புதன், 30 ஜூன், 2010

சில நினைவுகள் கொல்கிறேன்..!

கருத்து பிழை எழுத்து பிழை என முடிவெடுக்க வேண்டாம் தலைப்பை பார்த்த மாத்திரத்தில்..! இதை பகிர வேண்டும் என்று நெடு நாள் எண்ணம் இருந்தாலும் வேலை பளு மற்றும் கொஞ்சம் ஆர்வமின்மை காரணம்...ஆனால் இன்று படித்த இரண்டு பதிவுகளின் தாக்கம் இதில் வரும் சில சம்பவங்கள்...! பதிவை படித்து முடிக்கும் பொழுது உங்களுக்கு தலைப்பு சரியே என்று தோன்றலாம்!

அப்பொழுது முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தாக நியாபகம்...அசோக் என்னுடன் பயிலும் சகா...எனக்கு உற்ற தோழன்..! வாரயிறுதி நாட்களில் அசோக் வீட்டிலேயே நிறைய பொழுது களியும்...ஆரம்பத்தில் அவன் வீட்டிற்க்கு செல்லும்பொழுதெல்லாம் அங்கேயே மதிய உணவு முடித்து விடுவேன்...அவன் வீட்டில் ஒரு வயதான் பாட்டியும் உண்டு...ஒரு முறை அவன் வீட்டிற்க்கு விளையாட சென்றிருந்த பொழுது பாட்டி கேட்டது நீங்க தெலுங்கா என்று? இல்லை தமிழ் மட்டுமே தெரியும் என்றேன்...(திருநெல்வேலி மற்றும் அந்த சுற்று புறங்களில் நாயக்கர் இனம் வெகுவாக உண்டு) அப்டியா என்று சில நிமிட மௌனத்திற்கு பிறகு நீங்க என்ன ஜாதி என்று கேட்டது.....உண்மையிலேயே அப்பொழுது எனக்கு என் ஜாதி என்னவென்று தெரியாது.... தெரியாது என்பது என் பதிலாக இருக்க....பாட்டிக்கு எப்படியாவது என் ஜாதியை அறிய குறுகுறுப்பு அதிகமாயிருக்க வேண்டும்....

உங்க அப்பாவுக்கு எந்த ஊர் என்று கேட்கவும் அம்பாசமுத்திரம் என்றேன்...அங்கே எந்த தெரு என்றது பாட்டி.....முடபாலம் என்று சொல்லவும் பாட்டியின் முகம் சுருங்கி போய்விட்டது....சேரிப்பையன் என சப்தம் போட்டு சொல்லிக் கொண்டே உள்ளே சென்றது....நானும் அசோக்கும் விளையாட ஆரம்பிக்கும் நேரம் வீட்டினுள் நிறைய சப்தம்..பாட்டிக்கும் அசோக் அம்மாவிற்கும் சண்டையாகி விட்டது என்னை வீட்டினுள் அனுமதிததர்க்காக ......

அசோக் அம்மா சொன்னது பையன் செவப்பா இருக்கனே...அவனுக எப்போ இவ்ளோ கலரா இருந்திருகாணுக என்றது....தலித்துகள் கருப்பாக மட்டுமே இருப்பார்கள் என்பது பொது பார்வை அல்லவா....எனது மூதாதையர்கள் மலையில் வசித்தவர்கள்....இன்றும் கூட மலைவாசி இனங்களில் நிறமுடயவர்களை காண முடியும்....சிவப்பாக பிறந்தது என் குற்றமும் அல்ல...

விஷயம் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.....தண்ணீர் தாகம் என்று அசோக் அம்மாவிடம் சொன்ன பொழுது முன்பு கொடுத்த எவர்சில்வர் குவளைக்கு பதில் ஒரு பழைய பிளாஸ்டிக் குவளையில் தண்ணீர் தந்தார்கள்....அந்த குவளை அசுத்தமாகவும் நிறைய இடங்களில் கீரல்களோடும் இருந்தது....ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று மட்டும் ஊகிக்க முடிந்தது......ஆனால் என்ன என்பது மட்டும் தெளிவில்லை.....தண்ணீர் குடிக்க மனமில்லை....ஆனாலும் பார்த்து கொண்டிருக்கிறார்களே என்று குடித்து விட்டு குவளையை கொடுக்கும் பொழுது அசோக் அம்மா சொன்னது வெளியேவே இருக்கட்டும் என்று...அதோடு இனிமே நீ உங்க வீட்டிலேயே விளையாடு சரியா என்றபடிக்கு அசோக்கை உள்ளே இழுத்து சென்று விட்டது.....

நிறைய அவமானமாய் இருந்தது வீட்டிற்க்கு வராதே என்று சொன்னது....அம்மாவிடம் வந்து நடந்ததை சொன்ன பொழுது அம்மா இனி நீ அங்கே போக வேண்டாம் என்று மட்டும் சொல்லி முடித்துகொண்டார்கள்..! பின்பு கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில் எல்லாம் பிடிபட ஆரம்பித்தது....! அப்பொழுதுதான் ஒரு அதிர்சிகரமான விஷயமும் தெரியவந்தது....எனக்கு விவரம் தெரிந்த வரை நாங்கள் குடியிருந்த பகுதிகளனைத்தும் உயர்சாதியினர் அல்லது அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் வாழும் பகுதியாகவே இருந்தது....விஷயம் இதுதான் வாடகைக்கு வீடு பார்க்கும்பொழுதெல்லாம் உரிமையாளர் என்ன சாதி என்று கேட்க்கும் பொழுது என் தந்தை உயர்சாதி என்றே சொல்லி இருக்கிறார் என பின்பு தெரிந்து கொண்டேன்...! பின்பு என் தந்தை அரசு ஊழியர் சங்க தலைவர் ஆனா பொழுது பரவலாக சாதிய அடையாளத்துடனே அறியப்பட்டார்...!


ஆனால் நான் பத்தாம் வகுப்பு பயிலும் போதெல்லாம் நண்பர்களின் வீட்டிற்க்கு சென்று உணவு உண்பதெல்லாம் சாதாரணம் ஆகிப்போனது....சாதி என்று ஏதும் பார்க்கவில்லை எவரும்....உள்ளே இருந்தது ஆனால் உள்ளே மட்டுமே...! எனக்கு ஆதிக்க சாதியில் நிறைய நண்பர்களுண்டு...! அவர்களின் ஒரே ஆச்சிரியம் என் நிறம் மட்டுமே..! என் சக தலித் தோழர்கள் கூட என்னை வெள்ளை பறையன் என்றே அழைப்பார்கள் கிண்டலுடன்...! பாப்பனியம் என்று எந்தளவிற்கு பேசுகிறோமோ அந்தளவிற்கு மாறுபட்ட நிறைய பார்ப்பன நண்பர்களும் கூட எனக்குண்டு.....அவர்கள் வீட்டில் இனம் வேறுபாடு எப்பொழுதும் கண்டதில்லை நான்..!

இருந்தாலும் ஒரு சோற்று பதம் கூட நான் கிடையாது என்பதற்கிணங்க விஷயங்கள் நடைபெறுகிறது.....இன்றும் வட தமிழகம் முழுவதிலும் இரட்டை குவளை முறை மற்றும் உயர் சாதியினர் தெருக்களில் தலித்துகள் செருப்பணிய தடை என்று இன்று கூட இருநூறு வருடத்திற்கு முந்தய பாரம்பரியத்துடந்தான்??????? இருக்கிறது தமிழகம்...!மக்களின் மனதில் மாற்றம் கொண்டு வரவேண்டிய போராட்ட காரர்கள் எல்லாம் கொள்கை விற்று வாழும் நிலையில்...மாற்றம் என்பது சிறு மனிதாபிமானமாக ஆதிக்க சக்திகளின் இதயத்தில் தோன்றினால் கூட போதும் .....மிகப்பெரிய சமூக மாற்றம் கண்ணுக்கு தென்படும் சாத்தியக் கூறுகள் உண்டு...! இரண்டாயிரம் ஆண்டுகள் நாங்க இப்படிதான் என்று சொல்லி மீசையை நீவிக் கொள்வதிலோ அல்லது நெஞ்சினில் தொங்கும் நூல் கற்றைகளை பெருமையாக பார்ப்பதிலோ நீங்கள் சாதித்ததோ அல்லது சாதிக்க போவதோ எதுவுமில்லை..!