கு பிறகான காலத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளும் வர்க்க பிரிவினையும் தீர்க்க படாமல் எண்ணெய் இட்டு ஊற்றி வளர்க்க முற்ப்பட்ட நிலச் சுவாந்தார்களினாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அரசாங்கத்தினாலும் உருவானவர்களே நக்சலைட்டுகள்..

அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறார்கள் இந்த பாட்டாளி வர்க்கத்தின் போராளிகள்....இடையில் நிறைய கருத்து பேதங்கள் மற்றும் கொள்கை சார் மாற்று கருத்துக்கள் கொண்டதாலும் சில குழுக்கள் ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தன....அப்படி தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிதிகளாலும் பெரிய சாதனை எதுவும் செய்ய இயலாமலே போனது...காரணம் ஆதிக்க சக்திகள் அரசாங்கங்களின் இண்டு இடுக்கு வரை செலுத்திய அதிகாரமே.

நக்சலைட்டுகளின் கால்கள் வலுவாக ஊன்ற பட்ட மாநிலங்களை எல்லாம் கணக்கில் கொண்டாலே உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும் தெளிவாக...அது வேறொன்றும் இல்லை...அடித் தட்டு மக்களான தலித்துகள் மற்றும் பழங்குடியினர், விவசாயிகள் நிரம்பிய ஆனால் வளர்ச்சி குன்றிய மாநிலங்களாகவே இருக்கும்.
ஆந்திராவில் தொடங்கும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து மராட்டியம், ஜார்கண்டு, அஸ்ஸாம், பீகார்,ஒரிசா மற்றும் உத்திரப்ரதேசத்தின் சில பகுதிகள் வரை நீள்கிறது..

ஏறத்தாள நார்ப்பதிர்க்கும் அதிகமான மாவட்டங்கள் முழுமையாக நக்சலைட்டுகளின் பிடியில் இருக்கிறது..சுருக்கமாக இப்படி சொல்லலாம்...இந்திய அரசாங்கதிர்க்குள் ஒரு குட்டி அரசாங்கம். நக்சலைட்டுகள் எதற்க்காக இப்படி அரசாங்கத்தை மூர்க்க தனமாக எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால்.....பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் வாழ்வாதாரமான நிலங்களை வரைமுறையன்றி ஆக்கிரமிக்கிறது அரசு...அவர்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்க்காக இது வரை அரசு செய்ததென்ன என்று பார்க்கும் போது நமக்கே வேதனை தான் மிஞ்சும். ஆக்கிரமித்த நிலங்களுக்கு உரிய தொகை கூட தராமல் ஏமாற்றுகிறது அரசாங்கம்...மேலும் காடுகளை நம்பியே வாழ்க்கை நடத்திய பலன்குடியினரை காட்டை விட்டு விரட்டி விட்டு, பன்னாட்டு கம்பனிகளுக்கு அந்த நிலங்களை தாரை வார்த்து கால் நக்கி விட தயாராகிறது அரசு...

பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளான மக்கள் தங்களின் காவலர்களாக பார்ப்பது நக்சலைட்டுகளை மட்டுமே...யோசித்து பார்க்கும் போது ஒன்று புரியும்..மக்களின் ஆதரவின்றி மத்திய இந்தியாவை தங்களின் கைக்குள் வைத்திருப்பது இயலாத காரணம்...அந்த பிடி இன்னும் இன்னும் இறுகிக் கொண்டிருப்பதற்கு காரணமே அரசாங்கம் தான்....அவர்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் வளர்ச்சிக்கு வித்திடாமல் நிலத்தை மட்டும் அபகரித்து கொள்ள முயல்கிறது அரசாங்கம்....சுருக்கமாக சொன்னால் ஜனநாயக போர்வைக்குள் ஒரு ரத்த வெறி மற்றும் பண வெறி பிடித்த சர்வாதிகாரம் கொண்ட இந்திய அரசின் கோரை பற்கள் தெரியும்...மக்களின் ஆதரவை கண்ட அரசாங்கம் இப்போது புதிதாக குண்டர் படை ஒன்றை அமைத்து நக்சளைட்டுகளுக்கேதிராக போரிட வைக்கிறது....இதில் உறுப்பினர்கள் அனைவரும் கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள்...

வல்லரசு என்று சொன்னால் தான் மக்கள் மட்டுமின்றி தான் பிராந்திய மக்கள் நலனையும் முன்னெடுக்கும் நாடே வல்லரசாகும்.... தன் பிராந்தியத்தையே காக்க முடியாமல்....இன்னொரு குட்டி அரசாங்கத்திடம் போரிட்டு கொண்டிருக்கும் இந்தியாவை வல்லரசு என்று வடக்கு ஊடகங்கள் கொண்டாடுகின்றன.......இறையாண்மைக்கு குந்தகம் என்றால் சிலிர்த்தெழும் மேனன்களும் நாயர்களும் நம்பியார்களும்.....பன்னாட்டு நிறுவனகள் என்றால் கோமணத்தையும் பறக்க விட்டு விட்டு....பொத்த வேண்டியதை பொத்தி கொள்வார்கள்......வடக்கில் அரசிடம் பிடிபடும் நக்சலைட்டுகள் விசாரிக்க இந்திய ராணுவம் கொண்டுள்ள விசாரணை கூடம் இலங்கையில் உள்ள சித்ரவதை கூடங்களை விட கொடியது , மோசமானது.....உலகின் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் அங்கு நடத்த படுகிறது...ஆனால் இது வடக்கின் ஊடகங்களுக்கு தெரியாது........தெரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள்......ஏனென்றால் ஊடகங்கள் அனைத்தும் இந்திய அரசின் வீட்டு நாய்கள்.....அவர்களின் கொள்கை பிரசார பீரங்கிகள்....


இறுதியாக....இலங்கையில் அழித்ததை போலவே இங்கும் கூட்டம் கூட்டமாக மக்களை அழித்து நிலங்களை கை பற்றி பன்னாட்டு நிறுவனங்களை குளிரூட்ட அரசாங்கம் முடிவெடுக்கும் என்றே தோன்றுகிறது.......இந்த மாத காலசுவட்டின் மைய கட்டுரையே இந்திய அரசானது நக்சல்கள் மீது தொடுக்க போகும் போரை பற்றியே பேசுகிறது...வர்க்க போராட்டங்கள் ஆயுத பலம் கொண்டு அழிக்கப் பட்டதாக சரித்திரம் எங்கும் இல்லை....அப்படி சரித்திரம் படைக்க இந்திய அரசு எண்ணினால் அதற்க்கு இந்திய அரசு மிக பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும்......அதன் தாக்கத்தை தாங்க இந்திய அரசால் கண்டிப்பாக இயலாது.

சனி, 5 டிசம்பர், 2009

மாவீரன் (கடவுள்) அம்பேத்கர்...!

ஒட்டுமொத்த இந்தியாவின் ஜன தொகையில், நாற்பது சதவிகித மக்களின் எழுச்சி நாயகன்...ரட்சகன்...மற்றும் விடுதலை வீரன் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு நாள் நாளை.

ஆதிக்க சாதி இந்துக்களின் பரம எதிரியாக மேலேறி நெஞ்சை நிமிர்த்தி போராடிய புரட்சிக் காரன்........மிருகங்களை நடத்தும் விதத்தை விடவும் மிக கேவலமான முறையில் ஒரு சாரர் மக்களை மற்றோர் இனம் ...ஆயிரம் ஆண்டிற்கு மேலாகவும் அடக்கி வைத்து வதைத்த போது, தோன்றிய பல புரட்சி காரர்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டு...அவர்களின் சுவடு கூட மற்ற சந்ததியினருக்கு தெரியா வண்ணம் பார்த்து கொண்டனர் ஆதிக்க இந்துக்கள்...நாளா வட்டத்தில் நமது பிறப்பும் வாழ்வும் இப்படி மட்டுமே இருக்கும் என்னும்படியாக முதுகேலும்பற்று அந்த இனம் கூனி போனது....

தாழ்த்த பட்டவர்கள்...தீண்டத்தகாதவர்கள் என்ற அடைமொழியைச் சுமந்த அவ்வின மக்களை கண்களால் காண்பதை கூட வெறுத்தனர் ஆதிக்க இந்துக்கள்...ஊருக்கு வெளியில் ஒதுக்கு புறமான பகுதிகளே இம்மக்களின் வசிப்பிடமாக மாறி போனது...குடிக்க நீரின்றி புசிக்க சத்தான உணவின்றி தவிக்க விட்ட ஆதிக்க சக்திகள்...நீ ஒரு அடிமை...அடிமைத்தனம் மட்டுமே உனக்கு சொந்தம் என்ற உணர்வை அடிமனதின் அடியாளம் வரை ஊன்றியதால் ஆளுமைத் திறன் அற்று சராசரி மனிதனாக கூட வாழ தகுதியற்றவர்களாக ஆக்கப் பட்டனர் அம்மக்கள்....


வரலாறும் கூட ஆதிக்க சக்திகளால் எழுதப் பெற்றதால்...அங்கும் இந்த அடிமையினத்தில் தோன்றி போராடிய பல போராளிகள் வரலாறு புலபடாமலே முடிந்து போனது....தப்பி பிழைத்ததில் நந்தனும், ராமானுஜனும் மட்டுமே....அதுவும் ஏனென்றால் ஆதிக்க சக்திகளின் கடவுளை அவர்கள் வாயார புகழ்ந்ததால்....இன்றும் வாசுதேவனல்லுரில் வாய் வழி பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் புலித் தேவனின் முக்கியமான தளபதிகளில் ஒருவன் அடிமையினத்தில் இருந்தவன் என்பது வரலாற்றில் எங்கும் பதிந்து வைக்க படவில்லை...



ஆதிக்க சாதி இந்துக்கள் எதிரில் வந்தால் உடனே தரையில் படுத்து கொண்டு கும்பிட்டபடியே ஒரு அடிமைனத்தான் இருக்க வேண்டும், அந்த ஆதிக்க சாதி இந்து கடக்கும் வரை....இவர்களுக்கு மேலாடை என்பது கூடாது...இதில் அடிமைனத்தின் பெண்களும் அடங்குவர்...மழை பெய்து தேங்கும் நீரும் வயலுக்கு பாய்ச்சிய நீரும் தான் இவர்களுக்கு குடிக்க கிடைத்தன....தண்ணீர் என்பது அபூரவமாக கிடைக்கும் விஷயமானதால்....குடிக்க மட்டுமே பயன்படுத்த முடிந்தது அம்மக்களால்.....குளிக்க முடியாமல் நாள் கணக்கில் இருப்பதால் அழுக்கான உடையும் துர்நாற்ற உடலுடன் அலையை விடப் பட்டனர் அம்மக்கள்...இந்த வழக்கமே நூற்றாண்டுகளுக்கும் தொடர்ந்தது...



மொத்தத்தில் மிக சாதுர்யமாக திட்டமிடப் பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட மனித இனம் மிக கேவலமாக நடத்தப்பட்டது....நடத்திய ஆதிக்க இந்துக் கூட்டம் கொக்கரித்து மகிழ்ந்தது....இனி இந்த இனம் மிருகங்களோடு மிருங்களாக வாழும் என்றெண்ணிக் கொண்டிருந்த போது புயல் போல கிளம்பினான் ஒரு போராளி....அடிமையினத்தில் இருந்து....ஆணவத்தின் உச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஆதிக்க சக்திகள் ஆடிப் போனார்கள் அந்த போராளியின் சீற்றம் கண்டு.......

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்(1891 ஏப்ரல் 14 - 1956 டிசம்பர் 6 ) மகாராஷ்டிரத்தில் பிறந்த இந்த புரட்சிக்காரன் அடிமையினத்திர்க்கே உள்ள பல அடக்குமுறைகளை எதிர்கொண்டே முன்னேறினான்.....பரோடா மன்னரின் உதவியுடன் உயர்கல்வி கற்ற அம்பேத்கர் ஒட்டுமொத்த தலித் மக்களுக்காக போராடினார்....தலித் மக்கள் ,சாதி இந்துக்கள் புழங்கும் கிணற்றிலும் குளத்திலும் நீரெடுக்கும் போராட்டத்தினை முன்னெடுத்து...உங்களுக்கும் முதுகெலும்பு உண்டடா என்றுனர்த்தினார் தலித் மக்களுக்கு....தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் மிக தீவிரமாக வலியுறுத்தினார்......அதன் விளைவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கும் முறைக்கு வித்திட்டது.....தேசபிதா என்று காந்தியை வரலாறு புகழ்ந்தாலும்...இந்து வெறியன் காந்தி என்ற கருத்தையே கொண்டிருந்தார் பாபா சாகேப்......



“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.



தன்னால் இயன்ற வரை மிக தீவிரமாக தீண்டாமையை எதிர்த்து போரிட்ட பாபா சாகேப்...தான் சாவதற்குள் இம்மக்களை ஒரு படி முன்னேற்றி விட்டு செல்ல வேண்டும் என்றேன்னிக்கொண்டே இருந்தார்....ஒரு மனிதனுக்கெதிராக சக்தி நிரம்பிய கூட்டம்.....இவர் பின்னலோ கூனை நிமிர்த்தி தற்பொழுதுதான் உலகை நோக்கும் கூட்டம்.....பெருவாரியான அவரது கனவு மெய்யாகாமலே உள்ளது இன்றளவும்.....ஒரு கட்டத்தில் மிகவும் மனம் வெறுத்து போய் பௌத்த மதத்தை தழுவினார் பாபா சாகேப்.... 1956 டிசம்பர் 6 அன்று நீங்கா துயிலில் ஆழ்ந்த பாபா சாகேப் பௌத்த சமய முறைப் படியே அடக்கம் செய்யப் பட்டார்....



ஆண்டாண்டு காலமாய் ஆதிக்கம் செலுத்திய வல்லாதிக்க இனங்களை வீறு கொண்டேதிர்த்த மாவீரன் ,புரட்சிக் காரன் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவு தினம் நாளை கடைபிடிக்கப் படுகிறது...தன் இனத்தின் வரலாறுகளையும்...தற்போது உள்ள நிலையும், இவ்வின மேன்மைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்ந்து ஒவ்வொரு தலித் இளைஞனும் ,யுவதியும் இனமுன்னேற்ற பாதைக்கு பொறுப்புணர்ந்து முன்னெடுக்கும் முயற்சிகளும் போராட்டமும் வெற்றிகளுமே...பாபா சாகேப்பின் கனவை நனவாக்கும்...அவரின் ஆன்மா சாந்தியடையும்.ஜெய் பீம்.

வியாழன், 3 டிசம்பர், 2009

திட்டமிட்ட தேசியமும்....வெகுளித்தனமான பிராந்திய நலனும்.

இன்ற காலை பத்திரிக்கைகளில் அந்த செய்தியை பார்த்திருப்பீர்கள். கூடங்குளத்தில் ரசிய நாட்டின் உதவியுடன் மேலும் புதிய அணு உலைகள் அமைக்க இந்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதே அதன் சாராம்சம். இந்திய மிகப் பெரிய கடல் எல்லைகளைக் கொண்ட கூட்டமைப்பு. கடல் நீரை வெப்பப் படுத்தி மிசாரம் தயாரிக்கும் தொழினுட்பத்தை கொண்ட அணுமின் நிலையங்கள் மகாராஷ்டிரம்,கர்நாடகம், தமிழ்நாட்டில், இந்தியாவின் மொத்த அணுமின் நிலையங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

கேரளமும் மேற்கு வங்கத்திலும் கடல் பகுதி இருந்தாலும் அங்கு இன்று வரை எந்த மின் திட்டங்களும் முன்னெடுக்கப் படவில்லை. கல்ப்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கவே அப்பொழுது கடும் எதிர்ப்பு மக்களிடம் இருந்தாலும்..மின் தேவைகளை கருத்தில் கொண்டு அங்கு அமைக்கப்பட்டது...மேலும் இப்போது கூடங்குளத்தில்....இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள இந்த இரு மின் நிலையங்களும் அதிக சக்தி கொண்டவை மற்றும் ராணுவ ஆராய்ச்சி சார்புடைய விஷயங்களும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சுருக்கமாக இந்தியாவின் பொருளாதார அடிநாதமாக, அந்நிய செலாவணியை அள்ளித் தருகிற மாநிலங்கள் என்று பார்த்தால் தமிழகம்,மகாராஷ்டிரம்,மற்றும் கருநாடகம். இங்கு பெறுகிற வளர்ச்சியும்....இந்த மாநிலங்கள் அள்ளி தருகிற அந்நிய வருவாயை வைத்தே மிச்சமுள்ள இந்திய மாநிலங்கள் தங்கள் வளர்ச்சியை பெறுகின்றன....தொழில் துறை வருவாயை விட சுற்றுலாவில் வரும் வருமானம் மிக குறைவே இந்தியாவை பொறுத்த மட்டில்...

இனிதான் விஷயமே....மேற்கு வங்கத்தை பொறுத்த வரை தவறான மைய்ய அரசின் கொள்கைகளினால் அந்த மாநிலம் இன்றும் வளர்ச்சியிலும் கல்வியிலும் மிகவும் பின் தங்கியே இருக்கிறது...ஆனால் கேரளம் அதற்க்கு நேர்மார். அங்கு வளர்ச்சிப் பணிகளும் கல்வியும் மக்கள் வாழ்க்கை தரமும் வளர்ந்த மாநிலங்களுக்கு ஈடானதாகும்....தன் உணவிற்கு கூட வெளி மாநிலங்களை எதிர்ப் பார்த்து காத்திருக்கிற ஒரு மாநிலம் எப்படி தன் மக்கள் நலத்தில் முன்னிற்கிறது என்றால்....அவர்களின் திட்டமிட்ட மாநிலம் மற்றும் தன் பிராந்திய சார்புடைய கணக்குகளுடன் கடை பிடித்த தேசிய கொள்கைதான் காரணம்.

சுதந்திரம் பெற்ற போது,பிராந்திய நலனுக்காக தொண்டை கிழிய தமிழக தலைவர்கள் கத்திக் கொண்டிருக்கும் போது சத்தமில்லாமல் கேரளா மேனன்கள் மற்றும் நாயர்கள் மைய்ய அரசின் முக்கிய பதவிகளில் வந்திருந்தனர்...நேஹ்ருவிர்க்கு அழகான மலையாள சேச்சிகளை அனுப்பி தங்கள் மாநிலம் சார்ந்த வளர்ச்சிக்கு அடிகோல்;இட்டனர்.....நேரு சீனாவை நம்பி கெட்டதுக்கு அப்போதிருந்த ஒரு மேனனே முக்கிய காரணம். அவனின் தவறான கணிப்பால்தான் வலுவான சீனாவிடம் மோதி பல் பிடுங்கப் பட்டது இந்தியா.


அதோடு நிற்கவில்லை இந்த மேனன்கள்...சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்தனர். அதுதான் இன்று தமிழர்கள் உலகரங்கில் நாதியற்று போவதற்கு ஒரு காரணம் ஆகிப் போனது....! 1990 வரை தமிழக மாணவர்கள் பத்து விழுக்காடே தங்களின் பங்களிப்பை மத்திய அதிகார சேர்க்கையில் காண்பித்தனர்....மாறாக மேனன்களின் தொலை நோக்கு திட்டத்தோடு கேரளா மாணவர்கள் அதிகளவில் வெளியுறவுத் துறையில் சேர்ந்தனர்...விளைவு....இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதும் ....இறையாண்மையை காப்பதும் மேனன்களும் நாயர்களும்....அதோடு அல்லாமல் அணுமின் நிலைய திட்டங்களையும் வேற்று மாநிலங்களுக்கு தொலைநோக்கு திட்டத்தோடு மாற்றி விட்டனர்.....அவர்களுக்கென்ன?? அவர்களுக்கு தண்ணீர் தரவும் மின்சாரம் தரவும் அவர்களுக்கு அரிசி தரவும் அண்டை மாநிலங்கள் மையா அரசு மேனன்களால் பணிக்கப் படுகின்றன....


தங்களுடைய கேனை தனமான வெளியுறவுக் கொள்கையால்(இப்பொழுதும் மேனன்களும், நாயர்களுமே..) தற்போது இந்திய கூட்டமைப்பின் அத்தனை எல்லைகளிலும் எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.....எதிரிகளின் முக்கியக் கொள்கையே இந்தக் கூட்டமைப்பின் பொருளாதார கட்டமைப்பை சேதப் படுத்துவதுதான்.....மேலும் அணுமின் நிலையங்கள் முக்கியமான தாக்குதல் கேந்திரமாக பார்க்கப் படுகிறது.....அதற்கேற்றார் போல் இங்கே(தமிழகத்தில்) ரெண்டு அணுமின் நிலையங்கள்....இரண்டும் சக்தி வாய்ந்தவை...ஒன்று வட தமிழகத்தை அழிக்கும்........மற்றொன்று தென் தமிழகத்தை அழிக்கும்.........ஆனால் கேரளம் மட்டும் அணு சேதம் இன்றி அமைதி பூங்காவாக இருக்கும்.காரணம் அங்கு தாக்குதலுக்கான கேந்திரங்கள் என்று ஏதும் கிடையாது.......திட்டமிடப் பட்டு செயல் படுத்தப் பட்ட ஒன்று இது.....


இவ்வளவு ஆபத்தான வகையில் இங்கு மின்சாரம் தயாரிக்கப் பட்டு சத்தமில்லாமல் கேரளத்திற்கு அனுப்பப் படுகிறது......நமக்கோ தண்ணீர் என்று கதறினாலும் அணையை உடைப்போம் என்று கூறுகிறார்களே தவிர தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை.....அவ்வளவு மின் தேவை இருக்கும்பட்சத்தில் கேரளத்தில் அணுமின் நிலையம் அமைக்கலாமே என்று ஒரு கேள்விக்காக கூட யாரும் கேட்க முடியாது....கேட்டால் உலக வங்கிக் கடனில் உங்கள் பகுதிக்கு வர வேண்டிய பணம் தடுத்து நிறுத்தப் படும், ஐ.நாவில் பணியாற்றும் நம்பியார்களினாலும் மேனன்களினாலும்.



தொழில் துறையிலும் மொழிக் கொள்கையிலும் நாம் தனித்து காண்பிக்க பட்டாலும்...வீரமா அல்லது வெகுளித்தனமா?? அல்லது நரித் தனமா??? என்று தெரியாத ஏதோ ஒன்றினால் நமது தலைவர்களின் தொலை நோக்கு பார்வை சற்று மங்கியே போய்விட்டது என்றே சொல்ல வேண்டும், சர்வதேச அரங்கிலும் இந்தியாவிலும் தற்போதைய தமிழனுக்கு உள்ள நிலை கொண்டு....

காலத்தின் மாற்றங்களை யாராலும் கணிக்கமுடியாது.....இரும்புக் கோட்டை ரசியாவே தூள் தூளாகிப் போனது....நூல் கண்டுகளைக் கொண்டு இணைக்கப் பட்ட இந்தியா எம்மாத்திரம்???? அப்படி ஒரு நிலை வரும்போது சோமாலியாவை விட மோசமான நிலைக்கு கேரளா போகலாம்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

மாவீரன் பிரபாகரன்...!

இன்று மாவீரர்கள் தினம். மாவீரர்களுக்கு வீர வணக்கம். இந்த பதிவை இடும் முன் நிறைய யோசித்தேன்....வலையுலகில் ஏற்கனவே புலிகள் பற்றியும் தமிழ் தலைவர் பிரபாகரன் பற்றியும் கருத்துரைகள் கொட்டி கிடக்கிறது...இதில் நாமும் எழுத வேண்டுமா என்று...ஆனாலும் அந்த மாவீரனைப் பற்றி ஒரு இடுகை இடும் போது அது என் வலை பூவை மேலும் மெருகூட்டும் என தோன்றியதால் இந்த பதிவு.

மிகச் சிறு வயதில் ஜூனியர் விகடன் மூலமே எனக்கு தமிழீழ தலைவரை தெரியும்....பின்பு தலைவர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை ,அதை தாங்கி வந்த செய்தி தாளை படித்து கொண்டிருப்பது போல தலைவனின் படம் தாங்கி வந்த நக்கீரன் படிக்கும் போது ஓரளவிற்கு இலங்கை விவகாரம் எனக்கு பிடி பட்டிருந்தது....என் தந்தை எனக்கு அறிமுகம் செய்த ஓரிரு நல்ல பழக்கங்களில் ஒன்று புத்தகம் வாசிப்பது...அப்போதைய அரசியல் நாளிதழ்கள் பெரும்பாலும் நடுநிலைமை வகித்தன இலங்கை விவகாரத்தில்....

என்னையுமறியாமல் சிறு வதிநிலேயே பிரபாகரன் மேல் மிகப் பெரும் ஒரு மரியாதையை ஏற்ப்பட்டு விட்டது...நினைத்து பார்க்க முடியா சாகசங்களுக்கு சொந்தக்காரர்....பல நாடு உளவுத் துறையினரின் கொலை முயற்சி....துரோகங்கள்...அனைத்தையும் தாங்கி தமிழினம் தலை நிமிரச் செய்தவர் தலைவர் பிரபாகரன்...எந்த அரசாங்கத்திடமும் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காத போது புலிகளிடம் மட்டும் ஏன் இத்தனை கேள்வி....

இதில் ஒரு படி மேலே போய் சில கத்து குட்டிகள் வலையுலகில், இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கேள்விகளோடு கேலியும் செய்திருக்கிறது.......கத்தியை கைகளில் பிடித்து ஒழுங்காக வெங்காயம் வெட்ட தெரியாத நண்டு சிண்டுகளெல்லாம் மௌஸ் பிடித்து இந்த விவகாரத்தில் கருத்து சொன்னது சற்று ஆதிரமூட்டினாலும்....ஆதவனை நாய் பழிப்பதால் அதன் புகழ் எப்படி மங்காதோ அதே போல தலைவனின் புகழும் காலத்தால் அழியாதது....

வல்லாதிக்க அரசாங்கங்களோடு நிராதரவாக மோதி லட்சக் கணக்கான தமிழர்களை வாழ வைத்த பிரபாகரன் மாவீரன். அவர் கேள்விகளுக்கப்பாற்பட்டவர்....அந்த மாவீரனின் புகழும் வீரமும் உலகம் அழியும் வரையிலும் மங்காதிருக்கும், அதுவே தனி ஈழம் பெற தமிழர்களை வழிநடத்தும் என்றும் நம்புவோம்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

மரணம்...!

மரணம், என்ற வார்த்தையே ஒரு வித அமானுஷ்யத்தை சுமக்கும். மரணத்தை பற்றி நாமனைவரின் பார்வையும் ஒன்றே. முற்றும் துறந்தவர்களும் அதற்கு விதி விலக்கல்ல. பிறப்பும் இறப்பும் சமமாக இருப்பினும், பிறப்பை கொண்டாடுவது போல் ஒரு இறப்பை கொண்டாட முடியாது நம்மால். மரணத்தை வெல்ல முடியாது என்றுணர்ந்த மனிதன் சற்று சமரசத்திற்கு உட்பட்டு இறப்பும் பிறப்பை போல் வலியுணராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆட்பட்டிருக்கிறான்.

சிரித்து கொண்டே விடை பெற்று உலகை விட்டு போகும் மனிதனை கதைகளில் மட்டுமே கேள்விபட்டிருப்போம். யதார்த்த வாழ்வில் அப்படி ஒரு நிகழ்வு நடப்பது சாத்தியமா?? பிறந்த குழந்தை தன சுவாசத்தை ஆரம்பிக்கும் முதல் தொடங்குகிறது வாழ்வின் மேல் உள்ள பற்றுதல்...அப்படியே அது இறுகி வலுப் பெற்று வேர்விட்டு
உலகை விட்டு செல்ல கூடாது என்ற ஒரு வித வெறியாக மாறுகிறது...! ஒரு வித பரிதவிப்பு இருந்து கொண்டே இருக்கிறது எப்பொழுதும்....

மரண பயம் வாழ்வின் மேல் உள்ள பற்றுதலை அதிகரிக்கிறது...நாம் பிறக்கும் போதே நமக்கும் மரணத்திற்குமான விளையாட்டு ஆரம்பிக்கிறது....அது எப்பொழுதும் நம்மை சுற்றி கொண்டேயிருக்கும் கண்ணுக்கு தெரியாத காற்றலைகளாக...என்றே எனக்கு தோன்றும்...சமயங்களில் அதன் விளையாட்டு சற்று குறும்பாக மாறி என்னை சிறிது நட்போடு உரசி விட்டு செல்வதாக உணர்ந்த சமயங்கள் எனக்குண்டு....

சமயங்களில் எனக்கு சற்று வித்தியாசமான கோணங்களில் யோசிக்க தோன்றும்.....சாலையோரம் உள்ள தேநீர் விடுதியில் தேநீர் அருந்தும் போது ,சாலையில் எதிரே வேகமாக வந்து கொண்டிருக்கும் பேரூந்து.....கட்டுபாட்டை இழந்து இங்கே பாய்ந்தால் எப்படி இருக்கும் என்றஎண்ணம் மனதில் தோன்றி செல்வதை என்னால் கட்டுபடுத்த முடியாது.....அதைப்போலவே பெரிய மேம்பாலத்தின் அடியில் செல்லும்போது அப்படியே இது சரிந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கும்...

சற்று முன் பார்த்த அழகான அந்த இளம்பெண், எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இளம்ஜோடி, முதல் இருக்கையில் நான் போயமர்ந்த போது என்னை எழுப்பிய வயதான பெண்....எல்லாம் கன பொழுதில் சதைகள் பிய்க்கப் பட்டு சதையும் எலும்புமாக கிடக்க....நானும் நண்பனும் சிறு காயம் கூட இன்றி இருக்கையில் அமர்ந்திருக்கிறோம்......பேரூந்து முக்கால் வாசி உருக்குலைந்து விட்டது....மீட்பு குழுவினருடன் அனைவரையும் மீட்டு மருத்துவ மனை கொண்டு சென்ற போது என் தோளில் கை போட்டு ஒரு வித நட்போடு மரணம் புன்னகைத்ததை இந்நொடி மறக்க முயற்சிக்கிறேன்.....

மரணத்தை ஒரு இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாத மனித நாகரிகம் இறப்பிற்கு பின்பும் பல சடங்குகளை செய்து அவர்கள் நலனை உறுதி செய்து கொள்கிறது...
நமக்கான இறுதி நாளை நாமே தீர்மானிபதர்க்கு ஒருவித அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் பார்க்கும் போது கொள்கைக்கும் மற்றும் கோட்பாடுகளுக்காகவும் உயிர் துறக்கும் கரும்புலி தோழர்களும் மற்றும் பிற தற்கொலை போராளி படையும் ,மரணத்தை வென்றவர்களாகவே தெரிகிறாகள் என் கண்களுக்கு.

திங்கள், 23 நவம்பர், 2009

மிட்டாய்..!

எண்பதுகளின் மத்தியில் தென்னக தெருக்களில் அவர்களை சாதரணமாக பார்க்கலாம்..! கையில் பெரிய உருளை தடியோடு வருவார்கள். குழந்தைகளின் ஆதர்ஷ நாயகர்கள் அவர்கள். அவர்களை தெருக்களில் பார்த்து விட்டால் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு சென்று வீடிலுள்ளவரிடம் அடம் செய்து காசு வாங்கி விடுவார்கள்.

உருளைத் தடியின் உச்சத்தில் உள்ள சவ்வு மிட்டாய்தான் இத்தனைக்கும் காரணம். இங்கே(சென்னையில்) சவ்வு மிட்டாய் என்று பஞ்சு மிட்டாயை சொல்கிறார்கள்.
ஆனால் நான் குறிப்பிடுவது சவ்வைப் போல இழுத்தால் நீண்டு கொண்டே போகும் மிட்டாய். சவ்வு மிட்டாயில் என்ன விசேஷம் என்று கேட்குறீர்களா? விசேஷம் அதில்லை.மிட்டாய் விற்பவரின் கலை கரங்கள்தான் விசேஷம். கொஞ்சமே கொஞ்சமாக அந்த உருளை தடியின் உச்சிலுள்ள சவ்வு மிட்டாயை எடுத்து குழந்தைகள் என்ன வடிவில் கேட்க்கிரார்களோ அந்த வடிவில் செய்து தருவார். மயில்,கிளி,கைகடிகாரம்,வண்டி, என பல்வேறு வடிவங்களில் செய்து நம் கைகளில் ஒட்டிச் செல்வார்.

குழந்தைகளுக்கு உடனே மிட்டாயை சுவைக்க மனம் வராது....கைகளில் வைத்து கொண்டே இருப்பார்கள். பின்பு அரை மனதோடு சாப்பிடுவார்கள். நானும் சவ்வு மிட்டாயின் தீவிர ரசிகன்தான். இது போக காசு மிட்டாய் என்று ஒன்று உண்டு. அந்த மிட்டாயினுள் காசுகள் இருக்கும் சில சமயம். அப்புறம் பாக்கு மிட்டாய்,தேன் மிட்டாய்...
இன்று இவையனைத்தும் கிடைப்பதில்லை...தேன் மிட்டாய் மட்டும் ஆங்காங்கே தென்படுகிறது.




நான் நாலாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம். குமார் மச்சானுடன் தான் இருப்பேன் எப்போதும். குமார் மச்சானின் தந்தையும் என் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் குடும்ப நண்பர்களாகி விட்டோம். குமார் மச்சான் படித்து விட்டு வட்டி தொழில் செய்து வந்தார். அப்போது குமார் மச்சான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். நான் எட்டு வயதில் இருந்தேன் என நியாபகம். குமார் மச்சானிடம் ஒரு லூனா வாகனம் இருந்தது. அதில்தான் என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். அவரின் நண்பர்களனைவரும் ஒத்த வயதுடயவர்களேன்பதால் அவர்கள் கூடினாலே அங்கே இளமை கொப்பளிக்கும்.

அப்படி அவர்கள் ஒன்றுகூடும் போதெல்லாம் நான் என்ன கேட்க்கிறேனோ அதெல்லாம் வாங்கி என் கைகளை நிரப்பி விடுவார்கள். இப்படியான ஒரு பொழுதில்தான் குமார் மச்சானுக்கும் அவர் நண்பனுக்கும் ஒரு போட்டி வந்திருக்கிறது. அவர்கள் கடைசியாக பேசியது மட்டும் என் காதினில் விழுந்தது.

குமார் மச்சான் சொல்லிக்கொண்டிருந்தார்...அவன் என் மாப்ளை ,யார் என்ன பண்ணாலும் அவன் என்ன விட்டு போக மாட்டான்....சிறிது நேரத்தில் அந்த நண்பர் என்னை தன் கவாசாகி பைக்கில் ஏற்றிக் கொண்டு ஊரை முழுவதும் ஒரு வட்டம் அடித்தார்....பின்பு அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார்...அங்கு எல்லோரும் மிக அன்பாக பேசினார்கள்....எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அவர்களை....பின்பு மீண்டும் அவர் வீட்டிலிருந்து கிளம்பினோம்...அப்போது எனக்கு அவர் கைகள் பத்தாத அளவிற்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்....பின்பு பழைய இடத்திற்கே வந்தோம்....வந்த உடன் மச்சானிடம் ஒட்டிக் கொண்டேன்...அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்....நான் அதை செவி மடுக்கவில்லை...திடீரென்று குமார் மச்சான் என்னிடம் எங்க ரெண்டு பேரில் உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார்..! அவர் கண்களில் அவ்ளோ ஒரு நம்பிக்கை தெரிந்தது அவர் பெயரை மட்டுமே சொல்வேனென்று....நான் எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் என்றேன்....அந்த நண்பர் மச்சானை பார்த்து சிரிக்க....மச்சான் திரும்பவும் என்னிடம் இரண்டு தடவை கேட்டார்....நான் அதே பதிலை தான் திரும்பவும் சொன்னேன்.

யார் சொன்னார்கள் குழந்தையின் அன்பு எதிர்பாற்பற்றதென்று....இந்த உலகில் எல்லாதிற்கும் ஒரு விலை இருக்கின்றது...அப்போது நான் அந்த நிகழ்வுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை....ஆனால் கொஞ்சம் வளர்ந்த பொழுது குற்ற உணர்ச்சி என்னை குத்தி கிழித்தது....மச்சானின் கண்களில் தான் எவ்ளோ ஒரு நம்பிக்கை நான் அவர் பெயரை சொல்வேனென்று...நொடி பொழுதில் எல்லாத்தையும் சிதைத்திருக்கிறேன்....கைகள் நிரம்பிய சாக்லேட்டுக்க்ளுக்காக...


அது ஒரு நெருங்கிய உறவினரின் திருமண விழா... நான் அப்பா அம்மா எல்லாம் திருமணதிற்கு முதல் நாளே சேரன்மாதேவி போய்விட்டோம். அப்பொழுதெல்லாம் ஓலை பெட்டியில் சீனி மிட்டாய் தென்னக கிராமங்களில் பிரபலம். சீனி மிட்டாய் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். எனக்கு அப்பொழுது ஆறு வயது இருக்கும்...கோபாலன் மாமாவும் சுசிலா அத்தையும் வந்துவிட்டார்கள் நாங்கள் வந்த சில நிமிடங்களிலேயே...

எனக்கு பிடித்தமான சீனி மிட்டாய் மாமா வாங்கி வந்திருந்தார்...அப்பொழுது இரவு நேரமாகி விட்டதால் அதை காலையில் சாப்டலாம் என்று அம்மா அதைக் கொண்டு போய் வீட்டினுள் வைத்து விட்டார்...தாத்தா வீட்டில்தான் வுரவினர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்....அது நல்ல பெரிய கிராமத்து வீடு.சாணம் போட்டு மொளுவிய தரையுடன் ஒரு வித நெல் மனம் வீடு முழுக்க அடித்துக் கொண்டே இருக்கும்.

அப்பா அம்மாவுடன் மற்றும் உறவுக் காரர்களுடன் நடைகூட வீட்டில் படுத்துக் கொண்டனர். மீதமிருந்தவர்களெல்லாம் உள்ளரங்கு வீட்டுக்குள் படுத்துக் கொண்டனர்....இது போக ஒரு தனி பத்தி இருந்தது....அதில் என்னைப் போல நண்டு சிண்டுகளும் கோபாலன் மாமாவும் அப்புறம் அத்தையும். எனக்கு சீனி மிட்டாய் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது....அம்மா இப்பொழுது வெளியே படுத்திருக்கிறார்....நான் மிட்டாய் எடுத்து தின்றால் கூட அம்மாவிற்கு தெரியப் போவதில்லை என்ற நினைப்பே சிறிது சந்தோசம் கொடுத்தது.......ஆனாலும் மிட்டாய் இருந்த பகுதிக்கு முன்னமாக அத்தையும் மாமாவும் படுத்துக் கொண்டார்கள்... நான் அவர்களுக்கு பக்கத்தில்.....

சரி இனிமேல் காலையில் தான் சாப்பிட முடியும் என்று முடிவுக்கு வந்தவனாக படுத்துறங்கிப் போனேன்.....ஆனால் நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு விழித்து கொண்டேன்.....உடனே எனக்கு சீனி மிட்டாய் நியாபகத்தில் ஓடியது...யாருக்கும் தெரியாமல் சாப்பிட வேண்டும் என்றேன்னிக்க் கொண்டிருக்கும் போதே எனக்கு இருட்டு ஓரளவிற்கு பழகியிருந்தது.....எனக்கு பக்கத்தில் படுத்திருந்த மாமாவைக் காணோம்....சற்று உத்து பார்த்த பொழுது தான் தெரிந்தது மாமா அத்தையின் மேல் படுத்திருக்கிறார் என்று....எனக்கு புரிந்து விட்டது.......... அங்கே இங்கே நகண்டு அவர்களுக்கு கரடியாகி விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்... பின்பு சிறிது நேரங்கழித்து படுதுரங்கிப் போனேன்....இதில் ஆசிரியம் என்னவென்றால் அந்த காட்சியைக் கண்ட பொழுது எனக்கு, வழக்கமான குழந்தைகளுக்கு தோன்றும் அதிர்ச்சியோ இல்லை பயமோ அல்லது அருவருப்போ தோன்றவில்லை என்பதுதான்......ஆனால் இது ரொம்ப முக்கியமான குறுகுறுப்பான விஷயம் என்பது மட்டும் சிறு வதிலேயே படிந்து விட்டது மனதில்................

சில நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பி பள்ளி விடுமுறை நாளொன்றில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும் போது பக்கத்துக்கு வீடு ரேஜினாக்காவை( என்னை விட ஒரு வயது மூப்பு... ஏழு வயதிருக்கும்) மொட்டை மாடியில் வைத்து அவள் மறுத்து அழ அழ நான் முயற்சித்து பார்த்தது அந்த காம்பவுண்டில் இன்று வரை யாருக்கும் தெரியாது.


அவன் எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பன் கிடையாது. ஆனால் வேறு ஜாதி. அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்...ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியிலேல்லம் ஒரு ஒரு பலமான ஆசாமியை தெரிந்து வைதிருக்கிரவனால் மட்டுமே மாணவ தாதா ஆக முடியும் நெல்லையில்....எந்த பிரிவைச் சேர்ந்த தாதா கூட்டம் சண்டைக்கு வந்தாலும் இந்த மாதிரி நட்பு இருக்கிரவனால் மட்டுமே பிரச்சினையை பேசி தீர்க்க முடியும்...அந்த வகையில் இவனை எனக்கு தெரியும்......ஒரு பெண்ணால் என் நண்பனுக்கு ஒரு பிரச்சினை வந்த பொழுது இவனை பார்க்க வந்திருந்தேன்...இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு அழகான ஐந்து அல்லது ஆறு வயது ஆண் குழந்தை ஒன்று அவன் மீது தாவி ஏறிக் கொண்டு விளையாடியது....யாரிந்த குழந்தை என்றதற்கு பக்கத்து வீடு குழந்தை என்றான் அவன்....பின்பு சிறிது நேரம் கழித்து அந்தக் குழந்தைக்கு ஒரு பெரிய மில்கி பார் சாக்லேட் வாங்கி கொடுத்தான் அவன்....பின்பு அக்குழந்தையிடம் கேட்டான் நேற்றிரவு என்ன பார்த்தாய் என்று.....அதற்க்கு அக்குழந்தை சொன்னது அப்பா ஷேம் ஷேம் ஆக(ஆடையில்லாமல்) அம்மா மேல படுத்து நெறைய முத்தம் குடுத்தார் என்றது.....!

சனி, 21 நவம்பர், 2009

பால்யக் காதல்..????

உங்களில் எத்துனைப் பேருக்கு உங்கள் சிறு வயது நியாபகங்கள் மனதிர்ப் பதிந்து போயிருக்கும் என்று தெரியவில்லை...ஆனால் இந்தப் பதிவைப் படிக்கும் போது சிறிதாக ஏதாவது உங்கள் மனதின் அடியாழத்தில் கிளர்ந்தெழுந்தால் உங்கள் பால்ய காலத்தை ரசித்து வாழ்ந்திருக்ரீர்கள் என்று கொள்ளுங்கள்.

பால்யக் காலம் என்றால் புரியும் ...ஆனால் பால்யக் காதல்??? உடனே பதின் வயதுகளைப் பற்றி எழுதப் போகிறேன் என்றெண்ண வேண்டாம் என் மனதைப் பாதித்த எனது வாழ்வில் ஒளியேற்ற வந்த சில தேவதைகளின் மீதான எனது காதலே இது. இங்கே கண்டிப்பாக காதலைப் பற்றி நான் சில வரிகள் சொல்ல வேண்டும்...இல்லாவிடில் இந்தப் பதிவின் நோக்கத்தை கொச்சையாக பார்க்கிற வக்கிர கண்ணோட்டம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
இதற்கு முன் ஒரு பதிவில் சொன்னது போல காதல் ஒரு உணர்வுப் பூர்வமான விஷயம். உணர்வுகளால் ஈர்க்கப் பட்ட , இணைந்த , இணையத் துடிக்கிற இதயங்களின் சேர்க்கையை யோசிக்காமல் காதல் என்று சொல்லலாம். உணர்வுகளுக்கு மட்டுமே அங்கு முக்கியதுவம் காட்டப்படும். வயது,நிறம்,பணம்,ஜாதி,மதம் போன்றவைகளுக்கு அப்பார்பட்டது இந்தக் காதல்.

ஆங்கில நர்சரிப் பள்ளியில் தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கினேன். எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் படிப்பென்பதை அறியாமலே கடந்து போனது. நான் ஒழுங்காக படிக்காமல் இருந்தால் கூட பரவாஇல்லை...ஆனால் சேட்டைகளுக்கும் குறை வைக்காமல் இருந்தேன்...அதனாலேயே என் ஆசிரியைகளுக்கு என்னை பிடிக்காமல் போனது....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை அடிவெளுத்தெரிந்து விடுவார்கள்...அதனாலேயே படிப்பென்பது பணங்காயக தெரிந்தது...(அப்போவே..) இந்த நிலையில் தான் முதல் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்தேன்.

என் வாழ்வின் முதல் காதலையும் இங்குதான் கண்டேன்...! ரோஜா நிற குடைக்குள் மல்லிகை ஒன்று நடந்து வருவது போலதான் இருக்கும் அவர்கள் குடை பிடித்து வருவது...! என் முதல் வகுப்பு ஆங்கில ஆசிரியை. பெர்சியுஸ் என்பது அவர்கள் பெயர். இப்பொழுதும் மனதை விட்டு அகலாத முகம் அவர்களுடையது...! பேரழகு+ ஒரு குறும்பு கலந்த சிரிப்பு... இதுதான் பெர்சியுஸ். அப்பொழுதான் கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள்.
வழக்கம் போல் நான் கடைசி வரிசையில் போயமர்ந்து கொண்டேன்.(தீர்க்கதரிசி...!) அப்பொழுதெல்லாம் பாட புத்தகங்களை பைண்டு செய்யும் வழக்கம் இருந்தது,புத்தகங்கள் கிழிந்து விடாமலிருக்க. சற்று வித்தியாசமாக என் தந்தை அனைத்து பாட புத்தகங்களையும் சேர்த்து ஒரே ஒரு பைண்டு செய்து தந்தார். பார்க்க அது ஒரு பெரிய லிப்கோ டிக்சனரி போலிருக்கும்.

முதலாம் வகுப்பின் முதல் நாள் முதல் பாட வேளை பெர்சியுசுடயது. ஏனோ அவர்களை பார்த்த உடன் மற்ற ஆசிரியைகளிடம் தோன்றும் பயம் தோன்றவே இல்லை. மாறாக அவர்களுடைய குறும்புச் சிரிப்பின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதாகவே உணர்ந்தேன். என்னையுமறியாமல் புன்னைகை பரவிய முகத்துடன் அந்தப் பொழுது இப்பொழுதும் மனதில் ஓடி மறைகிறது.. புது வகுப்பு புது ஆசிரியர் என மொத்த வகுப்பும் மிரட்சியோடிருக்க நான் மட்டும் உற்சாகமாக இருப்பதைக் கண்ட பெர்சியுஸ் நேராக என்னிடம் வந்தார்...வகுப்பில் மாணவர் பெயர் கேட்கும் படலம் என்னிலிருந்தே தொடங்கியது. கடைசியாய் அமர்ந்திருந்த என்னிடம் இருந்து முதல் முதலாக ஒரு முதல் தொடங்கியது என்னை உற்சாகத்தின் உச்சத்தில் நிற்க வைத்தது...என்னை அங்கீகரித்த பெர்சியுஸ் என் தேவதை ஆகி போனது.அதன் பிறகான நாட்களில் ஆங்கிலம் என் தாய் மொழி போலானது. என் தேவதையிடம் நற்சான்று பெற நாயாக உழைக்க ஆரம்பித்தேன். கை மேல் பலனிருந்தது..ஆங்கிலத்தில் என்னை அடித்துக் கொள்ள ஆளில்லாமல் போனது என் வகுப்பில். என்னை முதல் வரிசையில் அமரும்படி தேவதை கேட்டது...! எனக்குள்ளிருந்த சாத்தான் மற்றைய ஆசிரியைகளின் முகங்களை என் மனக்கண்ணில் ஓட விட்டதால் உறுதியாக மறுத்து விட்டேன்.

அதன்பின் பெரும்பாலும் என் புத்தகத்தைதான் வகுப்பெடுக்க வாங்கிச் செல்லும் என் தேவதை..அப்படி வாங்கிச் செல்லும்போது என் புத்தகத்தை தன் தலையில் வைத்து வடை விற்கும் பெண் போல் கூவி கேலி செய்யும். கரும்பலகையில் எழுதிப் போட்டு விட்டு என்னருகே வந்தமரும் தேவதை. என் கை பிடித்து என் கையெழுத்தை அழகாக்கியது. சத்தியமாக என்னால் என் தாய்க்குச் சமமாக வைத்துப் தேவதையை பார்க்க முடியவில்லை...என் சகோதரியாகவும் பாவிக்க என் மனது ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தோழியாக வைத்துப் பார்த்து மனது குதுகலித்தது.இருவரின் உலகமும் ஈடுகட்ட முடியாத அளவு வேறுபாடுகளைச் சுமந்திருந்தாலும் ,தேவதையின் உலகத்தினுள் இன்னும் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பெரிய மனுஷ தனத்தோடு செய்த காரியங்கள் தேவதைக்கு சிரிப்பையே வரவழைத்தது.
பள்ளி முடிந்த பிறகு தினமும் தேவதையின் வீட்டிற்க்கு சென்று விட்டு பின்பே என் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். அத்தனை பேர் வகுப்பில் பயின்றாலும் தேவதை என்னிடம் மட்டுமே ஒரு வித பாசம் கொண்டிருந்ததென்பதை உறுதியாகக் கூற முடியும் என்னால். அம்மாவிடம் அனுமதி வாங்கி ஞாயிற்றுக் கிழமைகளில் தேவதையுடன் வேதக் கோவிலுக்குச் செல்வது சொர்கத்துக்கு செல்வது போலிருக்கும் எனக்கு. அமைதியாக கண்கள் மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் தேவதையை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். தேவதையின் நட்பால் மற்ற ஆசிரியைகளும் கொஞ்சம் கனிவாக நடந்து கொண்டார்கள் என்னிடம். ஒன்றாம் வகுப்பு இறுதியில் தேவதை திடீரென்று பள்ளிக்கு வரவில்லை...தேவதையின் வீட்டிற்க்கு சென்றேன்..வரவேற்ற தேவதை இனி பள்ளிக்கு தான் வரப் போவதில்லை என்றது என் கண்களை ஊடுருவியபடி...

கண்கள் மறைக்கிரளவிர்க்கு நீர் கொட்டிக் கொண்டே இருந்தது..சிரித்துகொண்டே என்னை தேற்றினார்கள் தேவதையின் பெற்றோர். நெற்றியில் அழுந்தி ஒரு முத்தமிட்டது தேவதை. ஒரு வாரம் கடுமையான காய்ச்சல் வந்து படுத்து விட்டேன். மீண்டும் பள்ளிக்கு போன போது தெரிந்தது...கல்யாணம் என்ற பெயரில் என் தேவதை என்னிடம் இருந்து களவாடபட்டது.
மீண்டும் பழைய நிலைக்கு சென்று விட்டேன்...! படிப்பு மங்கி சேட்டைகள் அதிகரித்தது. சில காலம் வரை பார்க்கிற இடமெங்கும் தேவதையை தேடிக் கொண்டிருந்தேன்...பின்பு தேடலும் தொலைந்து போனது.

என்னுடைய உணர்வுகளுக்கு பெயர் சூட்ட உங்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது....உங்களைப் பொறுத்த வரைக்கும் அந்த உணர்வுக்கு எந்த பெயர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்...என்னைப் பொறுத்த வரை அது என் முதற் காதல். இப்போதும் என் தேவதை பெர்சியுஸ்.




காலச் சக்கரத்தின் வேகமான சுழற்சியில் பத்தாம் வகுப்பை எட்டியிருந்தேன். ஆங்கில வழிப் பள்ளி என்றாலும் விவரம் தெரிந்த. வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்டிருந்த மாணவர்களை தனியாக பிரித்து ஒரு வகுப்பில் போட்டு விட்டார்கள். அந்த வகுப்பிலும் வளர்ச்சி மற்றும் இதர குணநலன்கள் கடைசி வரிசையே எனக்கு ஒதுக்கப் பட்டது. தேவைகள், ரசனைகள், பெண்ணைப் பற்றிய பார்வைகள், முரண்பட்ட சமூகக் கண்ணோட்டம் என்று நரம்பை முரிக்கிக் கொள்ளும் பதின் வயதுக்குள் வாழ்ந்த பருவம் அது.

எதாவது வித்தியாசமாக செய்து சுற்றிருந்தவர்களின் கவனம் என் மீது படிய வைப்பதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றதால்...எப்பொழுதும் ஒரு நண்பர் கூட்டத்தின் ஊடே இருந்தேன். எதையும் ஒரு முரட்டுதனத்தோடு அணுகும் முறையே கொண்டிருந்தோம் நண்பர்களைனைவரும். பள்ளியின் தாளாளர் எங்களைவரையும் கூப்பிடு இந்த வருடம் முடிந்த பிறகு உங்களுக்கு இந்த பள்ளியில் இடம் கிடையாது கண்டிப்பாக என்று சொல்லிவிட்டார். ஏதோ ஒரு பெரிய வெற்றியை சாதித்து விட்டதாக அன்று இரவு நண்பர் கூட்டம் அனைத்தும் பீர் குடித்து மகிழ்ந்தது...தோம்..! இப்படி சென்று கொண்டிருந்த வாழ்வில் புயல் போல் நுழைந்தது ராதா. கல்லூரி செல்லும் பெண்ணைப் போலதான் இருந்தது பார்ப்பதற்கு..அறிவியல் ஆசிரியைக்கு திடீரென்று ஒரு அறுவை சிகிச்சைக்காக விடுப்பு எடுத்துக் கொண்டதால் அந்த பணிக்கு ராதா. பேரைக் கேட்டு ஒரு வயதான பெண்மணிதான் வரபோகிரதென்றேன்னிக் கொண்டோம். சத்தியமாக இப்படி ஒரு இளம் யுவதியை அதுவும் இந்த வகுப்புக்கு எப்படி என்று வியந்து மாய்ந்து போனோம். பின்புதான் முழு பெயர் அனு ராதா என்று தெரிந்தது. வகுப்புக்குள் ஒரே களை கட்டத் தொடங்கியது. வகுப்பாசிரியர் வந்து அந்த பெண்ணிடம் வாலாட்டினால் டி.சி கிழிக்கப்படும் என்று எச்சரிக்கை இட்டு சென்றார்.


,மற்றைய புது ஆசிரியர்கள் போலவே இவரும் இருப்பார் என்ற அனுமானத்தை முதல் வகுப்பிலே தகர்த்தெறிந்தார். நான் உட்பட கடைசி வரிசை நண்பர்களனைவரும் முதல் வகுப்பிலேயே வெளியேற்றப்பட்டோம். அனு மீது ஆத்திரமாக வந்தது. அதன் பிறகு அணுவின் வகுப்பை புறக்கணித்து எதிர்ப்பு காண்பித்தோம்..சளைக்காமல் எங்களை தலைமை ஆசிரியரிடம் அனுப்பி வைத்தது .. குறிப்பாக என் மீது தாளாத சினம் காட்டியது அனு...! அதன்பின் ஒட்டுமொத்த வகுப்பும் அனுவிற்கு எதிராக வெடிக்க...சற்று கீழிறங்கி வந்தது அனு...ஆனால் எப்பொழுதும் ஒரு இனம் தெரியாத சோகம் அல்லது கோபம் கலந்த முகத்துடனே தான் அனு இருந்தது. அப்போது விகடனின் திவீர ரசிகன் நான் ...புத்தகம் வந்த உடனே வாங்கி பள்ளி புத்தகங்களுக்கிடையில் வத்து பள்ளியிலேயே படித்து விடுவேன்.


அப்படி ஒரு விகடனில் வந்த தபு-சங்கரின் கவிதையை சிலாகித்து படித்து அதை வகுப்பின் கரும்பலகையில் எழுதி விட்டேன். வகுப்புக்கு வந்த அனு,கவிதையை பார்த்தது..பின்பு எங்களை பார்த்து யார் இப்படி எழுதியதென்றது? கவிதையை கூட ரசிக்கத் தெரியாத ஜென்மமா என்று வெறுப்புற்று..நான் முன்சென்றேன். முதன் முறையாக என்னைப் பார்த்து சிறு நகை ஒன்றை உதிர்த்த படியே சொல்லியது கவிதை அற்ப்புதமென்று, அது தபுவின் கவிதை என்றேன் ..விகடனில் வெளியானதை சொன்னேன். கேலியாக சிரித்து பின்பு வகுப்பை ஆரம்பித்தது.

அன்று வெள்ளிக் கிழமை. வெள்ளியன்று கோவிலுக்குச் செல்வது அப்பொழுது பொழுதுபோக்கு. தெய்வத்தை தரிசிக்க அல்ல தேவதைகளை தரிசனத்திற்காக.கூட்டத்தின் நடுவே யாரோ என்னை உற்று பார்ப்பதை உணர்ந்து திரும்பினால் அனு. தோழிகளோடு வந்திருந்தது. அன்று அனு நிறைய பேசியது என்னிடம்...கதை கட்டுரை கவிதை என்று பேச்சு நீண்ட போது அனுவின் மீது ஒரு நட்பு தொடங்கியிருந்தது. அதன் பிறகு வகுப்பில் உற்சாகம் கொப்பளித்தது. பார்த்த வயது வந்தோருக்கான திரைப் படம் முதல் பெண்களை சைட் அடித்த கதை வரை அனுவிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்கு பிறகு மதுரையில் இருக்கும் என் நண்பனின் அண்ணனிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பில் அவருடைய நண்பர் தன காதலியை மீட்டுச் செல்வதற்காக வருவதாகவும் அவருக்கு தேவையான உதவி செய்யுமாறும் கேட்டிருந்தார்.

அண்ணனின் நண்பரை திருநெல்வேலியின் மையப் பகுதியிலே தங்க வைத்தோம். பெண்ணின் பெயர் மற்றும் முகவரி அவரிடத்தில் இருந்தது. பெண்ணின் பெயர் ரூபி என்றும்...மதுரையில் கல்லூரியில் அவருடன் உடன்பயின்றவறேன்பதும் தெரிந்து கொண்டோம். இரு வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து அப்பெண் வீட்டார் அந்தப் பெண்ணை இங்கு பாதுகாப்பு கருதி விட்டுச் சென்றதாகவும் சொன்னார்.


அது ஒரு ஞாயிற்று கிழமை மாலை..பெண்ணின் வீடிருந்த என்.ஜி.ஒ காலனி சென்றோம். பெண் வீடிற்கு சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு பெண்ணின் வீடிற்கு யார் செல்வது எப்படி பெண்ணை சந்திப்பது என்று முடிவெடுத்து இறுதியாக நானும் நண்பன் அருணும் செல்லும் படியானது. வீட்டினுள் சண்டே ஸ்பெஷல் திரைப் படம் ஓடிக் கொண்டிருந்தது...மொட்டை மாடியில் நைடிடன் உலவிக் கொண்டிருந்த பெண்தான் நாம் தேடி வந்த பெண்ணாக இருக்கவேண்டும் என்ற கணிப்போடு மேலே சென்றோம்...ரூபி என்று பேர் சொல்லியளைத்தால் திரும்பிய அப்பெண்ணை பார்த்து அதிர்ச்சியின் உச்ச்சத்திர்க்கே சென்றோம் நானும் அருணும்....வேறு யாருமல்ல அனு தான்....அனுவும் எங்களை அங்கு எதிர் பார்க்கவில்லை...அடுத்த நொடியே நைட்டியுடன் அணுவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து காரில் ஏற்றினோம்....

எல்லாம் சுபமாக திருசெந்தூர் கோவிலில் முடிந்த போது அனு என் கைகளை இறுக பற்றிக் கொண்டது.....ஏதோ பேச முயற்சித்தது...ஆனால் வார்த்தைகள் இல்லை.
எனக்கும் கூட.

வியாழன், 12 நவம்பர், 2009

மறைக்கப்பட்ட சுவாரசிய உண்மைகள்...!

சமீபத்தில் சாலையில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு வாழ்த்து சுவரொட்டியை காண நேர்ந்தது....அதில் அண்ணாவின் மனசாட்சியாகக் பெரியவர்,முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் படம் அச்ச்சடிக்கப்பெற்றிருந்தது....பல காலமாக கழக தொண்டர்கள் ஓட்டுகிற வாழ்த்துப் படம் தான் அது.....எனினும் அதனைக் காணும்போது மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்....சில காலத்திற்கு முன்பு வரை நானும் அந்தப் படத்தை கண்டு சிலாகித்திருக்கிறேன்....ஆனால் அதன் பின்னால் உள்ள கதைகள் தெரிந்தப் பிறகு மிகச் சிரமப் பட்டே சிரிப்பை அடக்கிக் கொள்வேன்.

சில காலத்திற்கு முன்பு தமிழகத்தின் பிரபலமான இரு சக்கர வாகன உற்ப்பத்தி நிறுவனமான டி.வி.எஸ் குழுமத்தில் பணி செய்துக் கொண்டிருந்தேன்....அப்போது அங்கு உயரதிகாரியாக பணி புரிந்த ஒருவர் எனக்கு நட்ப்பானார்...டி.வி.எஸ் குழுமத்தில் உயரதிகாரி என்றாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர் என்ன பிரிவைச் சேர்ந்தவரென்று...ஆனால் இவர் ரொம்ப மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்....மூடபழக்க வழக்கங்களை கிண்டலடிப்பவர்....இறை வழிபாட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டாதவர்...

விஷயத்திற்கு வருகிறேன்...ஒரு மாலைப் பொழுதில் வேலை முடித்து அவருடன் காரில் வர வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது.....காரில் வரும்போது இதே வாழ்த்து படம் கொண்ட சுவரொட்டியை காண நேர்ந்த போது அவர் பலமாக சிரித்தார். காரணம் கேட்ட போது தான் எனக்கு தெரியும் அவரின் பாட்டனாரும் அண்ணாவும் மிக நெருக்கமான தோழர்கள் என்று.....அப்போது அண்ணாவுடன் நிறைய ஐயங்கார் நண்பர்களும் அதிகாரிகளும் கொண்ட வட்டம் இருந்ததெனவும்....கழக வட்டத்தையும் தாண்டி இந்த வட்டம் இருந்ததெனவும்....அவர்களிடம் உரையாடும்போது அவன்கிட்ட (மு.கா) கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும் என்று கூறுவது அண்ணாவின் வழக்கமாம்.

நாற்காலி வேட்டையில் உடனிருக்கும் நண்பனையே புறமுதுகில் குத்தும் அரசியல் சதுரங்க காய் நகர்த்தலுக்கு ராஜ தந்திரம் என்று தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அகராதி உருவாகிய காலக் கட்டம் அது. உண்மையில், தனது பேச்சாற்றல் மூலம் கழகக் கண்மணிகளின் இதயத்தில் ஒரு இடம் பிடித்த மாதிரி, உள்ளடி அரசியல் காய் நகர்த்தலிலும் பாய்ச்சலாக சென்றுகொண்டிருந்த கருணாநிதியைக் கண்டு மிகவும் கலக்கத்துடனே தான் இருந்தாராம் அண்ணா.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடந்த காய் நகர்த்தல்கள் மிக பிரசித்தி பெற்ற கதை.நிற்க.
புறமுதுகில் குத்துபடுவதும் குத்துவதும் தங்கள் வீரத்திர்ற்கு நேர்ந்த இழுக்க்காகவே பாவித்தது வீரத் தமிழினம். (குறிப்பு: பெரியவர்(மு.கருணாநிதி) சார்ந்த இனம் தமிழினம் அல்ல. அவரின் மூதாதையர்கள் ஆந்திராவின் பூர்வாங்க குடிகள் என்பதை நினைவு கொள்க.)





அது திராவிடக் கழகம் தமிழகத்தில் அனல் பரப்பிக் கொண்டிருந்த காலம். தந்தைப் பெரியார் தமிழக இளைஞர்களுக்கு எழுச்சித் தலைவனாக வழி நடத்திக் கொண்டிருந்த காலக் கட்டம்....தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ஒரு பிள்ளை மார் சமூகத்து அன்பர் உணவகம் ஒன்று நடத்தி வந்திருக்கிறார். ஜாதி வெறி பிடித்த ஆதிக்க வர்க்கத்தின் ஒரு சோறுதான் அவரும். அப்போது பம்பாயிலிருந்து வந்த ஒரு ஆதி திராவிட இன இளைஞன் தெரியாமல் அந்த உணவகத்தில் நுழைந்து விட,அங்கே சிறிய அடி தடி நடந்து அந்த இளைஞன் வெளியேற்றப்பட்டான்.

இதைக் கேள்விப் பட்ட அந்தப் பகுதி தி.காவினர் பிள்ளை வாளுக்கு பாடம் புகட்ட நினைத்திருந்தனர்...அப்போது ஒரு கூட்டத்திற்கு கோவில்பட்டிக்கு பெரியார் வர ஏற்ப்பாடு செய்யப் பட்டிருந்தது....இதுதான் சமயம் என்று தி.காவிலுள்ள இளைஞர்கள் இரு தலித் இளைஞர்களுடன் பிள்ளை உணவகத்திற்கு சென்று அமர்ந்தனர். தலித் இளைஞர்கள் உள்ளே நுழைந்ததை பார்த்து கொதித்து போனார் பிள்ளை. கூட்டமாக தி காவினர் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்த பிள்ளை ,ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த உணவகத்திற்கு பின்புறம் இருந்த எச்சில் இலைகளை வளிக்கும் வேலை செய்து வந்த சக்கிலிய இன இளைஞனை கைகள் அலம்பி விட்டு அமர்ந்திருப்பவர்களுக்கு பரிமாறும்படி பணித்தார்.

சில நொடிகளுக்கு பிறகு அங்கே அந்த இரு தலித் இளைஞர்களைத் தவிர ஒருத்தரும் இல்லை.

செவ்வாய், 10 நவம்பர், 2009

பெண்ணடிமை...???

தலைப்பைப் போல எங்கும் கேட்க்கும் சம காலக் குரல்கள். வளரும் நாடுகளில் சற்று சன்னமாக, வளர்ந்த நாடுகளில் சற்று வீரியமாக...நிற்க. பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி ஆணாக உள்ள ஒருவனால் எப்படி விளக்க முடியும் என்று போர்க் கோடி தூக்க வேண்டாம்....சுடுமண் தரையிலும் தார்ச் சாலையிலும் வெற்று கால்களுடன் நடந்ததாலேயே காய்ச்சி போன ,தொட்டால் கைகளை அறுக்கும் கூரான பித்த வெடிப்புகளைச் சுமந்த கால்களும்...நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் ஆண்களுக்கு ஈடாக உடலுழைப்பில் இறுகிப் போன தேகமும்....கல்,மண் ,களை,மலம், குப்பை, சுமந்து இரும்பாய்ப் போன கைகளும்....உடர்க் கலவிக்கு மாற்றுச் சொல்லான காதல் அன்பு போன்ற சொற்களைக் கடந்து போகின்ற ,அவ்வுனர்ச்சிகளுக்கு ஒரு சிறு அர்த்தத்தைக் கூட கொடுக்காமல் வாழ்வின் அடுத்த நொடிகளுக்குள் நுழையும் வேகத்தோடு அனுதினமும் போராடும் ஒரு சராசரி தலித் பெண்களின் மீது படிந்துள்ள பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி பேசவே இந்தப் பதிவு.

வலைப் பதிவில் பரவலாக பெண்ணடிமை எதிர்ப்புகள் இருந்தாலும் அதில் தலித் பெண்ணியம் பற்றியக் கருத்துக்கள் காண இயலவில்லை எங்கும்... ( நான் தேடித் பார்த்த வரையிலும்).

எதற்கு தலித் பெண்ணியம் என்று பிரிவினைப் படுத்துகிறாய், நாங்கள் போராடுவது அனைத்துப் பெண்களுக்காகவும் மட்டுமே என்று சொல்பவர்களுக்கு முதற் பத்தியே விடை சொல்லி விடும்.

தலித்தியம் சம கால இலக்கியத்தில் ஒரு தனிக் களமாகவே பாவிக்கப் படுவதற்கு காரணம் ஒரு தலித்தால் மட்டுமே அவனுடைய உணர்வுகளை சமுதாயதிர் பால் உள்ள கோபங்களையும் குறைகளையும் வெளிப் படுத்த இயலும். வேறு யாராலும் அவ்வகையில் வெளிப் படுத்த இயலாது. அதைப் போலவேதான் தலித் பெண்ணியமும்.வேறு பெண்களால் அவர்களின் பார்வையை புரிந்து கொள்ளவியலாது.

ஒட்டு மொத்தமாக தலித் இனமே அடிமைச் சாதி என்று அடிமைப் படுத்தி வைத்திருக்கும் போது....அவ்வினத்தில் உள்ள ஆண்கள் தலித் பெண்களை அவர்கள் சார்ந்த ஆணாதிக்க போக்கோடு நடத்தப் படும் அப்பெண்களின் அடிமைத்தனம் ரணம் மிகுந்தது. சாதி இந்துப் பெண்களுக்கு உள்ள அடிமைத்தனம் சமுதயாத்தில் உள்ள மொத்த ஆண் வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதாக அமைந்துள்ளது. ஆனால் தலித் பெண்களுக்கோ சாதி இந்துப் பெண்களும் ஆதிக்க வர்க்கம் ஆனதுதான் கொடுமை.

கடைநிலை வேலைகள் அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக அசாத்திய உழைப்பை வெளிப் படுத்தும் இப்பெண்களுக்கு அவர்கள் வாங்கும் கூலியில் இருந்து அவர்கள் கற்பு
வரை கொடுக்கப் படும் மரியாதை மிகவும் மலிவானது..கொடுமையானது..! ஆனாலும் குடும்பத்தை நகர்த்தி செல்வதில்,குடும்பப் பொருளாதாரத்தை முன்னெடுத்துப் போவதிலும் இவர்களின் பாங்கு போற்றுதலுக்குரியது. ஆய்வு நடத்திப் பார்த்தால் இக்குடும்பகளில் ஆண்களின் கூலிகள் அனைத்தும் சாராயக் கடைக்குப் போக மீதமுள்ளதாகவே இருக்கும்....ஆனால் பெண்களின் கூலியே அவர்கள் குடும்பத்திற்கு உண்டான அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும்...அரசுப் பள்ளிகளில் பயிலும் அவர்களின் குழந்தைகளின் குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்வதற்கும் எதுவாக இருக்கும்.

பொதுவாக சாதி இந்துப் பெண்களின் மத்தியில் தலித்ப் பெண்களைப் பற்றி இப்படி ஒரு கருத்து இருக்கும்- தெருச் சண்டை போட்டுட்டே இருப்பள்க....! போராட்டமான வாழ்க்கை மத்தியில் வாழ்வாதாரங்களைத் தேடி ஓடும் போராட்டத்தில் உள்ள அப்பெண்களிடம் மென்மையான போக்கை எதிர்ப் பார்ப்பது நகைப்புக்குரிய விடயம். மேலும் இவ்வளவு முரடாக அவர்கள் இருந்த போதிலும் ஆதிக்க வர்க்கத்தினால் அடக்கித்தான் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

தலித் விடுதலை என முழங்கும் தலித் தலைவர்கள் யாரும் அவ்வினப் பெண்களைப் பற்றி....அவர்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வாயே திறப்பதில்லை...மேலும் அவ்வினத்தில் இருந்து எந்த பெண் விடுதலைப் போராளியையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர முனைவதில்லை. பெண்களின் முன்னேற்றமே ஒரு சமூகத்தை முன்னேற்றும்.....அந்தச் சமூகமே நாட்டை வளப்படுத்தும்...(உதாரணம் -மேற்க்கத்திய நாடுகள்....தற்ப்போது இரான் )

ஆனால் மிகவும் விசித்திரமான....இன்று பெண் விடுதலை விரும்பிகள் கனவில் காணும் விடயங்கள் இக்குடும்பங்களில் சாதரணமாக நடக்கும். அதுதான் ஆண்களின் மீதான பெண்களின் வன்முறை....இங்கு பெண்கள் ஆண்களை அடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகவே இருக்கும்....அதை ஆண்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பெரும்பான்மையாக....காரணம் அப்பெண்கள் இல்லைஎன்றால் இவர்களால் சுதந்திரமாக சாரயம் குடிக்கவும் அதே சமயம் குடும்பப் பாரத்தை சுயமாக சுமக்கவும் முடியாதென்பதே.

பாலியல் ரீதியாக இப்பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வலையில் ஏற்றினால் வலைப் பதிவிற்கே வராமல் ஓடிப் போய் விடுவார்கள் இங்குள்ள பெண்ணியம் பேசும் பெண் வலைப் பதிவர்கள். இவ்வளவையும் தாண்டி இன்றும் லட்சக் கணக்கான தலித் குடும்பங்கள் வாழ்க்கைப் போகிறதென்றால் அது இந்த பெண் போராளிகளால்தான்.(பொருளீட்டுவதற்கு போராடுவதும் போராட்டமே....அதலால் அவர்கள் போராளிகளே...)
அதனாலேயே இப்பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அளவற்ற காதலும் உண்டு.

இறுதியாக...தலித் பெண்கள் விடுதலயிலிருந்தே அவ்வினத்தின் மேன்மைக்கு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட வேண்டும்...அரசாங்கங்கள் தீட்டுகிற இவர்களுக்கான முன்னேற்ற முயற்ச்சிகளில் பெண்களுக்கே முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். அதுவே அவர்கள் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் எடுக்கின்ற அரோக்கியமான முயற்சியாகும்.

இப்பதிவைப் படித்துவிட்டு உங்களுக்கு தெரிந்த ஒன்றிரண்டு முன்னேறிய தலித் குடும்பகளை இப்ப்ரசினையில் பொருத்திப் பார்த்து அவர்களெல்லாம் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லிச் செல்ல வேண்டாம். லட்சோப லட்ச தலித் பெண்கள் இப்பதிவில் வரும் வாழ்வையே இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்திடமே ஏராளமான ஆவணங்கள் உள்ளன.

வியாழன், 5 நவம்பர், 2009

ஆக்ரோஷ அரசாங்கமும்...போதையில் குடிமக்களும்...!

பண்டமாற்று முறையைக் கொண்ட பண்டைய வணிகத்தன்மை அனைத்தும் அரசாங்களில் கட்டுப் பாட்டில் இருந்தது. அப்போதைய அரசாங்கங்கள் மக்கள் நலனைச் சார்ந்தே பெரும்பாலும் இயங்கிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் கிடைக்காத பொருளை இங்கே கிடைக்கும் பொருள் கொண்டு மாற்றி அப்பொருளை மக்கட்க்கு கிடைக்கும்வண்ணம் செய்த அரசாங்கங்கள் அப்பொருள்களுக்கு வரி விதிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் கொண்டு அரசாங்கம் இயங்கியது. அப்போதிருந்த அரசாங்கங்கள் தங்கள் எல்லைக் கோட்டின் மேல் மிகுந்த கண்காணிப்புடன் நடந்து கொண்டது. தங்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும்,தங்களின் பிராந்திய பலத்தை காட்டவும் போர் தொடுத்து புலப்படுத்திக்கொண்டது. அப்படியே தாம் கைப்பற்றிய இடங்களிலும் மக்கள் நலன் முன்னிறுத்தப் பட்டது.

உலகை மொத்தமாக ஆள வேண்டும் என்ற வெறித்(நரி) திட்டத்தோடு யிரோப்பியர்கள் கிளம்பும் முன் வரை இவ்வாறே உலகில் பல்வேறு அரசாங்கங்கள் செயல்ப்பட்டுக்கொண்டிருந்தன. முதன்முறையாக, வணிகத் தொடர்பைக் கொண்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியும் என்ற சித்தாந்தத்தோடு கிளம்பிய இரோப்பியர்களுக்கு போனவிடத்திலேல்லாம் வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வெற்றிகரமாக அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்திருந்தார்கள். அவர்கள் செய்த தவறுகள்,பல்வேறு பகுதிகளின் இன மற்றும் கலாச்சாரங்களை முறையான புரிதல் இல்லாமற் மக்கள் நலம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்ற முயன்றனர்,மேலும் அனைத்து பகுதிகளிலும் மக்களிடம் துவேஷங்களும் பரவிக்கிடந்ததால் அவர்களால் முழுமையான மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எடுககமுடியாமர்ப் போனது.

இந்த இடத்தில்தான் யிரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கைப் பற்றிய பல பகுதிகளிலும் இருந்து விடுதலைக் குரல்கள் கிளம்ப ஆரம்பித்தன. இருபதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பகுதிகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தன. அப்படி சுதந்திரம் பெற்ற பெரும்பான்மை பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் பெரும்பான்மை இனங்களின் அரசாங்கங்களே அமையப்பெற்றன.இந்தக் காலக்கட்டத்தில்தான் அரசாங்கங்கள் தங்கள் இனம் சார்ந்து இயங்க ஆரம்பித்தன. குறிப்பிட்ட இனமும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் பெரும்பான்மையாக அரசாங்களில் இடம்பெற்றிருந்தனர்.

இதற்க்குபிரகான காலங்கள் உலகப் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களினால் நிறைய மாற்றங்களுக்குள்ளானது. அரசாங்கங்களை சார்ந்து இயங்கிய வாணிபம் போய் வாணிபம் சார்ந்த அரசாங்களாக மாற ஆரம்பித்திருந்தன.. பன்னாட்டில் வியாபாரத்தைத் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்களாக உறுப் பெற்றிருந்தன பல நிறுவனங்கள்.வளரும் நாடுளின் பொருளாதாரத் தேவைகளைக் கணக்கிற் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் முதலீடுகளை தொடங்கியது.

இவ்விடத்தில் தான் மக்கள் நலம் பின்னிருத்தப்பட்டு சமூகத்தின் பணக்கார வர்க்கத்தின் ஆசைகளுக்கும் பன்னாட்டு நிறுவனகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் வளரும் அரசாங்கங்கள் செவிசாய்க்க ஆரம்பித்தன.இப்போது எல்லை கோடுகளும் இறையான்மையும் இரண்டாம்பட்சமே என்று கோட்பாடுகளை வகுத்துக் கொண்டன அரசாங்கங்கள். காடுகள் அழிக்கப் பட்டன...மக்களின் விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனகளுக்கு தாரை வார்க்கப் பட்டன. ஆற்று படுகைகளும் நிலத்தடி நீரும் கூட வியாபாரம் ஆக்கப்பட்டது. திடிரென்று வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் பறிக்கப் பட்ட மக்கள் கொந்தளித்தனர். மக்களுக்காக போராட விடுதலை இயக்கங்கள் பிறந்தன. அரசாங்கங்கள் விழித்து கொண்டன. ஊடகங்கள் மூலம் பாலியல் போதையிலும் பன்னாட்டு உற்ப்பத்தி பொருட்க்களை நுகரவும் செய்து மக்களை ஒருவித நிரந்தர போதையில் ஆழ்த்தின அரசாங்கங்கள்.

இப்போது அரசாங்கம் என்பது இருதரப்பால் ஆனது. பணக்கார வர்க்கமும் பன்னாட்டு முதலாளிகளும். எந்த அரசாங்கமாவது கொடுத்த வாக்கை மீறிவிட்டால் பணக்காரர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்தன. அவர்களின் வியாபாரங்களுக்கு தடையாக இருக்கும் மக்கள் கிளர்ச்சியை அடக்கவும் தங்களின் நிறுவனகளின் சொத்துகளைப் பாதுக்காக்கவும் தனது அடியாட்ப்படையை (ராணுவமும், காவர்த்துரையும்) பயன்படுத்திக்கொண்டன அரசாங்கங்கள். இதற்கென்றே அனைத்து தேசங்களும் ஒரு மாமா கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தன. அந்த மாமாக் கூட்டத்தினர்க்கு பெயர்தான் உளவுத்துறை. இந்த மாமாக்களுக்கு வேலையே பணக்கார வர்க்கத்தினை எதிர்ற்பவர்களையும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பவர்களையும் இறையாண்மை என்றபெயரில் வேட்டையாடுவதுதான். இதற்காக பன்னாட்டு முதலாளிகள் எலும்புத்துண்டுகளை இந்த மாமாக்களுக்கு இஷ்டம்போல் வீசி எறிந்தனர்.

இவ்வளவு போதையில் ஆழ்ந்திருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆதிக்க வர்க்கத்தினிடம் இருந்து மக்களைக் காக்க விடுதலை இயக்கங்கள் கடுமையாக போராடிக்கொண்டே இருக்கின்றன. இனி அரசாங்கங்கள் கோட்ப்பாடுகள் அனைத்தும் ஒன்றே. பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் தேர்ந்தடுத்த அமைப்பே அரசாங்கம். மூன்றாம் உலகப் போர் கண்டிப்பாக தேசங்களுக்கிடையே ஏற்ப்படாது இனி. ஆனால் கண்டிப்பாக மக்கள் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கும் பன்னாட்டு நிறுவனகளின் நாய்களான மாமா(உளவுத்துறை) கூட்டத்துக்கும் இடையேயான ஒரு போராகவே இருக்கும். ஆனால் இப்போர் மக்களுக்கு சாதகமாக இருக்கவிடிலும் பணக்காரர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துகளுக்கும் மிகப்பெரிய சேதாரத்தை உண்டுபண்ணுவதாக இருக்கும் என்று மட்டும் நம்பலாம்.

செவ்வாய், 3 நவம்பர், 2009

எல்லைச் சாமியும்...எச்சொதிகார சாமிகளும்..!

திரவிட நாகரிகத்தில் அவர்கள் வணங்கும் முறைகளும் அவர்களின் கடவுள்களும் முழுக்க முழுக்க இயற்க்கை சார்ந்ததாகவே இருந்தது. நீர்,நிலம்,காற்று,நெருப்பு,விலங்குகள்,மற்றும் செடிகொடிகள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் கடவுளாக கொண்டார்கள். இயற்கையின் மீதும் அதன் சக்திகளின் மீதும் மாறா மதிப்பும் பயமும் கொண்டிருந்தார்கள். அவர்களின் கடவுளுக்கு அவர்கள் உண்ணும் உணவினையே படைத்து வழிப்பட்டார்கள்.

ஆரியர்களின் வருகைக்கு முன் வரை திராவிட நாகரீகம் இவ்வாறே இருந்திருக்கிறது.மனித உருவ வழிபாடு அவர்களிடம் காணப் படவில்லை.ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப் படுத்திய போது மனித உருவங்கள் கடவுளாக வழிபட துவங்கிருக்கிறார்கள் திராவிடர்கள்.

ஆனால் காலப்போக்கில் திராவிட இனம் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாழ ஆரம்பித்தப் போது அக்குளுக்களையும் அவர்கள் சார்ந்த கால்நடைகள் மற்றும் விளைபயிர்களையும் பிற குழுக்களிடம் இருந்து காத்து நின்ற ,வென்ற காவலர்கள் அவர்களுடைய இறப்பிற்கு பின் குழுக்களின் குல தெய்வமாகவும் மற்றும் ஊரின் எல்லைச் சாமியாகவும் வணங்கப் பெற்றனர்.

இதில் முக்கியமான விஷயம் இந்த எல்லைச் சாமிகள் அனைத்தும் காவல் தெய்வங்கள் என்றே வணங்கப்படுகின்றன. இவைகளுக்கு உணவாக நெய்யும் வெண்ணையும் படைக்கப்படுவதில்லை..(தெய்வ குற்றமாகிவிடும்)....திராவிட உணவு பழக்கமான மாமிசமும் சாராயமும் படைக்கப்படுகின்றன. இந்தச் சாமிகளும் பெரும்பாலும் நிழலில் இருப்பதில்லை. வெயிலில் காய்ந்து கொண்டேதான் காவல் புரியும்.


எல்லைச் சாமியென்றால் எல்லையில்தான் இருக்கவேண்டும் என்று சட்டங்கள் வகுக்கப்படவில்லை. ஆயினும் எல்லையில்தான் திராவிடர்கள் வசிக்கனுமதிப்பட்டனர். ஆகவே அவர்களுக்கு மத்தியிலே இத்தெய்வங்களும் இருந்தன.காலப்போக்கில் அப்படியே ஆகிப்போனது. ஆரிய இனத்தின் எச்சொதிகார கடவுள்களுக்கு மத்தியில் அடிமை இனங்களின் கடவுள்கள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதை ஆதிக்க வர்க்கம் அனுமதிக்கவில்லை.அதனாலேயே பெரும்பாலும் எல்லாச் சாமிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் இந்த எல்லைச் சாமிகளோடு மக்கள் கொண்டுள்ள உளப்பூர்வமான நெருக்கம் எச்சொதிகார கடவுள்களுக்கு இம்மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆரியர்களின் வாழ்க்கை முறைப் போலவே அவர்களின் வணங்கும் முறையும் நம்மிடம் (திராவிட இனம்) இருந்து பெரிய மாறுதல்களைக் கொண்டிருந்தது. ஆனால் திராவிடக் கடவுள்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு சக்திவாய்ந்ததாக ஆரியக் கடவுள்கள் காண்பிக்கப் பட்டன. ஆதலால்தான் அவற்றின் வரலாறுகளைப் பார்த்தால்...அனைத்து கடவுள்களும் தேவலோகத்தில் இருந்தே தோன்றிருக்கும்.

மாறாக நமது எல்லைச் சாமிகளின் (சுடலைமாடன்,காத்தவராயன்,முனியசாமி,வனப்பேச்சி..) வரலாறுகளைப் பார்த்தால் அவை அனைத்தும் மனிதனாக பிறந்து சக மனிதனோடு போரிட்டு மடிந்து போய்விட்டிருக்கும். அவர்கள்(ஆரியர்கள்) திட்டமிட்டு செய்தார்களா அல்லது எத்தோச்சையாக செய்தார்களா என்று இன்றும் புரியாத தருணத்தில்....ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த(அடிமை) இனங்கள் அவர்களின் கடவுள்களைப் போலவே நடத்தப்பட்டனர்...அடிமைச் சங்கிலிகளும் இன்றும் அவ்வினத்தின் கைகளில் பூட்டப் பட்டிருக்கிறது.

ஆதிக்கச் சமூகத்தின் குருர முகம் கடவுள் வழிபாடுகளில் கூட தன கூரான பற்களைக் காண்பிக்கிறது. திராவிட மக்கள் ஒரு காலகட்டம் வரை ஆரிய இனத்தின் கடவுள்களை திரும்பிக் கூட பார்க்காமல் இருந்தனர். ஆனால் பின்பு நிலைமை தலைகீழாக மாறியது. அது நந்தனையே தீயிலிட்டு கொன்றுவிட்டு அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்று பொய்யுரை பரப்பும் அளவிற்கு சென்றது. அடிமை இனங்கள் எச்சொதிகார சாமிகளை கோவிலுக்கு வெளிய இருந்து மட்டும் வணங்க அனுமதிக்கும் வரை சென்றது. மூடப் பழக்கங்கள் பலவும் தோன்றி மூதாதையர்களை வணங்குவது கூட தப்பு, எச்சொதிகார சாமிகள் மட்டுமே நிஜம் என்றும் காக்கும் கடவுள் என்றும் பரப்பப்பட்டது.


யோசித்துப் பார்த்தால் திராவிட இனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டங்களுக்கு பொருள் புரியவில்லை. நாம் அவர்களின் எச்சொதிகார சாமிகளைப் புறக்கணித்து வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகட்க்கு பின்பு இழுத்துச் சென்றிருக்கவேண்டும் என்பதே எனக்குத் தோன்றுகிறது..!

வெள்ளி, 30 அக்டோபர், 2009

அனுமானத்தோடு கடந்து சென்ற பொழுதுகள்...!

வாழ்வின் எல்லா கட்டத்திலும் எல்லா உணர்வுகளையும் நம்மால் வெளிப்படுத்தி விட இயலாது....கடந்துபோன வயதைக் கணக்கிட்டு இனிமேல் நீ இப்படி இருக்கவேண்டும் ,இதைத் தெரிந்து செய்யலாம், இதை யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்ற வரையறைக்குள் சுருக்கப்பட்டு இதுவே சமுதாயம் எனச் சொல்லி சென்றுவிடுவார்கள்.

அன்பென்பதும் காதலென்பதும் அழகான உணர்வுகள்..ஆனால் இவிரு உணர்வுகளுக்கும் உள்ள சிறிய இடைவெளி இதுதான் - அன்பு குறிப்பிட்ட வரையறைகளுடன் சமுதாயத்தில் தெரிந்து செய்யலாம் கோட்ப்பாட்டின் கீழ் வந்துவிடும். காதல் வரையறைகளற்ற மற்றும் தெரியாமற் செய்யும் சமுதாயக் கோட்ப்பாட்டின் கீழ் வரும். மூலம் அல்லது பிரதானம் என்னவோ ஒன்றே ஒன்றுதான். ஆக அன்பில் நல்ல அன்பு கள்ள அன்பு என்பது கிடையாது...அதே போலத்தான் காதலும்..!

நிற்க. இதைப் போல சொல்லப்படாமலும் மற்றும் இப்படித்தான் இது முடிய வேண்டும் என்ற எண்ணஓட்டத்தோடு தவறவிடப்பட்ட, என் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரயிலில் திருநெல்வேலியில் ஏறினோம் நானும் என் நண்பன் சக்தியும். சக்தியின் தாய்மாமன் திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியின் டீன் ஆக உள்ளார். அவரைப் பார்க்கவே இந்த பயணம். அப்போது நான் கல்லூரி முடித்து விட்டு வேலை இல்லாமற் இருந்த காலகட்டம். பயணங்கள் மீது அலாதிப் பிரியம் உண்டு எனக்கும் சக்திக்கும். முடிவு செய்து முறையாக பணம் மற்றும் ஆடைகள் எடுத்துக் கொண்டு செல்லும் திட்டமிட்ட பயணங்கள் அல்ல அவை...போட்ட சட்டை கால்சாரயுடன் கையில் இருக்கும் காசு வைத்து, போகும் வரைக்கும் போவோம்...பிறகு எதாவது லாரியில் ஏறி மிச்ச தூரத்தை கடப்போம்...பல சமயம் பயணக் சீட்டு வாங்காமல் ரயில் பயணம். ஆனால் இம்முறை திட்டமிட்ட பயணம். விஷயம் இதுதான் சக்தி கப்பல் மாலுமியாக பயிற்சி பெற தேர்ச்சிபெற்றான்..அதற்குண்டான கட்டணத் தொகையை தாய் மாமன் தருவதாக உறுதியளித்ததால் இந்த பயணம்.

ரயில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி அடுத்த நிறுத்தத்திற்கு வந்திருந்தது. இறைமறுப்புக் கொள்கையைப் பற்றி தீவிரமாக அலசிக்கொண்டிருந்தோம் நானும் நண்பனும். அப்போதுதான் அவர்கள் ஏறினார்கள். கணவன் மனைவி மற்றும் அப்பெண்ணின் சகோதரன்.நானும் சக்தியும் எதிரெதிர் அமர்ந்திருந்தோம் என் பக்கத்தில் ஒருவர் அமரவும் ,சக்தியின் பக்கத்தில் இருவர் அமரவும் இடம் இருந்தது. கணவனும் சகோதரனும் சக்தியின் பக்கத்திலும் அப்பெண் என் பக்கத்திலும் அமர்ந்தார்கள். அவர்கள் இளந்தம்பதியர்.அப்பெண் முப்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பாள் என்பது என் கணிப்பு.இளம்பெண் ஒருவர் பக்கத்தில் இருப்பதால் சற்று இருக்கமாய் உணர்ந்தேன்...எங்கள் பேச்சு தடைப்பட்டு பின்பு வேறு தளங்களை நோக்கி சென்றது. நடுநிசி ஆனபோது அனைவரும் நித்திரையில் ஆழ்ந்தார்கள், என்னைத் தவிர..! பொதுவாக இரவை நான் ரசிப்பதுண்டு...அதிலும் பயணங்களின் போது இன்னும் கூடுதலாக.
உட்க்கார்ந்து கொண்டே தூங்குவது சிரமமான விஷயம்..வெகுநேரம் அப்படியே தூங்க முடியாது..சற்று ஒருக்களித்து தூங்க அப்பெண் எத்தனிக்கும் போது எனது தோள்கள் அவளுக்கு தலை வைக்க வாகாய் போனது. என் தோள்களில் சாய்ந்து கொண்டாள் ,சிறிது நேரங்கழித்து எனது புஜங்களை தன் இரு கைகளாலும் இறுக்கிக் கொண்டு தூங்கி போனாள்.மனதிற் கள்ளம் இல்லை. அவள் நித்திரையின் ஆழத்தில் இருக்கிறாள். பக்கத்தில் இருப்பது தனது ஆண்( கணவன்) என்ற நினைப்பிலே தூங்கிக் கொண்டிருக்கிறாள்..அவள் தூக்கத்தினைக் கெடுக்க நான் விரும்பவில்லை...அப்படியே விட்டுவிட்டேன்....ஆனால் மனதிற்குள் லேசான நெருடல் வந்தது...இப்போது அவள் கணவனோ அல்லது சகோதரனோ விழித்து பார்த்தால் என்னாகும்? தவறு என் மீதென்றாகுமா? அவள் தூங்கினாலென்ன உனக்கு கைகள் இல்லையா? அவளை விலக்கி விடலாமே என்ற கேள்வி எழுமோ என்று உள்ளூர ஒரு அச்சம் பரவியது.
தலையை பின்பக்கம்மாக சாயக் கொடுத்து மேலேறியும் விளக்கை பார்த்தவாறே தூங்க ஆரம்பித்தேன்...அது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி இருக்கும் என நினைக்கிறேன். காலைப் பொழுது புலர்ந்திருந்தது....ரயில் கேரளாவிற்குள் சென்றுகொண்டிருந்தது அப்பெண் என் தோள்களில் தூங்கிக் கொண்டிருந்தாள் முக்கால்வாசி பயணிகள் விழித்திருந்தார்கள். அந்தக் கணவனும் சகோதரனும் என்னைப் பார்த்தார்கள். சிநேகமாய் சிரித்தார்கள். சக்தி என்னையும் அப்பெண்ணையும் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டிருந்தான்? பின்பு மெல்ல நித்திரையில் இருந்து மீண்டாள் அப்பெண்..எதிரே கணவன் இருப்பதைப் பார்த்ததும் வெடுக்கென்று தன் கைகளை விடுவித்துக் கொண்டு ஒரு விதமான குற்ற உணர்விற்கு ஆட்ப்பட்டதைப் போல உணர்வுடன் மன்னிச்சிக்கோங்க என்றாள் எனை பார்த்து. அப்பொழுதுதான் அவளை முழுமையைப் பார்க்கிறேன்.. பேரழகி அவள். வெண்மைக்கும் பழுப்பு நிறத்திற்கும் இடையேயான ஒரு நிறம். ஆறு மணிநேரம் என் தோள்களில் தூங்கியதால் அவள் மீது நானறியாமல் ஒரு வித அன்பு தோன்றிருந்தது....முன்பு இருந்த ஒருவித இருக்க நிலை தகர்ந்து போய்விட்டிருந்தது....அவள் கணவன் வெளியே தெரியும் இயற்கை சூழலை ரசித்துக் கொண்டிருந்தான்..நான் அவளிடன் சொன்னேன் பரவாஇல்லை..களைப்பாக தோன்றினால் சாய்ந்து கொள்ளுங்கள் என்று என் தோள்களை தொட்டு காட்டினேன்...இயல்பாக சிரிப்பதைப் போன்று சிரித்து விட்டு தனது கணவனை கூப்பிட்டாள்...பின்பு அவனிடத்தில் உள்ள ஒரு பைல் போன்ற காகிகத கத்தைகளை வாங்கி என்னிடத்தில் கொடுத்தாள். பிரித்து பார்த்த போதுதான் தெரிந்தது அது அவளுடைய மருத்துவ சான்றிதல் என்று...அதில் அவளுக்கு மூளைப் புற்றுநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அதிர்ந்து போனேன். அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். அந்தக் கண்களில் இப்போது ஒருவித மென்மையான அன்பு இளையோடுவதைப் போலிருந்தது. அவளின் கணவன் என்னைப் பார்த்து முன்பை விட சிநேகமாக சிரித்தான்...அவள் என்னிடத்தில் இயல்பாக சற்று உரிமையோடு கூட பேசத் தொடங்கிருந்தாள். அவள் மேல் பரிதாபம்,பச்சாதாபம்,பரிகாசம்,அனுதாபம்,காமம்,அன்பு,காதல், என்ற வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத ஓருணர்வு பிறந்திருந்தது. சிகிச்சைக்காக அடிக்கடி திருவனந்தபுரத்திற்கு வருவதாகவும், சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் காணப் படுகிரதேன்றும் அவளின் கணவன் சொன்னான். ரயில் திருவனந்தபுரம் நிலையத்திற்கு வந்திருந்தது. அவர்கள் கொண்டு வந்த பைகள் ஆளுக்கொன்றாக் சக்தி அந்த சகோதரன் மற்றும் அவள் கணவன் தூக்கி கொண்டார்கள். அவளை நான் அழைத்து வருகிறேன் என்றேன் அவள் கணவனிடம்...கூட்டமா இருக்கு பத்திரமா அழைத்து வாருங்கள்'நு சொன்னான். கூட்டம் குறையும் வரையில் பெட்டியினுள்ளே அமர்ந்திருந்தோம் நானும் அவளும். பின்பு கூட்டம் வடியத் தொடங்கியபோது நான் அவளின் கரன்பற்றி எழுப்பினேன். எழுந்தவள் எண்ண நினைத்தாள் அல்லது எண்ண உணர்ந்தாள் என்று தெரியவில்லை அப்படியே என்னைக் கட்டிக் கொண்டாள். சில கணங்களுக்கு பிறகு என் கைகளும் கூட அவளை இறுக்கமாக அனைத்திருந்தது.. பின்பு கால்களை சிறிது எம்பி என் முன் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள் இவையனைத்தும் இரு நிமிடங்களில் நிகழ்ந்தவை.. பெட்டியை விட்டு அவளை இறக்கினேன். கைகூப்பி விடைபெற்றார்கள். அவள் கண்கள் குளமாக மாறியிருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டாள். வெவ்வேறு திசையில் நடக்க ஆரம்பித்தோம் நாங்களும் அவர்களும்..
தோளில் ஒரு கை விழவும் திரும்பினேன், அவளின் கணவன் நின்றிருந்தான். அவன் சொன்னது போல் சிகிச்சை ஒன்றும் முன்னேறிச் செல்லவில்லை என்றும் அவள் இப்போது அபாயக் கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும்...உள்ளூர் மருத்துவரை நம்பி இவ்வளவு காலமும் இருந்து விட்டதாகவும்...அவளின் தற்பொழுதைய நிலைமை அவளுக்கே தெரியாதெனவும் சொல்லி விடைப்பெற்றான். தூரத்தில் நின்று என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அவள்.










வேலை கிடைத்து சென்னை வந்த காலம் அது. கைப்பேசி.. டிஸ்கோ நடன அரங்குகள்.. பிர்ல்லியத்ஸ் கிளப்புகள்..சங்கிலித் தொடர் காபி கடைகள் என சென்னை மாநகரம் பெங்களூர் மற்றும் மும்பை நகரங்களுக்கு சவால் இட்டுக் கொண்டிருந்த நேரம். கண்ட கனவை நனவாக்கக் கூடிய ஒரு சாரரும்..கண்ட கனவே வாழ்க்கையாக கொண்ட ஒரு சாரர் என இரு வித மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு சிற்சில கனவோடு நானும் வந்திறங்கினேன்..வேலையில் சேர்ந்து மாதங்கள் ஆனா போதும் நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்ற உணர்வே ஏற்ப்பட்டதில்லை...வேலைப் பளு அப்படி..மேலும் ஊருரங்கும் நேரத்திற்கு வீடு வந்து ஊர் விழிக்கும் முன்பே வேலைக்கு போக வேண்டிய நேர அட்டவணை.

உற்ப்பத்தி துறையை விட்டு வெளிவரவேண்டும் என்றெண்ணம் மேலோங்கும் படி சில பிரச்சினைகள் உடலில் தோன்றியதால்..வேலையே விட்டு விட்டு மெக்கநிகல் காட் என்ற மென்பொருள் துணையுடன் இயந்திர வடிவமைப்பு படிப்பில் சேர்ந்தேன்.
மயிலாப்பூரில் ஆர்.கே சாலையில் உள்ள காட் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து பயின்று வர ஆரம்பித்தேன். இப்பொழுது சென்னை எனக்கு ஓரளவிற்கு பிடித்திருந்தது...பயிற்சி வகுப்பு பிடிக்கவில்லை என்றால் அனுமதி எடுத்து ஸ்பென்செர் சென்று ஒரு குளிர் காப்பி குடித்து வரும்போது கல்லூரி மாணவிகளை தரிசிப்பது சென்னையின் மீது ஒரு பிடிமானத்தை உண்டாக்கியது..எனது உந்துருளி வேறு விசேட சப்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப் பெற்றிருந்தது...

உற்சாகமாக நாட்கள் நகர்ந்தாலும் எனக்குள்ளும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது...அதுதான் பெண் நண்பிகள். பள்ளிநாட்க்களில் பெண்கள் என்னைக் கண்டால் பத்தடி தூரம் ஓடிப் போகிரளவிற்கு ரவுடித்தனம் செய்ததால் ஒரு பெண்ணும் என் மீது பார்வை பதிக்கவில்லை. அப்போதெல்லாம் அந்த வயதில்லேல்லாம் பசங்களுடன் சுற்றினால்தான் மாணவச் சமுதாயத்தில் மதிப்புண்டு (தென்னகத்தில்...இங்கு அப்படியே தலைகீழ்.) பெண்களுடன் சுற்றுபவன் எவனாவது மாட்டினால் போதும் அவ்வளவு பேரின் இயலாமையும்(பெண் நண்பிகள் தான் வேறென்ன..) அவனுக்கு தர்ம அடிகளாக விழும்...சமயத்தில் ரத்தக் களறியாகவும் மாறும் .

ஆனால் மனம் விட்டு பேசக்கூடிய தருணங்களில் எல்லோருடைய ஆழ்மனதிலும் ஒரு பெண்தோழி இருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. என்பதை அறிந்துகொண்டேன்...மேலும் குமுதமும் ஆனந்த விகடனும் அப்போது முழுமையாக சென்னையை குத்தகைக்கு எடுத்த மாதிரி ஒரே சென்னை மயமாய் இருக்கும் அதும் அழகான கல்லூரிப் பெண்கள் செய்தியாகவே இருக்கும்...இதெல்லாம் சேர்ந்து சென்னை பட்டினத்தில் தான் என்னவள் இருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் தந்து விட்டது எனக்கு.! ஆனால் நானும் வழக்கம் போல் ஒரு தென்னகத்து மாணவன் குணாதிசயங்களை கொண்டிருந்தேன் என்பதை இங்கு வந்த பின்பே உணர்ந்தேன்...ஆங்கிலமும் அதனூடான தமிழும் சென்னைப் பெண்களுக்கே உரிய கேலியும் கிண்டலும் என்னை பயமுரித்திற்று....தென்னகத்து பெண்கள் அனைவரும் குத்து விளக்குகள்....அப்படியே அவர்கள் கிண்டல் செய்தால் கூட அதையும் ரகசியமாகவே செய்வதைப் போன்று இருக்கும்....இங்கு தலைகீழாக எல்லாம் இருந்தது ஆதலால் பெண்களின் பக்கம் நெருங்காமலேயே காலம் சென்றுகொண்டிருந்தது...

இப்படியான ஒரு மழைக் காலத்தில் வகுப்பு அயர்ச்சி தந்ததால்...எதிரே வங்கியின் பின்புறமுள்ள தேநீர் விடுதிக்கு தேநீர் அருந்தச் சென்றேன்..அன்று நண்பர்கள் யாரும் வகுப்புகளுக்கு வராததால் தனியாகத்தான் வந்தேன்..மழை லேசாக தூறியதால் மழைபாகை அணிந்திருந்தேன்..தேநீர் அருந்திவிட்டு திரும்பும் வழியில் தான் அவளைப் பார்த்தேன்..வடஇந்திய முகச் சாயல்...ரொம்ப அழகு இல்லையென்றாலும் ஒருவித வசீகரம் அதிகமாக இருந்தது அவள் முகத்தில்...சில முகங்கள் நமக்கு யாரையோ நியாபகப் படுத்திவிடும் , அல்லது நியாபகப் படுத்த யோசிக்க வைக்கும்...இவளும் அதே மாதிரித்தான்...பரிட்சயமான முகம் போல இருக்க்கவே பார்த்துக் கொண்டே நடந்தேன்...அவளும் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு எதற்கோ காத்திருப்பவள் போல் நின்றாள் சில நொடிகள் தான் பார்த்திருப்பேன் அவளும் நானும் அறியாமல் ஒருவரை ஒருவர் புன்னகைக்க ஆரம்பித்தோம்...பின்பு சிரிப்பாக மலர்ந்தது ஏனோ உடல் மிதப்பது போல் ஒரு உணர்வு பரவியது...இப்பொழுது என் முன் இரண்டு வாய்ப்புகள். சாலையைக் கடந்து வகுப்பக்கு செல்வது அல்லது அப்பெண்ணிடம் சென்று பேசுவது....நொடிகள் யோசிப்பிர்க்கு பின் வேகமாக சாலையைக் கடந்து அந்தப் பக்கம் சென்றேன்.......சில விஷயங்களில் மௌனமே அழகு.
சாலையைக் கடந்து அங்கிருந்த பயணிகள் நிழற்க்குடயினுள் சென்று நின்று அவளைப் பார்த்தேன்..சற்று குழப்பம் அடைந்திருப்பாளோ என்றேன்னிகொண்டிருக்கும் போது கைகளால் என்னைப் பார்த்து சைகை செய்தாள்.. அவள் செய்த சைகைக்கு அர்த்தம் இப்படி இருக்க வேண்டும்- எனக்கும் உன்னைப் போல் மழை பிடிக்கும்.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

தமிழ் பாரம்பரிய உடை கலாச்சாரமும்...சக தமிழனும்.!

நெடு நாளாக மனதை உறுத்திய கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்...டால்மியா புறத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வீர சாகசம் புரிந்த தலைகளெல்லாம் ஆட்சி கட்டில் ஏறிய பிறகு அடங்கிப் போனது தமிழுணர்வு....

அதன் பிறகான நாட்க்களில் தமிழுணர்வு போலவே தமிழ் கலாச்சாரமும் சுருங்கத் தொடங்கி விட்டது.... தமிழன் மெல்ல மெல்ல தன் சுயத்தை இழக்கத் தொடங்கியபோது பாரம்பரிய உடைக் கலாச்சாரமும் மறைய ஆரம்பித்திருக்கிறது....குறிப்பாக தமிழின ஆண்களின் அதிலும் படித்த மத்திய தர வர்க்கத்தினரும் மேல் வர்க்கமும் தமிழருடை என்ற ஒன்றே மறந்து போனவர்களானார்கள்...ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி வடிவ சட்டை, மற்றும் பலவித நவின ரகங்களில் உடைகள் உலாவுகின்றன தமிழ் ஆண்கள் மத்தியில்.. இப்போது வேஷ்டி சட்டை அணிவதென்பது இரு சாரர் மட்டுமே...

அரசியல் கட்சிகாரர்கள் மற்றும் கிராமத்து தமிழர்கள்....(குறிப்பாக தென்னகத்து தமிழ் கிராமங்கள்) இதை விடக் கொடுமை தமிழ் இலக்கியவாதியும் எழுத்தாளரும் ஆனா ஒரு பிரபலம் புத்தகம் வாங்க தமிழுடையில் சென்றபோது புத்தக அன்காடியினுள் அனுமதிக்க மறுக்கப் பட்டிருக்கிறார்...வேறெங்கும் அல்ல...சென்னை மாநகரத்தில் தான் இந்த கூத்து அரங்கேறியிருக்கிறது...தமிழ் நாட்டில் தமிழுடை அணிந்தால் தவறா? உற்று நோக்கும் போது ஒரு விடயம் புலனாகின்றது..அது வேறொன்றும் அல்ல தன்னை தானே தாழ்த்திக் கொள்வதில் பேரானந்தம் அடையும் தமிழன் தன் உடையை மட்டும் விரும்புவானா என்ன? இதில் முதற் பங்கு தமிழ் சினிமாவிருக்கு உண்டு...தமிழ் திரையில் தோன்றும் கதைநாயகன் கதைநாயகியின் மேற்க்கத்திய உடையை கேலி பேசி தமிழ் பண்பாட்டுடன் கூடிய உடையை உடுத்த சொல்வான்...அவளும் மனம் மாறி தமிழுடைக்கு (தாவணி மற்றும் சேலை...) மாறி விடுவாள்...உடனே நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் பிறந்து விடும்...பின்பு கதை நாயகியின் குண்டிகளில் இடித்து பாட்டு பாடுவான் காதல் செய்வான்...இவ்வளவையும் செய்யும் அந்தக் காவாலிப் பயலின்( கதையின் நாயகன் தான் ) உடை என்னவோ மேற்க்கத்திய பாணியில் தான் இருக்கும்....ஏன் இவன் வேஷ்டி சட்டை அணிந்து அதை சொல்ல வேண்டியதுதானே... சமீபத்தில் நண்பனின் திருமண விழாவில் கலந்து கொள்ள வேஷ்டி சட்டையில் சென்றிருந்தேன்..மண்டபத்தின் வாயிலில் நின்ற பெண் சந்தனத்தை நீட்டவும்..நெற்றியில் சிறிது இட்டுக் கொண்டு உள் சென்றேன்...என்னை வரவேற்ற நண்பனின் சகோதரி (இப்பொழுதான் முதன் அறிமுகம்)
கேட்டாள்.. நீங்க மலையாளியா?? தூக்கி வாரிப் போட்டது அவளின் கேள்வி...அவளிடமே காரணம் கேட்டேன்...அவளின் பதில் இப்படி- மலையாளிங்கதான் விழாக் காலங்களிலும் பண்டிகைக் காலங்களிலும் தங்கள் பாரம்பரிய உடை அணிவார்கள் அதான் கேட்டேன் என்றாள்...யோசித்து பார்க்கையில் உண்மை என்றே தோன்றுகிறது....யோசித்து சொல்லுங்கள் நீங்கள் எத்தனை பேர் சமீபத்தில் வேஷ்டி அணிந்தீர்கள்..அல்லது வாங்கினீர்கள்???? கணுக்கால் வரையிலும் மறைக்கும் மிக நாகரிகமான மற்றும் வசீகரமான இவ்வுடையை வெறுக்க காரணம் என்ன? இவ்விஷயத்தில் தமிழ் பெண்கள் போற்றும் ரகத்திலேயே இருக்கிறார்கள்...அவர்கள் முழுதாக மேற்க்கத்திய உடைக் கலாச்சாரத்திற்கு ஆட்படவில்லை..(ஆணாதிக்கம் காரணமாக கூட இருக்கலாம்).....இன்றும் அதிநவீன கைகடிகாரம் உந்துருளி ( BIKE ) அல்லது மகிள்வூர்த்தி (car ) வைத்து கொண்டு வேஷ்டி சட்டையில் கல்லூரி போகும் மலையாளிகளை சர்வசாதாரணமாய் கேரளாவில் காணலாம்...ஆனால் தமிழகக் கல்லூரிகளில் வேஷ்டியில் செல்வது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கல்லூரிகள் மட்டுமே! ...உலகில் தோன்றிய அனைத்து இனங்களும் தங்களுடைய அடையாளங்களை போற்றி பாது காக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் போது தமிழினம் மட்டும் தன் அடையாளங்களை பாரம்பரியத்தை மறுப்பதும் மறைப்பதும் ஏனோ ?? !!

அனைவருக்கும் வணக்கம்

நான் புதிதாக வலைப் பதிவு கணக்கைத் தொடங்கி உள்ளேன்..இதற்க்கு முன்பு பல பதிவர்களின் பதிவிற்கு பின்னூட்டம் மட்டும் இட்டு வந்துள்ளேன்....ஓரளவிற்கு பதிவுலகம் சார்ந்த பரிட்சயம் ஆனா பிறகு வலைப் பதிவராகலாம் என்ற எண்ணத்திற்கு இன்று செயல் வடிவம் கொடுத்துள்ளேன்...பதிவுலகத்தில் உள்ள ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள்....இந்த இளையவனை பதிவராக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவன்போடு வேண்டும் சக தமிழன்.
இவன்,
லெமூரியன்.