செவ்வாய், 10 நவம்பர், 2009

பெண்ணடிமை...???

தலைப்பைப் போல எங்கும் கேட்க்கும் சம காலக் குரல்கள். வளரும் நாடுகளில் சற்று சன்னமாக, வளர்ந்த நாடுகளில் சற்று வீரியமாக...நிற்க. பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி ஆணாக உள்ள ஒருவனால் எப்படி விளக்க முடியும் என்று போர்க் கோடி தூக்க வேண்டாம்....சுடுமண் தரையிலும் தார்ச் சாலையிலும் வெற்று கால்களுடன் நடந்ததாலேயே காய்ச்சி போன ,தொட்டால் கைகளை அறுக்கும் கூரான பித்த வெடிப்புகளைச் சுமந்த கால்களும்...நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் ஆண்களுக்கு ஈடாக உடலுழைப்பில் இறுகிப் போன தேகமும்....கல்,மண் ,களை,மலம், குப்பை, சுமந்து இரும்பாய்ப் போன கைகளும்....உடர்க் கலவிக்கு மாற்றுச் சொல்லான காதல் அன்பு போன்ற சொற்களைக் கடந்து போகின்ற ,அவ்வுனர்ச்சிகளுக்கு ஒரு சிறு அர்த்தத்தைக் கூட கொடுக்காமல் வாழ்வின் அடுத்த நொடிகளுக்குள் நுழையும் வேகத்தோடு அனுதினமும் போராடும் ஒரு சராசரி தலித் பெண்களின் மீது படிந்துள்ள பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி பேசவே இந்தப் பதிவு.

வலைப் பதிவில் பரவலாக பெண்ணடிமை எதிர்ப்புகள் இருந்தாலும் அதில் தலித் பெண்ணியம் பற்றியக் கருத்துக்கள் காண இயலவில்லை எங்கும்... ( நான் தேடித் பார்த்த வரையிலும்).

எதற்கு தலித் பெண்ணியம் என்று பிரிவினைப் படுத்துகிறாய், நாங்கள் போராடுவது அனைத்துப் பெண்களுக்காகவும் மட்டுமே என்று சொல்பவர்களுக்கு முதற் பத்தியே விடை சொல்லி விடும்.

தலித்தியம் சம கால இலக்கியத்தில் ஒரு தனிக் களமாகவே பாவிக்கப் படுவதற்கு காரணம் ஒரு தலித்தால் மட்டுமே அவனுடைய உணர்வுகளை சமுதாயதிர் பால் உள்ள கோபங்களையும் குறைகளையும் வெளிப் படுத்த இயலும். வேறு யாராலும் அவ்வகையில் வெளிப் படுத்த இயலாது. அதைப் போலவேதான் தலித் பெண்ணியமும்.வேறு பெண்களால் அவர்களின் பார்வையை புரிந்து கொள்ளவியலாது.

ஒட்டு மொத்தமாக தலித் இனமே அடிமைச் சாதி என்று அடிமைப் படுத்தி வைத்திருக்கும் போது....அவ்வினத்தில் உள்ள ஆண்கள் தலித் பெண்களை அவர்கள் சார்ந்த ஆணாதிக்க போக்கோடு நடத்தப் படும் அப்பெண்களின் அடிமைத்தனம் ரணம் மிகுந்தது. சாதி இந்துப் பெண்களுக்கு உள்ள அடிமைத்தனம் சமுதயாத்தில் உள்ள மொத்த ஆண் வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதாக அமைந்துள்ளது. ஆனால் தலித் பெண்களுக்கோ சாதி இந்துப் பெண்களும் ஆதிக்க வர்க்கம் ஆனதுதான் கொடுமை.

கடைநிலை வேலைகள் அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக அசாத்திய உழைப்பை வெளிப் படுத்தும் இப்பெண்களுக்கு அவர்கள் வாங்கும் கூலியில் இருந்து அவர்கள் கற்பு
வரை கொடுக்கப் படும் மரியாதை மிகவும் மலிவானது..கொடுமையானது..! ஆனாலும் குடும்பத்தை நகர்த்தி செல்வதில்,குடும்பப் பொருளாதாரத்தை முன்னெடுத்துப் போவதிலும் இவர்களின் பாங்கு போற்றுதலுக்குரியது. ஆய்வு நடத்திப் பார்த்தால் இக்குடும்பகளில் ஆண்களின் கூலிகள் அனைத்தும் சாராயக் கடைக்குப் போக மீதமுள்ளதாகவே இருக்கும்....ஆனால் பெண்களின் கூலியே அவர்கள் குடும்பத்திற்கு உண்டான அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும்...அரசுப் பள்ளிகளில் பயிலும் அவர்களின் குழந்தைகளின் குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்வதற்கும் எதுவாக இருக்கும்.

பொதுவாக சாதி இந்துப் பெண்களின் மத்தியில் தலித்ப் பெண்களைப் பற்றி இப்படி ஒரு கருத்து இருக்கும்- தெருச் சண்டை போட்டுட்டே இருப்பள்க....! போராட்டமான வாழ்க்கை மத்தியில் வாழ்வாதாரங்களைத் தேடி ஓடும் போராட்டத்தில் உள்ள அப்பெண்களிடம் மென்மையான போக்கை எதிர்ப் பார்ப்பது நகைப்புக்குரிய விடயம். மேலும் இவ்வளவு முரடாக அவர்கள் இருந்த போதிலும் ஆதிக்க வர்க்கத்தினால் அடக்கித்தான் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

தலித் விடுதலை என முழங்கும் தலித் தலைவர்கள் யாரும் அவ்வினப் பெண்களைப் பற்றி....அவர்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வாயே திறப்பதில்லை...மேலும் அவ்வினத்தில் இருந்து எந்த பெண் விடுதலைப் போராளியையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர முனைவதில்லை. பெண்களின் முன்னேற்றமே ஒரு சமூகத்தை முன்னேற்றும்.....அந்தச் சமூகமே நாட்டை வளப்படுத்தும்...(உதாரணம் -மேற்க்கத்திய நாடுகள்....தற்ப்போது இரான் )

ஆனால் மிகவும் விசித்திரமான....இன்று பெண் விடுதலை விரும்பிகள் கனவில் காணும் விடயங்கள் இக்குடும்பங்களில் சாதரணமாக நடக்கும். அதுதான் ஆண்களின் மீதான பெண்களின் வன்முறை....இங்கு பெண்கள் ஆண்களை அடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகவே இருக்கும்....அதை ஆண்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பெரும்பான்மையாக....காரணம் அப்பெண்கள் இல்லைஎன்றால் இவர்களால் சுதந்திரமாக சாரயம் குடிக்கவும் அதே சமயம் குடும்பப் பாரத்தை சுயமாக சுமக்கவும் முடியாதென்பதே.

பாலியல் ரீதியாக இப்பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வலையில் ஏற்றினால் வலைப் பதிவிற்கே வராமல் ஓடிப் போய் விடுவார்கள் இங்குள்ள பெண்ணியம் பேசும் பெண் வலைப் பதிவர்கள். இவ்வளவையும் தாண்டி இன்றும் லட்சக் கணக்கான தலித் குடும்பங்கள் வாழ்க்கைப் போகிறதென்றால் அது இந்த பெண் போராளிகளால்தான்.(பொருளீட்டுவதற்கு போராடுவதும் போராட்டமே....அதலால் அவர்கள் போராளிகளே...)
அதனாலேயே இப்பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அளவற்ற காதலும் உண்டு.

இறுதியாக...தலித் பெண்கள் விடுதலயிலிருந்தே அவ்வினத்தின் மேன்மைக்கு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட வேண்டும்...அரசாங்கங்கள் தீட்டுகிற இவர்களுக்கான முன்னேற்ற முயற்ச்சிகளில் பெண்களுக்கே முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். அதுவே அவர்கள் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் எடுக்கின்ற அரோக்கியமான முயற்சியாகும்.

இப்பதிவைப் படித்துவிட்டு உங்களுக்கு தெரிந்த ஒன்றிரண்டு முன்னேறிய தலித் குடும்பகளை இப்ப்ரசினையில் பொருத்திப் பார்த்து அவர்களெல்லாம் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லிச் செல்ல வேண்டாம். லட்சோப லட்ச தலித் பெண்கள் இப்பதிவில் வரும் வாழ்வையே இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்திடமே ஏராளமான ஆவணங்கள் உள்ளன.

2 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

நான் குற்ற உணர்ச்சியோடு தான் இதைப்படிக்கிறேன்.
வலைத்தளத்தில் இப்படிக்குரல் கேட்க தெம்பாக இருக்கு லெமூரியன்.

லெமூரியன் சொன்னது…

சுய உதவிக் குழுக்கள் கூட அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தோடு செயல் படுகிற இவ்வேளையில் தலித் பெண்களின் முன்னேற்றம் குறித்து தீட்டப் படுகிற திட்டங்கள் எந்தளவிற்கு அப்பெண்களைப் போய் சேரும் என்பது ஐய்யமாகவே உள்ளது..