திங்கள், 12 செப்டம்பர், 2011

சைக்கிள் காலங்கள்..!



சைக்கிள்..!
70 களின் மத்தியில் இருந்து 80பதின் இறுதி வரைக்கும் பிறந்தவர்களின் பருவ வயது காதல் இந்த சைக்கிள்.!
ஆனால் என்னுடைய காதல் அதுவல்ல..அடுத்த பதிவில் சொல்கிறேன் என்னுடைய காதல் எதுவென்று..

ஆனால் என்னுள் மறையாத பசுமையான சைக்கிள் காலங்கள் இன்னும் இருக்கின்றது..பொதுவாக இரண்டு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள் கொஞ்சம் வசதியான குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்(அந்த காலத்தில்) அரசாங்க உத்யோகத்தில் என் தந்தைக்கு அவ்வளவு பணம் நிற்கவில்லை கைகளில். ஆக எனக்கு சைக்கிள் 7 வயதில்தான் அறிமுகம். ஆனால் சைக்கிள் பற்றிய கனவு உள்ளுக்குள் ஊற ஆரம்பித்தது மூன்று வயதில். அப்பா அலுவலகம் முடித்து இரவு வீடு வந்த உடன் என்னுடைய முதல் வேலை..அப்பாவுடைய சைக்கிளில் டைனமோ உயிர்பிக்கும் பொத்தானை அழுத்தி டைனமோவை சைக்கிள் டயரில் உராயவிட்டு பின் பெடல்களை வேகமாக சுற்றுவேன்...பளீரென எறியும் முன் விளக்குகளை பார்க்கும்போது பரவசம் பரவும் அவ்வயதில்.

மண்ணெண்ணெய் ஊற்றி திரியிட்டு தீ கொளுத்தி கொள்ளும் வகை முன் விளக்குகளும் அப்பொழுது பார்த்திருக்கிறேன். சுவாரசியமான தகவல் சொல்லவா? அப்பொழுது முன்விளக்குகள் பொருத்தாத சைக்கிள்களை போக்குவரத்து காவலர்கள் பிடித்து அபராதம் போட்டு விடுவார்கள். மேலும் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொள்ளும் சம்பவங்கள் சாதரணமாக நடக்கும். இப்பொழுது சீரிசெல்லும் பைக்குகளை காணும்போது நம்மக்களின் சாலை அறிவு முன்னேறியிருப்பதை அறிய முடிகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா என எடுத்தேன் என் முதல் சைக்கிளை. பெரிதாக யாருடைய துணையுமின்றி இரண்டே நாட்களில் கற்றுக் கொண்டேன். இறக்கை முளைத்ததை போல உணர்த்த தருணம் அது. குறைந்தது இரண்டு மணிநேரம் சைக்கிள் ஒட்டவில்லை என்றால் கை கால் ஓடாது என்னும் நிலைக்கு போய்விட்டேன். இப்பொழுது போல அந்த காலத்தில் வாகன நெரிசல் கிடையாது என்பதால்..சாயந்திர நேரத்தில் சக நண்பர்களுடன் பந்தயம் வைத்து கொண்டு வேகமாக வண்டியோட்டியாக வந்தது இன்னும் பசுமையாக மனதினில். ஒரு பெரிய கல்லை போட்டு வேகமாக வந்து அதன்மீதேறி பரந்த படி சைக்கிளில் தாவுவது ஒரு சாகசம். தவறி விழுந்து இடுப்பில் அடிபட்டு ரத்தகளறியாக வீடு சென்றதும் நினைவிற்குள் வருகிறது..!

பின்பு சடாரென ராணுவ பள்ளிக்கு சென்றதால் சைக்கிள் சாகசங்கள் முடிவுக்கு வந்தது. ஆனால் அவை நெடு நாட்கள் நீடிக்கவில்லை. நான்காண்டுகளில் அப்பள்ளியை விட்டு வெளியேறி மீண்டும் நெல்லைக்கு வந்த பொழுது சைக்கிள் மீது ஒரு அன்பு மிஞ்சி இருந்தது. ஆனால் காதல் இல்லை. நெல்லையில் ஒரு பள்ளியில் சேர்ந்த இரண்டாவது நாள் அப்பா என்னைக் கூட்டிச் சென்ற இடம் ஒரு சைக்கிள் விற்பனை நிலையம். என்ன சைக்கிள் வேண்டும் என்ற பொழுது நான் சொன்னது BSA.SLR. கருப்பு வண்டி என்னுடையது.வண்டி வாங்கிக் கொண்டு வீடிற்கு வந்த உடனே பக்கத்துக்கு வீட்டு ரிட்டயர்டு போலிஸ் தாத்தா வந்தார். தினமும் சைக்கிளை எப்படி என்னை ஊற்றி துடைத்து வைக்க வேண்டும் என்று வகுப்பெடுத்தார். அந்தகாலத்து மனிதர்கள் சைக்கிளை துடைத்து வைப்பதை ஒரு கலையாகவே கொண்டிருந்தனர். முதல் இரண்டு நாட்கள் மட்டுமே துடைத்து வைத்தேன். பின்பு இது என்னுடைய சைக்கிள் என்ற மனநிலை மட்டும்தான் இருந்தது. அதை துடைத்து பராமரிக்க வேண்டும் என்பது மனதில் நிற்கவில்லை.

பதின்ம வயது என்பதால் மற்ற எந்த விஷயத்தையும் விட பெண்களே அதிமுக்கியமாக தெரிந்தனர். பள்ளி விட்டதும் ரோஹிணியை பின்தொடர்வதுதான் என் தலையாய பணி. பருவடையும் வரை சகஜமாக பேசிதிரிந்தவள்தான் இவள்.ராணுவப் பள்ளியில் இருந்து ஒவ்வொரு விடுமுறைக்கு வரும்பொழுதும் அவளுடன் கொஞ்சம் அதிகமாகவே நேரம் செலவழிப்பேன். ஆனால் நான் ஒரேடியாக இங்கு திரும்பி வரும்பொழுது அவளிடம் நிறைய மாற்றம். என்னை பார்த்த உடன் வரும் குறும்பான சிரிப்பை காணவில்லை. தலைகுனித்து செல்கிறாள். பெயர் சொல்லியளைத்தால் நிற்காமல் சென்று விட்டாள். பின்பு தொடங்கியதுதான் இந்த சைக்கிள் பின்தொடர்தல். பேசிக்கொள்ளவே மாட்டோம். சமயங்களில் சாலையில் ஆள் அரவமற்று இருந்தால் அவள் அருகே சென்று பேசுவேன். சமயங்களில் காதல் மொழி கூட சொல்வேன். தலைகுநிதவாறே அவள் சைக்கிளில் வந்து கொண்டிருப்பாள். முதலில் சற்று வேகமாக போக எண்ணினாள். நானும் அவள் வேகத்திற்கு ஈடுகொடுக்க...பின்பு வேகம் பற்றிய என்னத்தை கை விட்டாள்.

ஆனாலும் நான் அவளை தொடர்வதை சமயங்களில் சிறிதே புன்னகை செய்து ரசிப்பதாக தெரிவித்தாள். கனவினில் எல்லாம் அவள் மட்டுமே. முதன்முதலாக அவள் தாவணி கட்டிக் கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு ஒரு சனிக்கிழமை மாலை போகும் போது ஆள் அரவமற்ற சாலையில் வைத்து அவளில் இடுப்பை கிள்ளி விட்டேன். கண்கள் கலங்கிய படி சொன்னாள் இனி என் பின்னால் வராதே என்று. அதோடு அவள் என்னை பார்ப்பதை கூட தவிர்க்க ஆரம்பித்தாள். வலிகளோடு முடிந்து போன ஒரு முதல் காதலை உயிர் கொடுக்க முயன்று தோற்றது எனது BSA.SLR.

பின்பு பல பெண்களை காதல் தொல்லை கொடுக்க எனக்கு உற்ற தோழனாக என் SLR இருந்தாலும் ஓராண்டிற்குள்ளாகவே எனக்கு அப்பா TVS.CHAMP வாங்கிக் கொடுத்து விட்டார். அதே காலத்தில் தான் நம் பெண்கள் எல்லாம் SUNNY ஓட்ட ஆரம்பித்தனர். பிரச்சினை என்ன வென்றால்..CHAMPஐ விட SUNNY வேகமாக செல்லும். இந்த பெண்கள் வேறு வண்டியில் பையன்கள் துரத்தினால் இன்னும்வேகமாக செல்வார்கள். ஆனாலும் விடக் கூடாது என மனம் சொல்லி துரத்திய தேவதைகள் இரண்டு.

அதிலும் மென்மையான சித்ரா மேல் எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது. காமராஜ் மெட்ரிக் பள்ளியில் இருந்து அவள் கிளம்பிய உடன் நானும் அவளை பின்தொடர்வேன். எங்காவது ஜன நடமாட்டம் கம்மியான பகுதியில் அவள் வண்டியின் முன்சென்று நிறுத்தி அவளை சற்று நிலைகுலைய செய்து அவள் வண்டியின் சாவியை உருவி விடுவேன். பின்பு அவள் தலை குனித்து அழுத படியே நா TUTION போகணும் LATEஆ போன அம்மா திட்டுவாங்க சாவிய குடுங்க என்று கெஞ்சுவாள். என்னிடம் பேசு. உன் VOICE எவ்ளோ நல்ல இருக்கு தெரியுமா என்பேன்.(சற்று சைக்கோ தனமாக இருந்திருக்கிறேன் அப்பொழுது என நினைக்கிறேன்).

சில நாட்கள் இந்த கெஞ்சலும் அழுகையுமாக அவளுக்கு பொழுது போய்க்கொண்டிருந்தது. பின்பு சிலநாட்கள் சித்துவை(செல்லமா சித்ராவை அப்டிதான் கூப்பிடுவேன்) காணவில்லை. பின்பு ஒரு நாள் பள்ளிக்கு வந்திருக்கிறாள் என அவள் வகுப்பு நண்பர்கள் கொடுத்த தகவலின் படி அவள் வருகைக்காக காத்திருந்து பொழுது வந்தது அவளும் அவளுடன் ஒரு நடுத்தர வயதுடைய அழகிய பெண்ணும். சித்ராவின் அம்மா என அறிமுகபடுத்திக் கொண்டார்கள். எனக்கு கை காலெல்லாம் சற்று நடுங்க ஆரம்பித்து விட்டது. சித்ரா படிக்கனும்பா..பப்ளிக் பரீட்சை வேற நல்ல மார்க் எடுத்தாதான் நல்ல குரூப் கிடைக்கும். அவள இனி தொந்தரவு பண்ணாதப்பா. என்றார்கள். சாரி ஆண்டி என்றேன். அதோடு அவள் படிக்கட்டும் என்று விட்டு விட்டேன். பெட்ரோலுக்கு அதிகமாக காசு செலவழிக்கிறேன் என்றும் அதிவேகமாக வண்டி ஒட்டுகிறேன் என்றும் என் மீது பிராது கொடுக்க பட்டதால் மீண்டும் சைக்கிள் காலத்திற்கே வந்தேன். ஆனால் இப்பொழுது பெட்ரோலுக்கு ஈடாக கிடைத்த பாகெட் மணியை சேமிக்க ஆரம்பித்தேன். பின்பு தான் கரடி பானம்(BEER) என்னுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தது.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறு சற்று நிறம் மங்கிப் போயிருந்தது என்னுடைய SLR. பெண்களை துரத்தும் பொழுது சங்கிலி கழண்டு போவதும், மழை நேரத்தில் அவசரமாக பெடல் போடும்போது காற்று இறங்குவதும் என என் SLR என்னை இம்சித்து கோபமேர்ப்படுதியிருக்கிறது. இருந்தாலும் என் உலகத்தில் எனக்கான மனிதர்களை வரிசை படுத்த முயன்றால் முதலில் வந்து நிற்கிறது என் SLR.

90களிலும் அதற்க்கு பின் வந்த சந்ததிகளும் எங்களைப்போல (70 களின் கடைசியிலிருந்து 90களின் பாதி வரையில்) சைக்கிள் காலங்கள் கொண்டவர்கள் குறைவே என்று நினைக்க தோன்றுகிறது இன்றைக்கு உள்ள வாகன நெருக்கடிகளும் குறுகிய சாலைகளும்.