வெள்ளி, 30 அக்டோபர், 2009

அனுமானத்தோடு கடந்து சென்ற பொழுதுகள்...!

வாழ்வின் எல்லா கட்டத்திலும் எல்லா உணர்வுகளையும் நம்மால் வெளிப்படுத்தி விட இயலாது....கடந்துபோன வயதைக் கணக்கிட்டு இனிமேல் நீ இப்படி இருக்கவேண்டும் ,இதைத் தெரிந்து செய்யலாம், இதை யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்ற வரையறைக்குள் சுருக்கப்பட்டு இதுவே சமுதாயம் எனச் சொல்லி சென்றுவிடுவார்கள்.

அன்பென்பதும் காதலென்பதும் அழகான உணர்வுகள்..ஆனால் இவிரு உணர்வுகளுக்கும் உள்ள சிறிய இடைவெளி இதுதான் - அன்பு குறிப்பிட்ட வரையறைகளுடன் சமுதாயத்தில் தெரிந்து செய்யலாம் கோட்ப்பாட்டின் கீழ் வந்துவிடும். காதல் வரையறைகளற்ற மற்றும் தெரியாமற் செய்யும் சமுதாயக் கோட்ப்பாட்டின் கீழ் வரும். மூலம் அல்லது பிரதானம் என்னவோ ஒன்றே ஒன்றுதான். ஆக அன்பில் நல்ல அன்பு கள்ள அன்பு என்பது கிடையாது...அதே போலத்தான் காதலும்..!

நிற்க. இதைப் போல சொல்லப்படாமலும் மற்றும் இப்படித்தான் இது முடிய வேண்டும் என்ற எண்ணஓட்டத்தோடு தவறவிடப்பட்ட, என் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரயிலில் திருநெல்வேலியில் ஏறினோம் நானும் என் நண்பன் சக்தியும். சக்தியின் தாய்மாமன் திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியின் டீன் ஆக உள்ளார். அவரைப் பார்க்கவே இந்த பயணம். அப்போது நான் கல்லூரி முடித்து விட்டு வேலை இல்லாமற் இருந்த காலகட்டம். பயணங்கள் மீது அலாதிப் பிரியம் உண்டு எனக்கும் சக்திக்கும். முடிவு செய்து முறையாக பணம் மற்றும் ஆடைகள் எடுத்துக் கொண்டு செல்லும் திட்டமிட்ட பயணங்கள் அல்ல அவை...போட்ட சட்டை கால்சாரயுடன் கையில் இருக்கும் காசு வைத்து, போகும் வரைக்கும் போவோம்...பிறகு எதாவது லாரியில் ஏறி மிச்ச தூரத்தை கடப்போம்...பல சமயம் பயணக் சீட்டு வாங்காமல் ரயில் பயணம். ஆனால் இம்முறை திட்டமிட்ட பயணம். விஷயம் இதுதான் சக்தி கப்பல் மாலுமியாக பயிற்சி பெற தேர்ச்சிபெற்றான்..அதற்குண்டான கட்டணத் தொகையை தாய் மாமன் தருவதாக உறுதியளித்ததால் இந்த பயணம்.

ரயில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி அடுத்த நிறுத்தத்திற்கு வந்திருந்தது. இறைமறுப்புக் கொள்கையைப் பற்றி தீவிரமாக அலசிக்கொண்டிருந்தோம் நானும் நண்பனும். அப்போதுதான் அவர்கள் ஏறினார்கள். கணவன் மனைவி மற்றும் அப்பெண்ணின் சகோதரன்.நானும் சக்தியும் எதிரெதிர் அமர்ந்திருந்தோம் என் பக்கத்தில் ஒருவர் அமரவும் ,சக்தியின் பக்கத்தில் இருவர் அமரவும் இடம் இருந்தது. கணவனும் சகோதரனும் சக்தியின் பக்கத்திலும் அப்பெண் என் பக்கத்திலும் அமர்ந்தார்கள். அவர்கள் இளந்தம்பதியர்.அப்பெண் முப்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பாள் என்பது என் கணிப்பு.இளம்பெண் ஒருவர் பக்கத்தில் இருப்பதால் சற்று இருக்கமாய் உணர்ந்தேன்...எங்கள் பேச்சு தடைப்பட்டு பின்பு வேறு தளங்களை நோக்கி சென்றது. நடுநிசி ஆனபோது அனைவரும் நித்திரையில் ஆழ்ந்தார்கள், என்னைத் தவிர..! பொதுவாக இரவை நான் ரசிப்பதுண்டு...அதிலும் பயணங்களின் போது இன்னும் கூடுதலாக.
உட்க்கார்ந்து கொண்டே தூங்குவது சிரமமான விஷயம்..வெகுநேரம் அப்படியே தூங்க முடியாது..சற்று ஒருக்களித்து தூங்க அப்பெண் எத்தனிக்கும் போது எனது தோள்கள் அவளுக்கு தலை வைக்க வாகாய் போனது. என் தோள்களில் சாய்ந்து கொண்டாள் ,சிறிது நேரங்கழித்து எனது புஜங்களை தன் இரு கைகளாலும் இறுக்கிக் கொண்டு தூங்கி போனாள்.மனதிற் கள்ளம் இல்லை. அவள் நித்திரையின் ஆழத்தில் இருக்கிறாள். பக்கத்தில் இருப்பது தனது ஆண்( கணவன்) என்ற நினைப்பிலே தூங்கிக் கொண்டிருக்கிறாள்..அவள் தூக்கத்தினைக் கெடுக்க நான் விரும்பவில்லை...அப்படியே விட்டுவிட்டேன்....ஆனால் மனதிற்குள் லேசான நெருடல் வந்தது...இப்போது அவள் கணவனோ அல்லது சகோதரனோ விழித்து பார்த்தால் என்னாகும்? தவறு என் மீதென்றாகுமா? அவள் தூங்கினாலென்ன உனக்கு கைகள் இல்லையா? அவளை விலக்கி விடலாமே என்ற கேள்வி எழுமோ என்று உள்ளூர ஒரு அச்சம் பரவியது.
தலையை பின்பக்கம்மாக சாயக் கொடுத்து மேலேறியும் விளக்கை பார்த்தவாறே தூங்க ஆரம்பித்தேன்...அது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி இருக்கும் என நினைக்கிறேன். காலைப் பொழுது புலர்ந்திருந்தது....ரயில் கேரளாவிற்குள் சென்றுகொண்டிருந்தது அப்பெண் என் தோள்களில் தூங்கிக் கொண்டிருந்தாள் முக்கால்வாசி பயணிகள் விழித்திருந்தார்கள். அந்தக் கணவனும் சகோதரனும் என்னைப் பார்த்தார்கள். சிநேகமாய் சிரித்தார்கள். சக்தி என்னையும் அப்பெண்ணையும் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டிருந்தான்? பின்பு மெல்ல நித்திரையில் இருந்து மீண்டாள் அப்பெண்..எதிரே கணவன் இருப்பதைப் பார்த்ததும் வெடுக்கென்று தன் கைகளை விடுவித்துக் கொண்டு ஒரு விதமான குற்ற உணர்விற்கு ஆட்ப்பட்டதைப் போல உணர்வுடன் மன்னிச்சிக்கோங்க என்றாள் எனை பார்த்து. அப்பொழுதுதான் அவளை முழுமையைப் பார்க்கிறேன்.. பேரழகி அவள். வெண்மைக்கும் பழுப்பு நிறத்திற்கும் இடையேயான ஒரு நிறம். ஆறு மணிநேரம் என் தோள்களில் தூங்கியதால் அவள் மீது நானறியாமல் ஒரு வித அன்பு தோன்றிருந்தது....முன்பு இருந்த ஒருவித இருக்க நிலை தகர்ந்து போய்விட்டிருந்தது....அவள் கணவன் வெளியே தெரியும் இயற்கை சூழலை ரசித்துக் கொண்டிருந்தான்..நான் அவளிடன் சொன்னேன் பரவாஇல்லை..களைப்பாக தோன்றினால் சாய்ந்து கொள்ளுங்கள் என்று என் தோள்களை தொட்டு காட்டினேன்...இயல்பாக சிரிப்பதைப் போன்று சிரித்து விட்டு தனது கணவனை கூப்பிட்டாள்...பின்பு அவனிடத்தில் உள்ள ஒரு பைல் போன்ற காகிகத கத்தைகளை வாங்கி என்னிடத்தில் கொடுத்தாள். பிரித்து பார்த்த போதுதான் தெரிந்தது அது அவளுடைய மருத்துவ சான்றிதல் என்று...அதில் அவளுக்கு மூளைப் புற்றுநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அதிர்ந்து போனேன். அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். அந்தக் கண்களில் இப்போது ஒருவித மென்மையான அன்பு இளையோடுவதைப் போலிருந்தது. அவளின் கணவன் என்னைப் பார்த்து முன்பை விட சிநேகமாக சிரித்தான்...அவள் என்னிடத்தில் இயல்பாக சற்று உரிமையோடு கூட பேசத் தொடங்கிருந்தாள். அவள் மேல் பரிதாபம்,பச்சாதாபம்,பரிகாசம்,அனுதாபம்,காமம்,அன்பு,காதல், என்ற வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத ஓருணர்வு பிறந்திருந்தது. சிகிச்சைக்காக அடிக்கடி திருவனந்தபுரத்திற்கு வருவதாகவும், சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் காணப் படுகிரதேன்றும் அவளின் கணவன் சொன்னான். ரயில் திருவனந்தபுரம் நிலையத்திற்கு வந்திருந்தது. அவர்கள் கொண்டு வந்த பைகள் ஆளுக்கொன்றாக் சக்தி அந்த சகோதரன் மற்றும் அவள் கணவன் தூக்கி கொண்டார்கள். அவளை நான் அழைத்து வருகிறேன் என்றேன் அவள் கணவனிடம்...கூட்டமா இருக்கு பத்திரமா அழைத்து வாருங்கள்'நு சொன்னான். கூட்டம் குறையும் வரையில் பெட்டியினுள்ளே அமர்ந்திருந்தோம் நானும் அவளும். பின்பு கூட்டம் வடியத் தொடங்கியபோது நான் அவளின் கரன்பற்றி எழுப்பினேன். எழுந்தவள் எண்ண நினைத்தாள் அல்லது எண்ண உணர்ந்தாள் என்று தெரியவில்லை அப்படியே என்னைக் கட்டிக் கொண்டாள். சில கணங்களுக்கு பிறகு என் கைகளும் கூட அவளை இறுக்கமாக அனைத்திருந்தது.. பின்பு கால்களை சிறிது எம்பி என் முன் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள் இவையனைத்தும் இரு நிமிடங்களில் நிகழ்ந்தவை.. பெட்டியை விட்டு அவளை இறக்கினேன். கைகூப்பி விடைபெற்றார்கள். அவள் கண்கள் குளமாக மாறியிருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டாள். வெவ்வேறு திசையில் நடக்க ஆரம்பித்தோம் நாங்களும் அவர்களும்..
தோளில் ஒரு கை விழவும் திரும்பினேன், அவளின் கணவன் நின்றிருந்தான். அவன் சொன்னது போல் சிகிச்சை ஒன்றும் முன்னேறிச் செல்லவில்லை என்றும் அவள் இப்போது அபாயக் கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும்...உள்ளூர் மருத்துவரை நம்பி இவ்வளவு காலமும் இருந்து விட்டதாகவும்...அவளின் தற்பொழுதைய நிலைமை அவளுக்கே தெரியாதெனவும் சொல்லி விடைப்பெற்றான். தூரத்தில் நின்று என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அவள்.










வேலை கிடைத்து சென்னை வந்த காலம் அது. கைப்பேசி.. டிஸ்கோ நடன அரங்குகள்.. பிர்ல்லியத்ஸ் கிளப்புகள்..சங்கிலித் தொடர் காபி கடைகள் என சென்னை மாநகரம் பெங்களூர் மற்றும் மும்பை நகரங்களுக்கு சவால் இட்டுக் கொண்டிருந்த நேரம். கண்ட கனவை நனவாக்கக் கூடிய ஒரு சாரரும்..கண்ட கனவே வாழ்க்கையாக கொண்ட ஒரு சாரர் என இரு வித மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு சிற்சில கனவோடு நானும் வந்திறங்கினேன்..வேலையில் சேர்ந்து மாதங்கள் ஆனா போதும் நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்ற உணர்வே ஏற்ப்பட்டதில்லை...வேலைப் பளு அப்படி..மேலும் ஊருரங்கும் நேரத்திற்கு வீடு வந்து ஊர் விழிக்கும் முன்பே வேலைக்கு போக வேண்டிய நேர அட்டவணை.

உற்ப்பத்தி துறையை விட்டு வெளிவரவேண்டும் என்றெண்ணம் மேலோங்கும் படி சில பிரச்சினைகள் உடலில் தோன்றியதால்..வேலையே விட்டு விட்டு மெக்கநிகல் காட் என்ற மென்பொருள் துணையுடன் இயந்திர வடிவமைப்பு படிப்பில் சேர்ந்தேன்.
மயிலாப்பூரில் ஆர்.கே சாலையில் உள்ள காட் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து பயின்று வர ஆரம்பித்தேன். இப்பொழுது சென்னை எனக்கு ஓரளவிற்கு பிடித்திருந்தது...பயிற்சி வகுப்பு பிடிக்கவில்லை என்றால் அனுமதி எடுத்து ஸ்பென்செர் சென்று ஒரு குளிர் காப்பி குடித்து வரும்போது கல்லூரி மாணவிகளை தரிசிப்பது சென்னையின் மீது ஒரு பிடிமானத்தை உண்டாக்கியது..எனது உந்துருளி வேறு விசேட சப்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப் பெற்றிருந்தது...

உற்சாகமாக நாட்கள் நகர்ந்தாலும் எனக்குள்ளும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது...அதுதான் பெண் நண்பிகள். பள்ளிநாட்க்களில் பெண்கள் என்னைக் கண்டால் பத்தடி தூரம் ஓடிப் போகிரளவிற்கு ரவுடித்தனம் செய்ததால் ஒரு பெண்ணும் என் மீது பார்வை பதிக்கவில்லை. அப்போதெல்லாம் அந்த வயதில்லேல்லாம் பசங்களுடன் சுற்றினால்தான் மாணவச் சமுதாயத்தில் மதிப்புண்டு (தென்னகத்தில்...இங்கு அப்படியே தலைகீழ்.) பெண்களுடன் சுற்றுபவன் எவனாவது மாட்டினால் போதும் அவ்வளவு பேரின் இயலாமையும்(பெண் நண்பிகள் தான் வேறென்ன..) அவனுக்கு தர்ம அடிகளாக விழும்...சமயத்தில் ரத்தக் களறியாகவும் மாறும் .

ஆனால் மனம் விட்டு பேசக்கூடிய தருணங்களில் எல்லோருடைய ஆழ்மனதிலும் ஒரு பெண்தோழி இருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. என்பதை அறிந்துகொண்டேன்...மேலும் குமுதமும் ஆனந்த விகடனும் அப்போது முழுமையாக சென்னையை குத்தகைக்கு எடுத்த மாதிரி ஒரே சென்னை மயமாய் இருக்கும் அதும் அழகான கல்லூரிப் பெண்கள் செய்தியாகவே இருக்கும்...இதெல்லாம் சேர்ந்து சென்னை பட்டினத்தில் தான் என்னவள் இருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் தந்து விட்டது எனக்கு.! ஆனால் நானும் வழக்கம் போல் ஒரு தென்னகத்து மாணவன் குணாதிசயங்களை கொண்டிருந்தேன் என்பதை இங்கு வந்த பின்பே உணர்ந்தேன்...ஆங்கிலமும் அதனூடான தமிழும் சென்னைப் பெண்களுக்கே உரிய கேலியும் கிண்டலும் என்னை பயமுரித்திற்று....தென்னகத்து பெண்கள் அனைவரும் குத்து விளக்குகள்....அப்படியே அவர்கள் கிண்டல் செய்தால் கூட அதையும் ரகசியமாகவே செய்வதைப் போன்று இருக்கும்....இங்கு தலைகீழாக எல்லாம் இருந்தது ஆதலால் பெண்களின் பக்கம் நெருங்காமலேயே காலம் சென்றுகொண்டிருந்தது...

இப்படியான ஒரு மழைக் காலத்தில் வகுப்பு அயர்ச்சி தந்ததால்...எதிரே வங்கியின் பின்புறமுள்ள தேநீர் விடுதிக்கு தேநீர் அருந்தச் சென்றேன்..அன்று நண்பர்கள் யாரும் வகுப்புகளுக்கு வராததால் தனியாகத்தான் வந்தேன்..மழை லேசாக தூறியதால் மழைபாகை அணிந்திருந்தேன்..தேநீர் அருந்திவிட்டு திரும்பும் வழியில் தான் அவளைப் பார்த்தேன்..வடஇந்திய முகச் சாயல்...ரொம்ப அழகு இல்லையென்றாலும் ஒருவித வசீகரம் அதிகமாக இருந்தது அவள் முகத்தில்...சில முகங்கள் நமக்கு யாரையோ நியாபகப் படுத்திவிடும் , அல்லது நியாபகப் படுத்த யோசிக்க வைக்கும்...இவளும் அதே மாதிரித்தான்...பரிட்சயமான முகம் போல இருக்க்கவே பார்த்துக் கொண்டே நடந்தேன்...அவளும் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு எதற்கோ காத்திருப்பவள் போல் நின்றாள் சில நொடிகள் தான் பார்த்திருப்பேன் அவளும் நானும் அறியாமல் ஒருவரை ஒருவர் புன்னகைக்க ஆரம்பித்தோம்...பின்பு சிரிப்பாக மலர்ந்தது ஏனோ உடல் மிதப்பது போல் ஒரு உணர்வு பரவியது...இப்பொழுது என் முன் இரண்டு வாய்ப்புகள். சாலையைக் கடந்து வகுப்பக்கு செல்வது அல்லது அப்பெண்ணிடம் சென்று பேசுவது....நொடிகள் யோசிப்பிர்க்கு பின் வேகமாக சாலையைக் கடந்து அந்தப் பக்கம் சென்றேன்.......சில விஷயங்களில் மௌனமே அழகு.
சாலையைக் கடந்து அங்கிருந்த பயணிகள் நிழற்க்குடயினுள் சென்று நின்று அவளைப் பார்த்தேன்..சற்று குழப்பம் அடைந்திருப்பாளோ என்றேன்னிகொண்டிருக்கும் போது கைகளால் என்னைப் பார்த்து சைகை செய்தாள்.. அவள் செய்த சைகைக்கு அர்த்தம் இப்படி இருக்க வேண்டும்- எனக்கும் உன்னைப் போல் மழை பிடிக்கும்.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

தமிழ் பாரம்பரிய உடை கலாச்சாரமும்...சக தமிழனும்.!

நெடு நாளாக மனதை உறுத்திய கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்...டால்மியா புறத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வீர சாகசம் புரிந்த தலைகளெல்லாம் ஆட்சி கட்டில் ஏறிய பிறகு அடங்கிப் போனது தமிழுணர்வு....

அதன் பிறகான நாட்க்களில் தமிழுணர்வு போலவே தமிழ் கலாச்சாரமும் சுருங்கத் தொடங்கி விட்டது.... தமிழன் மெல்ல மெல்ல தன் சுயத்தை இழக்கத் தொடங்கியபோது பாரம்பரிய உடைக் கலாச்சாரமும் மறைய ஆரம்பித்திருக்கிறது....குறிப்பாக தமிழின ஆண்களின் அதிலும் படித்த மத்திய தர வர்க்கத்தினரும் மேல் வர்க்கமும் தமிழருடை என்ற ஒன்றே மறந்து போனவர்களானார்கள்...ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி வடிவ சட்டை, மற்றும் பலவித நவின ரகங்களில் உடைகள் உலாவுகின்றன தமிழ் ஆண்கள் மத்தியில்.. இப்போது வேஷ்டி சட்டை அணிவதென்பது இரு சாரர் மட்டுமே...

அரசியல் கட்சிகாரர்கள் மற்றும் கிராமத்து தமிழர்கள்....(குறிப்பாக தென்னகத்து தமிழ் கிராமங்கள்) இதை விடக் கொடுமை தமிழ் இலக்கியவாதியும் எழுத்தாளரும் ஆனா ஒரு பிரபலம் புத்தகம் வாங்க தமிழுடையில் சென்றபோது புத்தக அன்காடியினுள் அனுமதிக்க மறுக்கப் பட்டிருக்கிறார்...வேறெங்கும் அல்ல...சென்னை மாநகரத்தில் தான் இந்த கூத்து அரங்கேறியிருக்கிறது...தமிழ் நாட்டில் தமிழுடை அணிந்தால் தவறா? உற்று நோக்கும் போது ஒரு விடயம் புலனாகின்றது..அது வேறொன்றும் அல்ல தன்னை தானே தாழ்த்திக் கொள்வதில் பேரானந்தம் அடையும் தமிழன் தன் உடையை மட்டும் விரும்புவானா என்ன? இதில் முதற் பங்கு தமிழ் சினிமாவிருக்கு உண்டு...தமிழ் திரையில் தோன்றும் கதைநாயகன் கதைநாயகியின் மேற்க்கத்திய உடையை கேலி பேசி தமிழ் பண்பாட்டுடன் கூடிய உடையை உடுத்த சொல்வான்...அவளும் மனம் மாறி தமிழுடைக்கு (தாவணி மற்றும் சேலை...) மாறி விடுவாள்...உடனே நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் பிறந்து விடும்...பின்பு கதை நாயகியின் குண்டிகளில் இடித்து பாட்டு பாடுவான் காதல் செய்வான்...இவ்வளவையும் செய்யும் அந்தக் காவாலிப் பயலின்( கதையின் நாயகன் தான் ) உடை என்னவோ மேற்க்கத்திய பாணியில் தான் இருக்கும்....ஏன் இவன் வேஷ்டி சட்டை அணிந்து அதை சொல்ல வேண்டியதுதானே... சமீபத்தில் நண்பனின் திருமண விழாவில் கலந்து கொள்ள வேஷ்டி சட்டையில் சென்றிருந்தேன்..மண்டபத்தின் வாயிலில் நின்ற பெண் சந்தனத்தை நீட்டவும்..நெற்றியில் சிறிது இட்டுக் கொண்டு உள் சென்றேன்...என்னை வரவேற்ற நண்பனின் சகோதரி (இப்பொழுதான் முதன் அறிமுகம்)
கேட்டாள்.. நீங்க மலையாளியா?? தூக்கி வாரிப் போட்டது அவளின் கேள்வி...அவளிடமே காரணம் கேட்டேன்...அவளின் பதில் இப்படி- மலையாளிங்கதான் விழாக் காலங்களிலும் பண்டிகைக் காலங்களிலும் தங்கள் பாரம்பரிய உடை அணிவார்கள் அதான் கேட்டேன் என்றாள்...யோசித்து பார்க்கையில் உண்மை என்றே தோன்றுகிறது....யோசித்து சொல்லுங்கள் நீங்கள் எத்தனை பேர் சமீபத்தில் வேஷ்டி அணிந்தீர்கள்..அல்லது வாங்கினீர்கள்???? கணுக்கால் வரையிலும் மறைக்கும் மிக நாகரிகமான மற்றும் வசீகரமான இவ்வுடையை வெறுக்க காரணம் என்ன? இவ்விஷயத்தில் தமிழ் பெண்கள் போற்றும் ரகத்திலேயே இருக்கிறார்கள்...அவர்கள் முழுதாக மேற்க்கத்திய உடைக் கலாச்சாரத்திற்கு ஆட்படவில்லை..(ஆணாதிக்கம் காரணமாக கூட இருக்கலாம்).....இன்றும் அதிநவீன கைகடிகாரம் உந்துருளி ( BIKE ) அல்லது மகிள்வூர்த்தி (car ) வைத்து கொண்டு வேஷ்டி சட்டையில் கல்லூரி போகும் மலையாளிகளை சர்வசாதாரணமாய் கேரளாவில் காணலாம்...ஆனால் தமிழகக் கல்லூரிகளில் வேஷ்டியில் செல்வது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கல்லூரிகள் மட்டுமே! ...உலகில் தோன்றிய அனைத்து இனங்களும் தங்களுடைய அடையாளங்களை போற்றி பாது காக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் போது தமிழினம் மட்டும் தன் அடையாளங்களை பாரம்பரியத்தை மறுப்பதும் மறைப்பதும் ஏனோ ?? !!

அனைவருக்கும் வணக்கம்

நான் புதிதாக வலைப் பதிவு கணக்கைத் தொடங்கி உள்ளேன்..இதற்க்கு முன்பு பல பதிவர்களின் பதிவிற்கு பின்னூட்டம் மட்டும் இட்டு வந்துள்ளேன்....ஓரளவிற்கு பதிவுலகம் சார்ந்த பரிட்சயம் ஆனா பிறகு வலைப் பதிவராகலாம் என்ற எண்ணத்திற்கு இன்று செயல் வடிவம் கொடுத்துள்ளேன்...பதிவுலகத்தில் உள்ள ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள்....இந்த இளையவனை பதிவராக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவன்போடு வேண்டும் சக தமிழன்.
இவன்,
லெமூரியன்.