புதன், 30 டிசம்பர், 2009

பறத்தலை பற்றிய ஆர்வத்துடனும் கனவுகளோடும்
நாங்கள்....

மற்றவைகள் பறக்கும் முயற்சிகளில்....கனவுகள் துணை
கொண்டு உயரே பறக்கிறேன்..

ஆசைகளனைத்தும் மேகக்கூட்டமாய் மேலே...அள்ளி
பருகும் ஆவலுடன் நான்...

எதோ ஒரு உறுத்தலில் கடந்து வந்த உயரத்தை காண
நேர்ந்த போது

கனவுகளின் துணை கொண்டு ஏக்கங்களின் வெளிப்பாடாக
எட்டப் பட்ட உயரம்..

கனவுகளின் மேல் கோபம் கொள்கிறது தன்னம்பிக்கை.....
சிறகொடிந்து தரையில் நான்...

காமம் பருகி கை விட்டு செல்லும் காதலிகள்...நேற்று வரை
வேலையற்று

இன்று வேலையிலிருக்கும் நண்பனின் பாசமிகு
அறிவுரைகள்...

பார்வைகள் கேள்விகள் கேலிகள்..துளைத்து தூவம்சித்து கள்(கல்)
எறியும் சமுதாயம்...

இம்முறை நம்பிக்கை துணை கொண்டு பறக்க எத்தனிக்கிறேன்
பலமடைந்த சிறகோடு...

பறத்தலின் அவசியமும் கனவுகளின் நிதர்சனமும் புரிந்து....அடுத்த
நொடி நோக்கி பறக்கிறேன்.......

நம்பிக்கையோடு.

திங்கள், 21 டிசம்பர், 2009

அம்பாசமுத்திரமும் ஒரு ஆரிய , திராவிட காதலும்....!

அது 1920 களின் மத்தி.....அம்பாசமுத்திரம் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பின் திருவனந்தபுறம் சமஸ்தானத்திற்குட்பட்டு இருந்த காலம்...ஆக்ராகரங்களும், நிறைய விளைநிலங்களும்.......அதையொட்டிய சேரி பகுதிகளும் ........என்று ஒரு கட்டமைப்பை கொண்டிருந்தது அப்போதைய அம்பாசமுத்திரம். ஐயங்கார், பிள்ளைமார், தேவர், மற்றும் தலித் மக்கள் பரவியிருந்தனர் அம்பையின் சுற்றுவட்டத்தில்....அங்கிருந்த பெரும்பாலான விளை நிலங்கள் ஐயன்கார்களிடமும் பிள்ளை சமூகத்திடமும் மீதி உள்ள நிலங்கள் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் சொந்தமாக இருந்தது...

தேவரினத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நிலங்களை நிர்வகிப்பவர்களாக இருந்தார்கள்....அங்குள்ள தலித் மக்கள் அனைவரும் விவசாய கூலிகளாக இருந்தார்கள்....மேலோட்டமாக பார்க்கும் போது அடக்கு முறை அதிகமாக தென்படுவதை போல் ஒரு பிம்பம் இருந்தாலும்..நெல்லை சீமையை பொறுத்த வரை தொழில் ரீதியாக ஒருவருக்கொருவர் இணைந்து இருக்க வேண்டிய சூழ்நிலை.......குறிப்பாக தலித் விவசாய கூலிகள்..அவர்களை நிர்வகிப்பவர்களாக தேவரினத்தை சேர்ந்தவர்கள்.....

அம்பாசமுத்திரத்தை பொறுத்த வரை தலித் கூலிகள் அனைவரும் அங்குள்ள விளை நிலங்களை சுற்றியே குடியேறியிருந்தனர்...அவர்கள் மாற்றுடை இல்லாவிடிலும் நிதமும் இரு வேளை குளிக்க பழகியிருந்தனர்....தேகத்திலும் தலை மயிரிலும் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொண்டனர்....வேப்பங்குச்சியில் பல் துலக்கவும் கற்றிருந்தனர்..! மேற்சொன்ன விடயங்களெல்லாம் ஒரு சராசரி தலித் செய்ய மாட்டான் என்பதே பொதுவாக ஆதிக்க வர்க்கத்தின் பார்வையாக இருந்தது......விளை நிலங்களை ஒட்டியே கிளை ஆறுகள் பாசனத்திற்காக ஓடும்....ஆக அங்குள்ள தலித்களுக்கு பொது தண்ணீர் என்ற பிரச்சனை எழவில்லை...

அம்பாசமுத்திரத்தின் ஒரு ஓரம் உள்ள பகுதிதான் தலித் மக்கள் வாழும் முடப்பாலம்....அங்கே உள்ள விவசாய கூலிகளில் ஒருவன்தான் செல்லையா...பொதுவாக அந்த பகுதியில் உள்ள தலித் இளைஞர்களெல்லாம் கடும் உழைப்பும் அதற்கேற்ற வாறு உணவு உட்கொள்ளும் பழக்கம் கொண்டதால் கட்டுடல்களையும் வலுவான கைகளும் கொண்டிருந்தனர்....இளவட்டக் கல் இன்றும் முடப்பாலத்தில் இருக்கிறது......



செல்லையாவும் அதில் விலக்கல்ல....களையான முகவெட்டும் பணிவான பேசும் குணமும்....மாநிறம் உடையவன் தான் செல்லையா.....அதிக அளவில் விளைநிலங்களை உடைய ஐயங்கார் மட்டுமே நில நிர்வகிர்ப்பிர்க்கு தேவர்களை நியமித்தனர்..ஓரளவு நிலம் உடைய ஐயங்கார் நிலசுவான்கலேல்லாம் நேரிடையாக முடப்பால இளைஞர்களிடமே தங்கள் நிலத்தை ஒப்படைத்து பண்ணையம் செய்து வந்தனர்....அந்த தலித் இளைஞர்களும் மிகுந்த பயபக்தியுடனும் விசுவாசத்துடனும் நடந்து கொண்டனர் தங்கள் எஜமானர்களுக்கு.......... இப்படி நேரிடையாக விவசாயம் செய்து வந்த தலித் இளைஞர்கள் ஆக்ராகாரத்தினுள் சிறப்பு அனுமதி பெற்றிருந்தனர்...சில கட்டுப்பாடுகளோடு.......கால்களில் செருப்பு அணிய கூடாது......மற்றும் மேலாடை அல்லது தோள்களில் துண்டு அணியக் கூடாது....இடுப்பில் இருந்து முட்டு வரை இறுக்கிக் கட்டிய வேட்டியுடன் அகன்ற மார்புகளுடனும் இந்த தலித் இளைஞர்கள் அக்ராகரத்தினுள் செல்லும்போது அங்கு பெண்கள் பெரும்பாலும் வெளியில் நிற்ப்பதில்லை.....ஆனால் மாடியில்ருந்து நிறைய மான்விழிகள் ரசித்தவண்ணம் இருந்தன........இந்த இளைஞர்கள் ஐயங்கார் ஆண்களை சாமி என்றும்....அந்த வீட்டு பெண்களை தாயி என்றும் அழைத்தனர்....



சிறப்பு அனுமதி பெற்ற முடப்பாலத்து இளைஞர் பட்டாளத்தில் செல்லையாவும் ஒருவன்...செல்லையா நன்றாக பாட்டு பாடும் திறனும் பெற்றிருந்தான்....வயல் வேலை முடிந்ததும் குளித்து விட்டு, இறக்கிய கள்ளை குடித்து பாட்டு பாடி மகிழ்வது அங்குள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு...


செல்லையாவின் எஜமானருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே........தெய்வானை என்ற பெயர்.....தேவதை போலிருப்பவள் அவள்......நாட்டியமும் வாய்ப்பாட்டும் தேர்ச்சி பெற்றிருந்தாள்....செல்லையாவை விட ஐந்து வயது சிறியவள் அவள்.......செல்லையாவின் விசுவாசம் ரொம்பவே அந்த எஜமானரை கவர தொடர்ந்து அவனே அவர் வயல்களை பார்த்துக் கொண்டான்.....எஜமானரின் வீட்டின் பின்புறம் ஒரு அறையில் ஐயங்கார் வீட்டு சாதமும் பரிமாறப்பட்டது அவனுக்கு.....அந்த வீட்டு பெண்களை முகம் பார்த்து பேசும் அளவிற்கு உரிமை பெற்றிருந்தான் செல்லையா......வகைதொகை இல்லாமல் ஊளைச்சதயுடன் அமைப்பற்ற தேகம்கொண்டும்...கல்வி கற்ற செருக்கில் சம்ப்ரதாய முறைப்படி நடந்து கொண்ட ஐயங்கார் வீட்டு இளைஞர்கள் மத்தியில் கட்டுடலுடன் மாநிறமான ஒருவன் எண்ணெய் வழியும் முகத்துடன் நாட்டுபுற பாட்டு பாடி காண்பிப்பதை தெய்வானை மிகவும் ரசித்தாள்.......அவளையுமறியாமல் செல்லையாவின் மேல் ஒரு ஈடுபாடு வந்திருந்தது....

அதன்பிறகான நாட்களில் செல்லையா அக்ராகரத்தில் நுழையும்போதே தண்ணீர் செம்புடன் காத்திருப்பாள் தெய்வானை.....வீட்டின் பின்புறம் அவன் வந்ததும் அவள் தண்ணீர் ஊற்ற தன் கைகளை குழிவு செய்து அதில் தண்ணீர் நிரம்ப பருகினான் செல்லையா.....நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதிலிருந்து அவர்கள் வீட்டு மாடுகளை மேய்த்து பின்பு தொழுவத்தில் கட்டுவது என பெரும்பாலும் செல்லையாவின் நேரம் தெய்வானை வீட்டிலேயே கழிந்தது.....இப்டியான காலத்தில்தான் தெய்வானைக்கு விவாகம் நடத்த பேச்சு நடக்க ஆரம்பித்தது அவர்கள் வீட்டில்...ஆழ்வார் திருநகரியில் உள்ள அவர்கள் சொந்த கார மாப்பிளை பேசி முடித்திருந்தனர்...
அடுத்தடுத்த நாட்களில் தெய்வானை முகம் கருப்பதை கண்ட செல்லையா ஒரு மாலை பொழுதில் காரணம் கேட்க......கதறி அழுத தெய்வானை செல்லையாவை நேசிப்பதை சொன்ன உடன்.....நொறுங்கிப் போனான் செல்லையா.....பதிலற்று போன செல்லையா பின்பு நிதானமாக தெயவானயிடம் இப்படி சொன்னான்.....நீங்கல்லாம் நாங்க கும்புட்ற சாமிக்கு சமம்.....சாமிய எப்டி ஒரு மனுஷன் கல்யாணம் பண்ண முடியும்?? அப்டி ஒரு எண்ணமே எவ்வளவு பெரிய பாவம். என்று சொன்ன செல்லையா உடனே வீடு திரும்பி படுத்துக் கிடந்தான்.....அடுத்த நாள் அங்கு செல்வதை பற்றி மிகுந்த யோசனை கொண்ட செல்லையா இறுதியாக போக முடிவெடுத்தான்...

அங்கு சென்ற பொழுது எஜமானரும் அவரின் துணைவியாரும் திருமணம் சம்மந்தமாக வேலைகளுக்கு வெளியில் சென்றிருந்தனர்....தெய்வானைக்கு துணையாக ஒரு வயதான பாட்டி மட்டும்...செல்லையாவை கண்ட தெய்வானை ஒரு முடிவுக்கு வந்தவளாக தனது துணிமணிகளை ஒரு சேலையில் கட்டி கொண்டு கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்.........என்னை மனம் செய்துகொள் என்று செல்லையாவிடம் தெய்வானை கேட்ட பொழுது, அவளின் கால்களில் விழுந்து விட்டான் செல்லையா.... ..
விஷயத்தை செல்லையா தன் தகப்பன் கசமாடனிடம் சொல்ல கலவரமான கசமாடன்....மூட்டை முடிச்சிகளுடன் செல்லையாவை பாபநாச மலை வழியே கேரளம் செல்லும் வழியின் ஊடாக கேரளம் அனுப்பி வைத்தான்....,,,கசமாடனே அதற்குபிறகு தேவானையின் வீட்டு வயல்களை பார்த்து கொண்டார்...தெய்வானைக்கு நிச்சயித்த மாப்பிள்லையுடனே விவாகம் நடந்தேறியது.........நான்கு வருடம் கழித்து கேரளத்தில் இருந்து வந்த செல்லயாவிர்க்கு 25 வயதில் தன்னுடைய தாய்மாமன் பெண்ணையே மனம் முடித்து கொண்டான்..

(2006 இல் ஜூலை மாதத்தில் தன்னுடைய 96 வயதில் இறந்துபோனார் என்னுடைய பாட்டன் செல்லையா, அந்த ஆரிய பெண்ணின் காதலுக்கு விடை சொல்லாமலே....)

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வரையறைக்குள் வாராத கவிதைகள்????

காலி மது கோப்பைகளும், சுவைத்தது போக மீதங்களுடன் கங்காக கனன்று கொண்டிருக்கும் கஞ்சாவும்......என் அறையில் தனியாக நான்....இதை தனிமை என்று நான் நினைக்கவில்லை.......மதுவும், சிவ பானமும்(கஞ்சா) என்னை அந்த சூழ்நிலையை ரம்மியமாக அனுபவிக்க கற்று கொடுத்திருக்கின்றது.......இதன் காரணமாகவே அலுவலகங்களில் வார இறுதியில் நடக்கும் கேளிக்கை விருந்தில் பங்கேற்க மாட்டேன் ஹைதராபாத் போன புதிதில்..

கொச்சியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் சொராய் கடற்க்கரை விடுதியில் ஆடைகளற்று நாங்கள் -நான், அவள். என் மார்பில் முகம் புதைத்த வாறு அவள்...
நெஞ்சில முடி இருந்த எனக்கு ரொம்ப பிடிக்கும்டா....உனக்கு ஏன் இல்லை???
கேரளா பெண்கள் தமிழ் பேசுவது தேவதைகள் நேரிலே வந்து பேசுவது போலிருக்கும்.இவள் பார்க்கவே தேவதை போலிருப்பாள்.பேசுவதும் அப்படியே... ஒரு நண்பியின் மூலம் அறிமுகம் இவள்...ஜிஷா என்றால் தேவதையின் குழந்தை என்று அர்தம் சொல்வாள்....உண்மையாகவே இருக்க வேண்டும்...ஆனால் தான் பேரழகி என்பதில் மிக அதிக கர்வம் கொள்வாள்....
பால்ய வயதில் தேவதைகளை துரத்தியலைந்ததால் அந்த கர்வம் எனக்கு இயல்பாகவே பட்டது......
விடை பெரும் தருவாயில் நேரிலோ அல்லது தொலை பேசியிலோ நான் கொடுக்கும் முத்தத்தை சிலாகித்து கொண்டாடுவாள்......
நீ ஒரு மந்திரவாதி என்பாள்.........
நான் - ஏன் ??
ஆயிரம் மைல்கப்பால் இருந்து கொடுக்கும் முத்தம் இவ்வளவு வேதியல் மாற்றங்களை உடலில் செய்ய முடியுமா என்பாள்.......
பெரிமிதமாய் உணர்ந்த பொழுதுகள் அவை.......
முத்தங்களுக்கும் அகராதி வைத்திருந்தாள் அவள்.....நெற்றியில் இட்டால் முயல் முத்தம்..கன்னத்தில் இட்டால் மான் முத்தம்.......காமத்தின் ஆரம்பமாக சூடேறிய மூச்சு காற்றுடன் முன் கழுத்தில் இடும் முத்தத்திற்கு புலி முத்தம்....
எதிர்பாரா தருணத்தில் அவள் உதடு பிரித்து கடித்து சுவைக்கும் முத்தத்திற்கு கொக்காயி முத்தம் என்பாள் ............(கொக்காயி- பேய் என்று அர்த்தமாம் மலையாளத்தில்)

இதுதான் காதல் என்று உணர்ந்து அந்த உணர்வைக் கண்டு ஆச்சரியமுற்ற தருணங்கள், பொழுதுகள் அவை......உனது காலை சுற்றி வரும் பூனைக்குட்டி நான் என்று அவள் சொல்லும்போதெல்லாம் ..காதல் மீறி என்னுள் அகங்காரம் பெரும் ஆண்மையை ரசித்தேன்.......

மற்ற சராசரி காதலனை போல கட்டளைகள் இடும் காதலனாக நான் இருக்கவில்லை...அப்படி இருக்க விரும்பவும் இல்லை....அவள் அவளாகவே தான் இருந்தாள்..நான் நானாக.........
காதலர் தினத்தில் அவள் அலுவலக காபினில் குவியும் வாழ்த்து அட்டைகளையும் காதல் தூது தாங்கி வரும் பூங்கொத்துக்களையும் கணக்கெடுத்து கர்வத்துடன் தெரிவிப்பாள் என்னிடம்.......
தேவதைகளை அடைய சாத்தான்கள் சண்டை போடும் எப்போதும் என்பேன்..........நீ கொடுத்து வைத்தவன் என்பாள்......

அன்பின் ஊடாக வீசும் மாய அடிமை வலையோ இது வென்று யோசிக்க வைத்த நிகழ்வுகள் அது...

மாற்றங்கள் தென்பட்டன அவளிடம்...நாட்கள் மாதங்களாகி வருடமான பொழுது....பார்க்காமல் பேசாமல் இருந்தால் மரணம் தொடுவேன் என்று மிரட்டியவள் , மறந்து போனாளோ அவள் மிரட்டலையே???
எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரே ஒருவன் மட்டுமே.அது அவளுடைய நண்பன் விஜய்.....எங்களுக்குள்ளான சில ஊடல் பொழுதுகளில் சமரச படுத்தியவன் அவன்...
தொலை பேசியிலும் மின் மடல்களிலும் பதிலற்ற நிராகரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்க...நேரில் கொச்சி சென்றேன்....
தானே தனது காரை ஒட்டிக் கொண்டு மரைன் டிரைவ் வந்தாள்...
கண்கள் பார்க்காமல் பேசினாள்.....சிறிது நேரங்கழித்து இன்னொரு காரில் வந்த ஒருவன் ஹாய் சொல்லியபடி எங்களை நோக்கி......
தன்னுடைய ப்ராஜெக்ட் மேனேஜர் புருஷோத்தமன் என்று அறிமுகம் செய்தாள்.... என் கண்கள் பார்த்து அவனிடம் காதல் வயபட்டிருப்பதாக சொன்னாள்
நீ வேசி மகள் என்றேன் சப்தமாக.....கிளம்பி சென்று விட்டாள்...கொலை செய்ய வேண்டும் போலிருந்தது அவளை..கொடூரமாக ஏமாற்ற பட்டதை போல் உணர்ந்தேன்....
வலி தாங்கி, மாற்றம் வந்து நான் ஹைதராபாத் சென்று விட்டேன்...(முதற் பத்தியை மறுபடியும் ஒரு முறை படித்து பாருங்கள் ) ஆறிய தழும்பாக இந்நினைவுகள்....யோசிக்க வைக்கும் சில சமயம்....
பிடிக்கவில்லை என்று கணவனும் மனைவியும் பிரிந்து செல்லும்போது.......வேறு காதல் தோன்றியிருக்கிறது என்று நேரிடையாக கேட்ட அவளை இந்தளவிற்கு வெறுக்க எது என்னை தூண்டியது என்று ......
எனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாட அவள் உயிரற்ற பொருள் இல்லை.....ரத்தமும் சதையும் பூட்டிய உயிர் அவள்....காதல் என்பதற்கு வெளிப்படையான மற்றும் மாற்று கருத்துக்களை விதைத்து சென்றவள் அவள்.....





இப்பொழுதும் கடற்கரை.....சென்னையில்....தோள்களில் சாய்ந்தபடிக்கு இருக்கும் பிரபா....
அடுத்த வாரம் காரைக்குடி போறேன் -அவள்
இப்போதானே அப்பாவ அம்மாவையும் பாத்துட்டு வந்தே.....அதுக்குள்ள என்ன??? - நான்

என்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றாள்....
என்னை கல்யாணம் செஞ்சிக்கொயேன் என்றதற்கு .பலமாக சிரித்தாள்.......
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா..ஆனா எங்க வீட்ல உள்ளவங்களுக்கு எங்க ஜாதி மட்டும் தாண்டா பிடிக்கும் என்றாள்....

இறுக்கி அனைத்து அவள் உதடுகளை கவ்விக் கொள்கிறேன்....

செவ்வாய், 8 டிசம்பர், 2009

நிழற்பெண்..

இணையத்தில் இனிதான தொடக்கம் நமது
நட்பு
முகம் கானா உறவில் தோன்றும் அதே குறுகுறுப்பு இங்கும்

உன்னுடைய சக தோழர்களில் ஒருவனாகவே என்னை பார்க்கிறாய்
எனக்கோ
கிடைப்பதற் அறிய நட்பு கிடைத்தது போல்

உனக்கான உன் நேரங்களை உணதனுமதியின்றி
எடுக்கிறேன்
உனது சுதந்திரம் பறிபோகும் என்பதனையரியாமல்

எனக்கென ஒரு தனியிடம் உன் மனதில் உண்டென
எண்ணத்துடன் நான்
இனைய நட்பு இணையத்தோடு மட்டுமே இது நீ

தவிப்புடன் மின் மடல் இடுகிறேன்..பதிலனுப்பாமல்
நிராகரிக்கிறாய்
சிறிய இடைவெளி கலந்த உறவுகளே மெருகேறும் என்று எனக்குனர்த்தவா???


குறிப்பு: இது கவிதைன்னு நானே நினைக்கல....அதனால படிச்சிட்டு பிடிச்சா தட்டி குடுங்க....பிடிக்கலேன்னா ரெண்டு குத்து விடுங்க....! :-) :-) :-)

பணக்கார ஜனநாயகம்...!

நக்சலைட்டுகள் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக பெரிய முட்டுகட்டைகள்...ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள்....அவர்கள் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்கள்......இப்படி எல்லாம் சொல்வது பாரத பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரமும். இந்த கருத்துக்களுக்கு பெரும்பான்மையான வட இந்திய ஊடகங்கள் எண்ணெய் ஊற்றுகின்றன.

நக்சலைட்டுகள் யார். எப்படி அவர்கள் உருவானார்கள். என்ன காரணத்திற்க்காக ஆயுதம் ஏந்தினார்கள். பிரச்னை இதுதான்.முன் சொன்ன கேள்விகளுக்கு ஒரு தெளிவான பதில் அரசிடமும் இல்லை...இறையாண்மை காக்கும் அறிவு ஜீவி அதிகார வர்க்கத்திடமும் இல்லை. சுதந்திரத்திற்கு பிறகான காலத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளும் வர்க்க பிரிவினையும் தீர்க்க படாமல் எண்ணெய் இட்டு ஊற்றி வளர்க்க முற்ப்பட்ட நிலச் சுவாந்தார்களினாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அரசாங்கத்தினாலும் உருவானவர்களே நக்சலைட்டுகள்..

அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறார்கள் இந்த பாட்டாளி வர்க்கத்தின் போராளிகள்....இடையில் நிறைய கருத்து பேதங்கள் மற்றும் கொள்கை சார் மாற்று கருத்துக்கள் கொண்டதாலும் சில குழுக்கள் ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தன....அப்படி தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிதிகளாலும் பெரிய சாதனை எதுவும் செய்ய இயலாமலே போனது...காரணம் ஆதிக்க சக்திகள் அரசாங்கங்களின் இண்டு இடுக்கு வரை செலுத்திய அதிகாரமே.

நக்சலைட்டுகளின் கால்கள் வலுவாக ஊன்ற பட்ட மாநிலங்களை எல்லாம் கணக்கில் கொண்டாலே உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும் தெளிவாக...அது வேறொன்றும் இல்லை...அடித் தட்டு மக்களான தலித்துகள் மற்றும் பழங்குடியினர், விவசாயிகள் நிரம்பிய ஆனால் வளர்ச்சி குன்றிய மாநிலங்களாகவே இருக்கும்.
ஆந்திராவில் தொடங்கும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து மராட்டியம், ஜார்கண்டு, அஸ்ஸாம், பீகார்,ஒரிசா மற்றும் உத்திரப்ரதேசத்தின் சில பகுதிகள் வரை நீள்கிறது..

ஏறத்தாள நார்ப்பதிர்க்கும் அதிகமான மாவட்டங்கள் முழுமையாக நக்சலைட்டுகளின் பிடியில் இருக்கிறது..சுருக்கமாக இப்படி சொல்லலாம்...இந்திய அரசாங்கதிர்க்குள் ஒரு குட்டி அரசாங்கம். நக்சலைட்டுகள் எதற்க்காக இப்படி அரசாங்கத்தை மூர்க்க தனமாக எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால்.....பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் வாழ்வாதாரமான நிலங்களை வரைமுறையன்றி ஆக்கிரமிக்கிறது அரசு...அவர்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்க்காக இது வரை அரசு செய்ததென்ன என்று பார்க்கும் போது நமக்கே வேதனை தான் மிஞ்சும். ஆக்கிரமித்த நிலங்களுக்கு உரிய தொகை கூட தராமல் ஏமாற்றுகிறது அரசாங்கம்...மேலும் காடுகளை நம்பியே வாழ்க்கை நடத்திய பலன்குடியினரை காட்டை விட்டு விரட்டி விட்டு, பன்னாட்டு கம்பனிகளுக்கு அந்த நிலங்களை தாரை வார்த்து கால் நக்கி விட தயாராகிறது அரசு...

பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளான மக்கள் தங்களின் காவலர்களாக பார்ப்பது நக்சலைட்டுகளை மட்டுமே...யோசித்து பார்க்கும் போது ஒன்று புரியும்..மக்களின் ஆதரவின்றி மத்திய இந்தியாவை தங்களின் கைக்குள் வைத்திருப்பது இயலாத காரணம்...அந்த பிடி இன்னும் இன்னும் இறுகிக் கொண்டிருப்பதற்கு காரணமே அரசாங்கம் தான்....அவர்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் வளர்ச்சிக்கு வித்திடாமல் நிலத்தை மட்டும் அபகரித்து கொள்ள முயல்கிறது அரசாங்கம்....சுருக்கமாக சொன்னால் ஜனநாயக போர்வைக்குள் ஒரு ரத்த வெறி மற்றும் பண வெறி பிடித்த சர்வாதிகாரம் கொண்ட இந்திய அரசின் கோரை பற்கள் தெரியும்...மக்களின் ஆதரவை கண்ட அரசாங்கம் இப்போது புதிதாக குண்டர் படை ஒன்றை அமைத்து நக்சளைட்டுகளுக்கேதிராக போரிட வைக்கிறது....இதில் உறுப்பினர்கள் அனைவரும் கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள்...

வல்லரசு என்று சொன்னால் தான் மக்கள் மட்டுமின்றி தான் பிராந்திய மக்கள் நலனையும் முன்னெடுக்கும் நாடே வல்லரசாகும்.... தன் பிராந்தியத்தையே காக்க முடியாமல்....இன்னொரு குட்டி அரசாங்கத்திடம் போரிட்டு கொண்டிருக்கும் இந்தியாவை வல்லரசு என்று வடக்கு ஊடகங்கள் கொண்டாடுகின்றன.......இறையாண்மைக்கு குந்தகம் என்றால் சிலிர்த்தெழும் மேனன்களும் நாயர்களும் நம்பியார்களும்.....பன்னாட்டு நிறுவனகள் என்றால் கோமணத்தையும் பறக்க விட்டு விட்டு....பொத்த வேண்டியதை பொத்தி கொள்வார்கள்......வடக்கில் அரசிடம் பிடிபடும் நக்சலைட்டுகள் விசாரிக்க இந்திய ராணுவம் கொண்டுள்ள விசாரணை கூடம் இலங்கையில் உள்ள சித்ரவதை கூடங்களை விட கொடியது , மோசமானது.....உலகின் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் அங்கு நடத்த படுகிறது...ஆனால் இது வடக்கின் ஊடகங்களுக்கு தெரியாது........தெரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள்......ஏனென்றால் ஊடகங்கள் அனைத்தும் இந்திய அரசின் வீட்டு நாய்கள்.....அவர்களின் கொள்கை பிரசார பீரங்கிகள்....


இறுதியாக....இலங்கையில் அழித்ததை போலவே இங்கும் கூட்டம் கூட்டமாக மக்களை அழித்து நிலங்களை கை பற்றி பன்னாட்டு நிறுவனங்களை குளிரூட்ட அரசாங்கம் முடிவெடுக்கும் என்றே தோன்றுகிறது.......இந்த மாத காலசுவட்டின் மைய கட்டுரையே இந்திய அரசானது நக்சல்கள் மீது தொடுக்க போகும் போரை பற்றியே பேசுகிறது...வர்க்க போராட்டங்கள் ஆயுத பலம் கொண்டு அழிக்கப் பட்டதாக சரித்திரம் எங்கும் இல்லை....அப்படி சரித்திரம் படைக்க இந்திய அரசு எண்ணினால் அதற்க்கு இந்திய அரசு மிக பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும்......அதன் தாக்கத்தை தாங்க இந்திய அரசால் கண்டிப்பாக இயலாது.

சனி, 5 டிசம்பர், 2009

மாவீரன் (கடவுள்) அம்பேத்கர்...!

ஒட்டுமொத்த இந்தியாவின் ஜன தொகையில், நாற்பது சதவிகித மக்களின் எழுச்சி நாயகன்...ரட்சகன்...மற்றும் விடுதலை வீரன் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு நாள் நாளை.

ஆதிக்க சாதி இந்துக்களின் பரம எதிரியாக மேலேறி நெஞ்சை நிமிர்த்தி போராடிய புரட்சிக் காரன்........மிருகங்களை நடத்தும் விதத்தை விடவும் மிக கேவலமான முறையில் ஒரு சாரர் மக்களை மற்றோர் இனம் ...ஆயிரம் ஆண்டிற்கு மேலாகவும் அடக்கி வைத்து வதைத்த போது, தோன்றிய பல புரட்சி காரர்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டு...அவர்களின் சுவடு கூட மற்ற சந்ததியினருக்கு தெரியா வண்ணம் பார்த்து கொண்டனர் ஆதிக்க இந்துக்கள்...நாளா வட்டத்தில் நமது பிறப்பும் வாழ்வும் இப்படி மட்டுமே இருக்கும் என்னும்படியாக முதுகேலும்பற்று அந்த இனம் கூனி போனது....

தாழ்த்த பட்டவர்கள்...தீண்டத்தகாதவர்கள் என்ற அடைமொழியைச் சுமந்த அவ்வின மக்களை கண்களால் காண்பதை கூட வெறுத்தனர் ஆதிக்க இந்துக்கள்...ஊருக்கு வெளியில் ஒதுக்கு புறமான பகுதிகளே இம்மக்களின் வசிப்பிடமாக மாறி போனது...குடிக்க நீரின்றி புசிக்க சத்தான உணவின்றி தவிக்க விட்ட ஆதிக்க சக்திகள்...நீ ஒரு அடிமை...அடிமைத்தனம் மட்டுமே உனக்கு சொந்தம் என்ற உணர்வை அடிமனதின் அடியாளம் வரை ஊன்றியதால் ஆளுமைத் திறன் அற்று சராசரி மனிதனாக கூட வாழ தகுதியற்றவர்களாக ஆக்கப் பட்டனர் அம்மக்கள்....


வரலாறும் கூட ஆதிக்க சக்திகளால் எழுதப் பெற்றதால்...அங்கும் இந்த அடிமையினத்தில் தோன்றி போராடிய பல போராளிகள் வரலாறு புலபடாமலே முடிந்து போனது....தப்பி பிழைத்ததில் நந்தனும், ராமானுஜனும் மட்டுமே....அதுவும் ஏனென்றால் ஆதிக்க சக்திகளின் கடவுளை அவர்கள் வாயார புகழ்ந்ததால்....இன்றும் வாசுதேவனல்லுரில் வாய் வழி பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் புலித் தேவனின் முக்கியமான தளபதிகளில் ஒருவன் அடிமையினத்தில் இருந்தவன் என்பது வரலாற்றில் எங்கும் பதிந்து வைக்க படவில்லை...



ஆதிக்க சாதி இந்துக்கள் எதிரில் வந்தால் உடனே தரையில் படுத்து கொண்டு கும்பிட்டபடியே ஒரு அடிமைனத்தான் இருக்க வேண்டும், அந்த ஆதிக்க சாதி இந்து கடக்கும் வரை....இவர்களுக்கு மேலாடை என்பது கூடாது...இதில் அடிமைனத்தின் பெண்களும் அடங்குவர்...மழை பெய்து தேங்கும் நீரும் வயலுக்கு பாய்ச்சிய நீரும் தான் இவர்களுக்கு குடிக்க கிடைத்தன....தண்ணீர் என்பது அபூரவமாக கிடைக்கும் விஷயமானதால்....குடிக்க மட்டுமே பயன்படுத்த முடிந்தது அம்மக்களால்.....குளிக்க முடியாமல் நாள் கணக்கில் இருப்பதால் அழுக்கான உடையும் துர்நாற்ற உடலுடன் அலையை விடப் பட்டனர் அம்மக்கள்...இந்த வழக்கமே நூற்றாண்டுகளுக்கும் தொடர்ந்தது...



மொத்தத்தில் மிக சாதுர்யமாக திட்டமிடப் பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட மனித இனம் மிக கேவலமாக நடத்தப்பட்டது....நடத்திய ஆதிக்க இந்துக் கூட்டம் கொக்கரித்து மகிழ்ந்தது....இனி இந்த இனம் மிருகங்களோடு மிருங்களாக வாழும் என்றெண்ணிக் கொண்டிருந்த போது புயல் போல கிளம்பினான் ஒரு போராளி....அடிமையினத்தில் இருந்து....ஆணவத்தின் உச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஆதிக்க சக்திகள் ஆடிப் போனார்கள் அந்த போராளியின் சீற்றம் கண்டு.......

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்(1891 ஏப்ரல் 14 - 1956 டிசம்பர் 6 ) மகாராஷ்டிரத்தில் பிறந்த இந்த புரட்சிக்காரன் அடிமையினத்திர்க்கே உள்ள பல அடக்குமுறைகளை எதிர்கொண்டே முன்னேறினான்.....பரோடா மன்னரின் உதவியுடன் உயர்கல்வி கற்ற அம்பேத்கர் ஒட்டுமொத்த தலித் மக்களுக்காக போராடினார்....தலித் மக்கள் ,சாதி இந்துக்கள் புழங்கும் கிணற்றிலும் குளத்திலும் நீரெடுக்கும் போராட்டத்தினை முன்னெடுத்து...உங்களுக்கும் முதுகெலும்பு உண்டடா என்றுனர்த்தினார் தலித் மக்களுக்கு....தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் மிக தீவிரமாக வலியுறுத்தினார்......அதன் விளைவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கும் முறைக்கு வித்திட்டது.....தேசபிதா என்று காந்தியை வரலாறு புகழ்ந்தாலும்...இந்து வெறியன் காந்தி என்ற கருத்தையே கொண்டிருந்தார் பாபா சாகேப்......



“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.



தன்னால் இயன்ற வரை மிக தீவிரமாக தீண்டாமையை எதிர்த்து போரிட்ட பாபா சாகேப்...தான் சாவதற்குள் இம்மக்களை ஒரு படி முன்னேற்றி விட்டு செல்ல வேண்டும் என்றேன்னிக்கொண்டே இருந்தார்....ஒரு மனிதனுக்கெதிராக சக்தி நிரம்பிய கூட்டம்.....இவர் பின்னலோ கூனை நிமிர்த்தி தற்பொழுதுதான் உலகை நோக்கும் கூட்டம்.....பெருவாரியான அவரது கனவு மெய்யாகாமலே உள்ளது இன்றளவும்.....ஒரு கட்டத்தில் மிகவும் மனம் வெறுத்து போய் பௌத்த மதத்தை தழுவினார் பாபா சாகேப்.... 1956 டிசம்பர் 6 அன்று நீங்கா துயிலில் ஆழ்ந்த பாபா சாகேப் பௌத்த சமய முறைப் படியே அடக்கம் செய்யப் பட்டார்....



ஆண்டாண்டு காலமாய் ஆதிக்கம் செலுத்திய வல்லாதிக்க இனங்களை வீறு கொண்டேதிர்த்த மாவீரன் ,புரட்சிக் காரன் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவு தினம் நாளை கடைபிடிக்கப் படுகிறது...தன் இனத்தின் வரலாறுகளையும்...தற்போது உள்ள நிலையும், இவ்வின மேன்மைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்ந்து ஒவ்வொரு தலித் இளைஞனும் ,யுவதியும் இனமுன்னேற்ற பாதைக்கு பொறுப்புணர்ந்து முன்னெடுக்கும் முயற்சிகளும் போராட்டமும் வெற்றிகளுமே...பாபா சாகேப்பின் கனவை நனவாக்கும்...அவரின் ஆன்மா சாந்தியடையும்.ஜெய் பீம்.

வியாழன், 3 டிசம்பர், 2009

திட்டமிட்ட தேசியமும்....வெகுளித்தனமான பிராந்திய நலனும்.

இன்ற காலை பத்திரிக்கைகளில் அந்த செய்தியை பார்த்திருப்பீர்கள். கூடங்குளத்தில் ரசிய நாட்டின் உதவியுடன் மேலும் புதிய அணு உலைகள் அமைக்க இந்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதே அதன் சாராம்சம். இந்திய மிகப் பெரிய கடல் எல்லைகளைக் கொண்ட கூட்டமைப்பு. கடல் நீரை வெப்பப் படுத்தி மிசாரம் தயாரிக்கும் தொழினுட்பத்தை கொண்ட அணுமின் நிலையங்கள் மகாராஷ்டிரம்,கர்நாடகம், தமிழ்நாட்டில், இந்தியாவின் மொத்த அணுமின் நிலையங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

கேரளமும் மேற்கு வங்கத்திலும் கடல் பகுதி இருந்தாலும் அங்கு இன்று வரை எந்த மின் திட்டங்களும் முன்னெடுக்கப் படவில்லை. கல்ப்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கவே அப்பொழுது கடும் எதிர்ப்பு மக்களிடம் இருந்தாலும்..மின் தேவைகளை கருத்தில் கொண்டு அங்கு அமைக்கப்பட்டது...மேலும் இப்போது கூடங்குளத்தில்....இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள இந்த இரு மின் நிலையங்களும் அதிக சக்தி கொண்டவை மற்றும் ராணுவ ஆராய்ச்சி சார்புடைய விஷயங்களும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சுருக்கமாக இந்தியாவின் பொருளாதார அடிநாதமாக, அந்நிய செலாவணியை அள்ளித் தருகிற மாநிலங்கள் என்று பார்த்தால் தமிழகம்,மகாராஷ்டிரம்,மற்றும் கருநாடகம். இங்கு பெறுகிற வளர்ச்சியும்....இந்த மாநிலங்கள் அள்ளி தருகிற அந்நிய வருவாயை வைத்தே மிச்சமுள்ள இந்திய மாநிலங்கள் தங்கள் வளர்ச்சியை பெறுகின்றன....தொழில் துறை வருவாயை விட சுற்றுலாவில் வரும் வருமானம் மிக குறைவே இந்தியாவை பொறுத்த மட்டில்...

இனிதான் விஷயமே....மேற்கு வங்கத்தை பொறுத்த வரை தவறான மைய்ய அரசின் கொள்கைகளினால் அந்த மாநிலம் இன்றும் வளர்ச்சியிலும் கல்வியிலும் மிகவும் பின் தங்கியே இருக்கிறது...ஆனால் கேரளம் அதற்க்கு நேர்மார். அங்கு வளர்ச்சிப் பணிகளும் கல்வியும் மக்கள் வாழ்க்கை தரமும் வளர்ந்த மாநிலங்களுக்கு ஈடானதாகும்....தன் உணவிற்கு கூட வெளி மாநிலங்களை எதிர்ப் பார்த்து காத்திருக்கிற ஒரு மாநிலம் எப்படி தன் மக்கள் நலத்தில் முன்னிற்கிறது என்றால்....அவர்களின் திட்டமிட்ட மாநிலம் மற்றும் தன் பிராந்திய சார்புடைய கணக்குகளுடன் கடை பிடித்த தேசிய கொள்கைதான் காரணம்.

சுதந்திரம் பெற்ற போது,பிராந்திய நலனுக்காக தொண்டை கிழிய தமிழக தலைவர்கள் கத்திக் கொண்டிருக்கும் போது சத்தமில்லாமல் கேரளா மேனன்கள் மற்றும் நாயர்கள் மைய்ய அரசின் முக்கிய பதவிகளில் வந்திருந்தனர்...நேஹ்ருவிர்க்கு அழகான மலையாள சேச்சிகளை அனுப்பி தங்கள் மாநிலம் சார்ந்த வளர்ச்சிக்கு அடிகோல்;இட்டனர்.....நேரு சீனாவை நம்பி கெட்டதுக்கு அப்போதிருந்த ஒரு மேனனே முக்கிய காரணம். அவனின் தவறான கணிப்பால்தான் வலுவான சீனாவிடம் மோதி பல் பிடுங்கப் பட்டது இந்தியா.


அதோடு நிற்கவில்லை இந்த மேனன்கள்...சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்தனர். அதுதான் இன்று தமிழர்கள் உலகரங்கில் நாதியற்று போவதற்கு ஒரு காரணம் ஆகிப் போனது....! 1990 வரை தமிழக மாணவர்கள் பத்து விழுக்காடே தங்களின் பங்களிப்பை மத்திய அதிகார சேர்க்கையில் காண்பித்தனர்....மாறாக மேனன்களின் தொலை நோக்கு திட்டத்தோடு கேரளா மாணவர்கள் அதிகளவில் வெளியுறவுத் துறையில் சேர்ந்தனர்...விளைவு....இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதும் ....இறையாண்மையை காப்பதும் மேனன்களும் நாயர்களும்....அதோடு அல்லாமல் அணுமின் நிலைய திட்டங்களையும் வேற்று மாநிலங்களுக்கு தொலைநோக்கு திட்டத்தோடு மாற்றி விட்டனர்.....அவர்களுக்கென்ன?? அவர்களுக்கு தண்ணீர் தரவும் மின்சாரம் தரவும் அவர்களுக்கு அரிசி தரவும் அண்டை மாநிலங்கள் மையா அரசு மேனன்களால் பணிக்கப் படுகின்றன....


தங்களுடைய கேனை தனமான வெளியுறவுக் கொள்கையால்(இப்பொழுதும் மேனன்களும், நாயர்களுமே..) தற்போது இந்திய கூட்டமைப்பின் அத்தனை எல்லைகளிலும் எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.....எதிரிகளின் முக்கியக் கொள்கையே இந்தக் கூட்டமைப்பின் பொருளாதார கட்டமைப்பை சேதப் படுத்துவதுதான்.....மேலும் அணுமின் நிலையங்கள் முக்கியமான தாக்குதல் கேந்திரமாக பார்க்கப் படுகிறது.....அதற்கேற்றார் போல் இங்கே(தமிழகத்தில்) ரெண்டு அணுமின் நிலையங்கள்....இரண்டும் சக்தி வாய்ந்தவை...ஒன்று வட தமிழகத்தை அழிக்கும்........மற்றொன்று தென் தமிழகத்தை அழிக்கும்.........ஆனால் கேரளம் மட்டும் அணு சேதம் இன்றி அமைதி பூங்காவாக இருக்கும்.காரணம் அங்கு தாக்குதலுக்கான கேந்திரங்கள் என்று ஏதும் கிடையாது.......திட்டமிடப் பட்டு செயல் படுத்தப் பட்ட ஒன்று இது.....


இவ்வளவு ஆபத்தான வகையில் இங்கு மின்சாரம் தயாரிக்கப் பட்டு சத்தமில்லாமல் கேரளத்திற்கு அனுப்பப் படுகிறது......நமக்கோ தண்ணீர் என்று கதறினாலும் அணையை உடைப்போம் என்று கூறுகிறார்களே தவிர தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை.....அவ்வளவு மின் தேவை இருக்கும்பட்சத்தில் கேரளத்தில் அணுமின் நிலையம் அமைக்கலாமே என்று ஒரு கேள்விக்காக கூட யாரும் கேட்க முடியாது....கேட்டால் உலக வங்கிக் கடனில் உங்கள் பகுதிக்கு வர வேண்டிய பணம் தடுத்து நிறுத்தப் படும், ஐ.நாவில் பணியாற்றும் நம்பியார்களினாலும் மேனன்களினாலும்.



தொழில் துறையிலும் மொழிக் கொள்கையிலும் நாம் தனித்து காண்பிக்க பட்டாலும்...வீரமா அல்லது வெகுளித்தனமா?? அல்லது நரித் தனமா??? என்று தெரியாத ஏதோ ஒன்றினால் நமது தலைவர்களின் தொலை நோக்கு பார்வை சற்று மங்கியே போய்விட்டது என்றே சொல்ல வேண்டும், சர்வதேச அரங்கிலும் இந்தியாவிலும் தற்போதைய தமிழனுக்கு உள்ள நிலை கொண்டு....

காலத்தின் மாற்றங்களை யாராலும் கணிக்கமுடியாது.....இரும்புக் கோட்டை ரசியாவே தூள் தூளாகிப் போனது....நூல் கண்டுகளைக் கொண்டு இணைக்கப் பட்ட இந்தியா எம்மாத்திரம்???? அப்படி ஒரு நிலை வரும்போது சோமாலியாவை விட மோசமான நிலைக்கு கேரளா போகலாம்.