சனி, 21 நவம்பர், 2009

பால்யக் காதல்..????

உங்களில் எத்துனைப் பேருக்கு உங்கள் சிறு வயது நியாபகங்கள் மனதிர்ப் பதிந்து போயிருக்கும் என்று தெரியவில்லை...ஆனால் இந்தப் பதிவைப் படிக்கும் போது சிறிதாக ஏதாவது உங்கள் மனதின் அடியாழத்தில் கிளர்ந்தெழுந்தால் உங்கள் பால்ய காலத்தை ரசித்து வாழ்ந்திருக்ரீர்கள் என்று கொள்ளுங்கள்.

பால்யக் காலம் என்றால் புரியும் ...ஆனால் பால்யக் காதல்??? உடனே பதின் வயதுகளைப் பற்றி எழுதப் போகிறேன் என்றெண்ண வேண்டாம் என் மனதைப் பாதித்த எனது வாழ்வில் ஒளியேற்ற வந்த சில தேவதைகளின் மீதான எனது காதலே இது. இங்கே கண்டிப்பாக காதலைப் பற்றி நான் சில வரிகள் சொல்ல வேண்டும்...இல்லாவிடில் இந்தப் பதிவின் நோக்கத்தை கொச்சையாக பார்க்கிற வக்கிர கண்ணோட்டம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
இதற்கு முன் ஒரு பதிவில் சொன்னது போல காதல் ஒரு உணர்வுப் பூர்வமான விஷயம். உணர்வுகளால் ஈர்க்கப் பட்ட , இணைந்த , இணையத் துடிக்கிற இதயங்களின் சேர்க்கையை யோசிக்காமல் காதல் என்று சொல்லலாம். உணர்வுகளுக்கு மட்டுமே அங்கு முக்கியதுவம் காட்டப்படும். வயது,நிறம்,பணம்,ஜாதி,மதம் போன்றவைகளுக்கு அப்பார்பட்டது இந்தக் காதல்.

ஆங்கில நர்சரிப் பள்ளியில் தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கினேன். எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் படிப்பென்பதை அறியாமலே கடந்து போனது. நான் ஒழுங்காக படிக்காமல் இருந்தால் கூட பரவாஇல்லை...ஆனால் சேட்டைகளுக்கும் குறை வைக்காமல் இருந்தேன்...அதனாலேயே என் ஆசிரியைகளுக்கு என்னை பிடிக்காமல் போனது....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை அடிவெளுத்தெரிந்து விடுவார்கள்...அதனாலேயே படிப்பென்பது பணங்காயக தெரிந்தது...(அப்போவே..) இந்த நிலையில் தான் முதல் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்தேன்.

என் வாழ்வின் முதல் காதலையும் இங்குதான் கண்டேன்...! ரோஜா நிற குடைக்குள் மல்லிகை ஒன்று நடந்து வருவது போலதான் இருக்கும் அவர்கள் குடை பிடித்து வருவது...! என் முதல் வகுப்பு ஆங்கில ஆசிரியை. பெர்சியுஸ் என்பது அவர்கள் பெயர். இப்பொழுதும் மனதை விட்டு அகலாத முகம் அவர்களுடையது...! பேரழகு+ ஒரு குறும்பு கலந்த சிரிப்பு... இதுதான் பெர்சியுஸ். அப்பொழுதான் கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள்.
வழக்கம் போல் நான் கடைசி வரிசையில் போயமர்ந்து கொண்டேன்.(தீர்க்கதரிசி...!) அப்பொழுதெல்லாம் பாட புத்தகங்களை பைண்டு செய்யும் வழக்கம் இருந்தது,புத்தகங்கள் கிழிந்து விடாமலிருக்க. சற்று வித்தியாசமாக என் தந்தை அனைத்து பாட புத்தகங்களையும் சேர்த்து ஒரே ஒரு பைண்டு செய்து தந்தார். பார்க்க அது ஒரு பெரிய லிப்கோ டிக்சனரி போலிருக்கும்.

முதலாம் வகுப்பின் முதல் நாள் முதல் பாட வேளை பெர்சியுசுடயது. ஏனோ அவர்களை பார்த்த உடன் மற்ற ஆசிரியைகளிடம் தோன்றும் பயம் தோன்றவே இல்லை. மாறாக அவர்களுடைய குறும்புச் சிரிப்பின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதாகவே உணர்ந்தேன். என்னையுமறியாமல் புன்னைகை பரவிய முகத்துடன் அந்தப் பொழுது இப்பொழுதும் மனதில் ஓடி மறைகிறது.. புது வகுப்பு புது ஆசிரியர் என மொத்த வகுப்பும் மிரட்சியோடிருக்க நான் மட்டும் உற்சாகமாக இருப்பதைக் கண்ட பெர்சியுஸ் நேராக என்னிடம் வந்தார்...வகுப்பில் மாணவர் பெயர் கேட்கும் படலம் என்னிலிருந்தே தொடங்கியது. கடைசியாய் அமர்ந்திருந்த என்னிடம் இருந்து முதல் முதலாக ஒரு முதல் தொடங்கியது என்னை உற்சாகத்தின் உச்சத்தில் நிற்க வைத்தது...என்னை அங்கீகரித்த பெர்சியுஸ் என் தேவதை ஆகி போனது.அதன் பிறகான நாட்களில் ஆங்கிலம் என் தாய் மொழி போலானது. என் தேவதையிடம் நற்சான்று பெற நாயாக உழைக்க ஆரம்பித்தேன். கை மேல் பலனிருந்தது..ஆங்கிலத்தில் என்னை அடித்துக் கொள்ள ஆளில்லாமல் போனது என் வகுப்பில். என்னை முதல் வரிசையில் அமரும்படி தேவதை கேட்டது...! எனக்குள்ளிருந்த சாத்தான் மற்றைய ஆசிரியைகளின் முகங்களை என் மனக்கண்ணில் ஓட விட்டதால் உறுதியாக மறுத்து விட்டேன்.

அதன்பின் பெரும்பாலும் என் புத்தகத்தைதான் வகுப்பெடுக்க வாங்கிச் செல்லும் என் தேவதை..அப்படி வாங்கிச் செல்லும்போது என் புத்தகத்தை தன் தலையில் வைத்து வடை விற்கும் பெண் போல் கூவி கேலி செய்யும். கரும்பலகையில் எழுதிப் போட்டு விட்டு என்னருகே வந்தமரும் தேவதை. என் கை பிடித்து என் கையெழுத்தை அழகாக்கியது. சத்தியமாக என்னால் என் தாய்க்குச் சமமாக வைத்துப் தேவதையை பார்க்க முடியவில்லை...என் சகோதரியாகவும் பாவிக்க என் மனது ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தோழியாக வைத்துப் பார்த்து மனது குதுகலித்தது.இருவரின் உலகமும் ஈடுகட்ட முடியாத அளவு வேறுபாடுகளைச் சுமந்திருந்தாலும் ,தேவதையின் உலகத்தினுள் இன்னும் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பெரிய மனுஷ தனத்தோடு செய்த காரியங்கள் தேவதைக்கு சிரிப்பையே வரவழைத்தது.
பள்ளி முடிந்த பிறகு தினமும் தேவதையின் வீட்டிற்க்கு சென்று விட்டு பின்பே என் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். அத்தனை பேர் வகுப்பில் பயின்றாலும் தேவதை என்னிடம் மட்டுமே ஒரு வித பாசம் கொண்டிருந்ததென்பதை உறுதியாகக் கூற முடியும் என்னால். அம்மாவிடம் அனுமதி வாங்கி ஞாயிற்றுக் கிழமைகளில் தேவதையுடன் வேதக் கோவிலுக்குச் செல்வது சொர்கத்துக்கு செல்வது போலிருக்கும் எனக்கு. அமைதியாக கண்கள் மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் தேவதையை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். தேவதையின் நட்பால் மற்ற ஆசிரியைகளும் கொஞ்சம் கனிவாக நடந்து கொண்டார்கள் என்னிடம். ஒன்றாம் வகுப்பு இறுதியில் தேவதை திடீரென்று பள்ளிக்கு வரவில்லை...தேவதையின் வீட்டிற்க்கு சென்றேன்..வரவேற்ற தேவதை இனி பள்ளிக்கு தான் வரப் போவதில்லை என்றது என் கண்களை ஊடுருவியபடி...

கண்கள் மறைக்கிரளவிர்க்கு நீர் கொட்டிக் கொண்டே இருந்தது..சிரித்துகொண்டே என்னை தேற்றினார்கள் தேவதையின் பெற்றோர். நெற்றியில் அழுந்தி ஒரு முத்தமிட்டது தேவதை. ஒரு வாரம் கடுமையான காய்ச்சல் வந்து படுத்து விட்டேன். மீண்டும் பள்ளிக்கு போன போது தெரிந்தது...கல்யாணம் என்ற பெயரில் என் தேவதை என்னிடம் இருந்து களவாடபட்டது.
மீண்டும் பழைய நிலைக்கு சென்று விட்டேன்...! படிப்பு மங்கி சேட்டைகள் அதிகரித்தது. சில காலம் வரை பார்க்கிற இடமெங்கும் தேவதையை தேடிக் கொண்டிருந்தேன்...பின்பு தேடலும் தொலைந்து போனது.

என்னுடைய உணர்வுகளுக்கு பெயர் சூட்ட உங்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது....உங்களைப் பொறுத்த வரைக்கும் அந்த உணர்வுக்கு எந்த பெயர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்...என்னைப் பொறுத்த வரை அது என் முதற் காதல். இப்போதும் என் தேவதை பெர்சியுஸ்.
காலச் சக்கரத்தின் வேகமான சுழற்சியில் பத்தாம் வகுப்பை எட்டியிருந்தேன். ஆங்கில வழிப் பள்ளி என்றாலும் விவரம் தெரிந்த. வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்டிருந்த மாணவர்களை தனியாக பிரித்து ஒரு வகுப்பில் போட்டு விட்டார்கள். அந்த வகுப்பிலும் வளர்ச்சி மற்றும் இதர குணநலன்கள் கடைசி வரிசையே எனக்கு ஒதுக்கப் பட்டது. தேவைகள், ரசனைகள், பெண்ணைப் பற்றிய பார்வைகள், முரண்பட்ட சமூகக் கண்ணோட்டம் என்று நரம்பை முரிக்கிக் கொள்ளும் பதின் வயதுக்குள் வாழ்ந்த பருவம் அது.

எதாவது வித்தியாசமாக செய்து சுற்றிருந்தவர்களின் கவனம் என் மீது படிய வைப்பதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றதால்...எப்பொழுதும் ஒரு நண்பர் கூட்டத்தின் ஊடே இருந்தேன். எதையும் ஒரு முரட்டுதனத்தோடு அணுகும் முறையே கொண்டிருந்தோம் நண்பர்களைனைவரும். பள்ளியின் தாளாளர் எங்களைவரையும் கூப்பிடு இந்த வருடம் முடிந்த பிறகு உங்களுக்கு இந்த பள்ளியில் இடம் கிடையாது கண்டிப்பாக என்று சொல்லிவிட்டார். ஏதோ ஒரு பெரிய வெற்றியை சாதித்து விட்டதாக அன்று இரவு நண்பர் கூட்டம் அனைத்தும் பீர் குடித்து மகிழ்ந்தது...தோம்..! இப்படி சென்று கொண்டிருந்த வாழ்வில் புயல் போல் நுழைந்தது ராதா. கல்லூரி செல்லும் பெண்ணைப் போலதான் இருந்தது பார்ப்பதற்கு..அறிவியல் ஆசிரியைக்கு திடீரென்று ஒரு அறுவை சிகிச்சைக்காக விடுப்பு எடுத்துக் கொண்டதால் அந்த பணிக்கு ராதா. பேரைக் கேட்டு ஒரு வயதான பெண்மணிதான் வரபோகிரதென்றேன்னிக் கொண்டோம். சத்தியமாக இப்படி ஒரு இளம் யுவதியை அதுவும் இந்த வகுப்புக்கு எப்படி என்று வியந்து மாய்ந்து போனோம். பின்புதான் முழு பெயர் அனு ராதா என்று தெரிந்தது. வகுப்புக்குள் ஒரே களை கட்டத் தொடங்கியது. வகுப்பாசிரியர் வந்து அந்த பெண்ணிடம் வாலாட்டினால் டி.சி கிழிக்கப்படும் என்று எச்சரிக்கை இட்டு சென்றார்.


,மற்றைய புது ஆசிரியர்கள் போலவே இவரும் இருப்பார் என்ற அனுமானத்தை முதல் வகுப்பிலே தகர்த்தெறிந்தார். நான் உட்பட கடைசி வரிசை நண்பர்களனைவரும் முதல் வகுப்பிலேயே வெளியேற்றப்பட்டோம். அனு மீது ஆத்திரமாக வந்தது. அதன் பிறகு அணுவின் வகுப்பை புறக்கணித்து எதிர்ப்பு காண்பித்தோம்..சளைக்காமல் எங்களை தலைமை ஆசிரியரிடம் அனுப்பி வைத்தது .. குறிப்பாக என் மீது தாளாத சினம் காட்டியது அனு...! அதன்பின் ஒட்டுமொத்த வகுப்பும் அனுவிற்கு எதிராக வெடிக்க...சற்று கீழிறங்கி வந்தது அனு...ஆனால் எப்பொழுதும் ஒரு இனம் தெரியாத சோகம் அல்லது கோபம் கலந்த முகத்துடனே தான் அனு இருந்தது. அப்போது விகடனின் திவீர ரசிகன் நான் ...புத்தகம் வந்த உடனே வாங்கி பள்ளி புத்தகங்களுக்கிடையில் வத்து பள்ளியிலேயே படித்து விடுவேன்.


அப்படி ஒரு விகடனில் வந்த தபு-சங்கரின் கவிதையை சிலாகித்து படித்து அதை வகுப்பின் கரும்பலகையில் எழுதி விட்டேன். வகுப்புக்கு வந்த அனு,கவிதையை பார்த்தது..பின்பு எங்களை பார்த்து யார் இப்படி எழுதியதென்றது? கவிதையை கூட ரசிக்கத் தெரியாத ஜென்மமா என்று வெறுப்புற்று..நான் முன்சென்றேன். முதன் முறையாக என்னைப் பார்த்து சிறு நகை ஒன்றை உதிர்த்த படியே சொல்லியது கவிதை அற்ப்புதமென்று, அது தபுவின் கவிதை என்றேன் ..விகடனில் வெளியானதை சொன்னேன். கேலியாக சிரித்து பின்பு வகுப்பை ஆரம்பித்தது.

அன்று வெள்ளிக் கிழமை. வெள்ளியன்று கோவிலுக்குச் செல்வது அப்பொழுது பொழுதுபோக்கு. தெய்வத்தை தரிசிக்க அல்ல தேவதைகளை தரிசனத்திற்காக.கூட்டத்தின் நடுவே யாரோ என்னை உற்று பார்ப்பதை உணர்ந்து திரும்பினால் அனு. தோழிகளோடு வந்திருந்தது. அன்று அனு நிறைய பேசியது என்னிடம்...கதை கட்டுரை கவிதை என்று பேச்சு நீண்ட போது அனுவின் மீது ஒரு நட்பு தொடங்கியிருந்தது. அதன் பிறகு வகுப்பில் உற்சாகம் கொப்பளித்தது. பார்த்த வயது வந்தோருக்கான திரைப் படம் முதல் பெண்களை சைட் அடித்த கதை வரை அனுவிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்கு பிறகு மதுரையில் இருக்கும் என் நண்பனின் அண்ணனிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பில் அவருடைய நண்பர் தன காதலியை மீட்டுச் செல்வதற்காக வருவதாகவும் அவருக்கு தேவையான உதவி செய்யுமாறும் கேட்டிருந்தார்.

அண்ணனின் நண்பரை திருநெல்வேலியின் மையப் பகுதியிலே தங்க வைத்தோம். பெண்ணின் பெயர் மற்றும் முகவரி அவரிடத்தில் இருந்தது. பெண்ணின் பெயர் ரூபி என்றும்...மதுரையில் கல்லூரியில் அவருடன் உடன்பயின்றவறேன்பதும் தெரிந்து கொண்டோம். இரு வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து அப்பெண் வீட்டார் அந்தப் பெண்ணை இங்கு பாதுகாப்பு கருதி விட்டுச் சென்றதாகவும் சொன்னார்.


அது ஒரு ஞாயிற்று கிழமை மாலை..பெண்ணின் வீடிருந்த என்.ஜி.ஒ காலனி சென்றோம். பெண் வீடிற்கு சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு பெண்ணின் வீடிற்கு யார் செல்வது எப்படி பெண்ணை சந்திப்பது என்று முடிவெடுத்து இறுதியாக நானும் நண்பன் அருணும் செல்லும் படியானது. வீட்டினுள் சண்டே ஸ்பெஷல் திரைப் படம் ஓடிக் கொண்டிருந்தது...மொட்டை மாடியில் நைடிடன் உலவிக் கொண்டிருந்த பெண்தான் நாம் தேடி வந்த பெண்ணாக இருக்கவேண்டும் என்ற கணிப்போடு மேலே சென்றோம்...ரூபி என்று பேர் சொல்லியளைத்தால் திரும்பிய அப்பெண்ணை பார்த்து அதிர்ச்சியின் உச்ச்சத்திர்க்கே சென்றோம் நானும் அருணும்....வேறு யாருமல்ல அனு தான்....அனுவும் எங்களை அங்கு எதிர் பார்க்கவில்லை...அடுத்த நொடியே நைட்டியுடன் அணுவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து காரில் ஏற்றினோம்....

எல்லாம் சுபமாக திருசெந்தூர் கோவிலில் முடிந்த போது அனு என் கைகளை இறுக பற்றிக் கொண்டது.....ஏதோ பேச முயற்சித்தது...ஆனால் வார்த்தைகள் இல்லை.
எனக்கும் கூட.

4 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

கொஞ்சம் துணிச்சலாக குடைக்குகீழ் முளைத்த பூக்கள் அதுவும் ஆசிரியப்பூக்கள் பற்றிப்பேசியது அருமை.
லேசாக பாலுமஹேந்திரா வாசம் அடித்தாலும். சேவியர்ஸ் அல்லது ரோஸ்மேரி நினைவுகள் அலாதியாக இருக்கு
ரமேஷ். இன்னும் கூடச் சுருக்கியிருக்காலாம். இது ஆசை தான். எனக்கும் சொல்லப்பட்ட ஆலோசனை. ஆனாலும் அதனதன் இயல்பே அழகு. முதலில் இறுதிவரி படிக்கிற கெட்ட பழக்கம் உடையவன் நான். 'எல்லாம் முடிந்து அனுவின் கைகள் பற்றியது' எனப்படித்ததால் வேறு முடிவுக்கு வந்தேன். அது ட்விஸ்டாகிவிட்டது. அருமை ரமேஷ் வாழ்த்துக்கள்.

லெமூரியன்... சொன்னது…

\\லேசாக பாலுமஹேந்திரா வாசம் அடித்தாலும்//.....
:-) :-)

\\சேவியர்ஸ் அல்லது ரோஸ்மேரி நினைவுகள் அலாதியாக இருக்கு....//
:-) :-)
\\இன்னும் கூடச் சுருக்கியிருக்காலாம்...//
கண்டிப்பா அண்ணா....நானும் அதேதான் நினைத்தேன்.

\\ முதலில் இறுதிவரி படிக்கிற கெட்ட பழக்கம் உடையவன் நான். 'எல்லாம் முடிந்து அனுவின் கைகள் பற்றியது' எனப்படித்ததால் வேறு முடிவுக்கு வந்தேன். அது ட்விஸ்டாகிவிட்டது....//
ஹா ஹா ஹா....ரசித்து சிரித்தேன் அண்ணா.

கருத்துரைக்கு மிக்க நன்றி காமராஜ் அண்ணா..! உங்களுக்கு உங்கள் பால்ய கால நினைவுகள் வந்து போனதா இல்லையா என்று சொல்லவில்லையே அண்ணா??! :-(

காமராஜ் சொன்னது…

என்ன அப்படிக்கேட்டுவிட்டாய் ரமேஷ் .

அழியாதகோலங்கள் அலைக்கழிக்காத பால்யப்பருவம் எப்படி சாத்யம் ?.

எத்தனை முறை நீலாம்பிகை டீச்சரின் குடையும் வயர்க்கூடையும் சுமக்க சண்டைவந்திருக்கிறது.

அந்த பாண்ட்ஸ் பவுடர் வாசத்தோடு அவர்களின் பின்னால் நடந்த காலங்கள் வந்து போனது ரமேஷ்.

லெமூரியன்... சொன்னது…

ஹா ஹா ஹா....கேட்க்கும் போதே மனது குதுகுலம் அடைகிறது...!
குடைக்குள் ரோஜாவாக வெயில் படாமல் வந்து செல்லும் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு வராமல் அந்த பால்ய வயதை கடப்பது முடியாத காரியம் தான்.!

பதிவின் நோக்கம் நிறைவேறியது அண்ணா..! :-)